திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அரசுப் பள்ளியில் இலவச 'லேப்-டாப்'கள்
மாயமானதற்கு, தலைமை ஆசிரியை சம்பளத்தில் பிடித்தம் செய்யும் உத்தரவிற்கு,
மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
நத்தம்அருகே கோசுக்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி ஸ்டெல்லா பாய் தாக்கல் செய்த மனு:
மாணவர்களுக்கு இலவசமாக வழங்க, பள்ளியின் ஆய்வக குடோனில் 61 'லேப்-டாப்'களை பாதுகாத்து வைத்திருந்தோம். ஆளுங்கட்சி நிர்வாகிகள் வழங்குவர் என்றனர். 2013 ஜூலை 25இரவு 26 'லேப்-டாப்'கள் மாயமாகின. பள்ளி வாட்ச்மேன், நத்தம் போலீசில் புகார் செய்தார். பள்ளிக்கல்வி இயக்குனர், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தேன். உங்கள் மீது ஏன்நடவடிக்கை எடுக்கக்கூடாது? என நோட்டீஸ் அனுப்பினர்; விளக்கமளித்தேன்.
எந்தெந்த பள்ளிகளில் 'லேப்-டாப்'கள் திருடுபோனதோ, அதற்கு ஈடாக சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால், அதில் யாரிடம் பிடித்தம் செய்ய வேண்டும் எனகுறிப்பிடவில்லை. முதன்மைக் கல்வி அலுவலர், ' லேப்-டாப்'கள் மாயமானதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்கவேண்டும். அதற்குரிய தொகையை செலுத்த வேண்டும்,' என உத்தரவிட்டார்.
இரவில்தான், சம்பவம் நடந்தது.'லேப்-டாப்'களை யார் பராமரிப்பில் வைத்துக்கொள்வது என்பது பற்றி, தெளிவான உத்தரவு இல்லை.எனது தரப்பு விளக்கத்தை கருத்தில் கொள்ளவில்லை. முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவிற்கு,தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், மனு விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார். மனுதாரரிடம் சம்பள பிடித்தம் செய்யும், முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிற்கு தடை விதித்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக