சனி, 12 ஏப்ரல், 2014

வழக்குகள் விரைந்து முடித்துவைக்கப்பட தீர்வு என்ன?

வழக்குகள் விரைந்து முடித்துவைக்கப்பட தீர்வு என்ன?
-நீதியரசர் சந்துரு ( ஓய்வு)

கடந்த மார்ச் இறுதியில், சென்னை ஐகோர்ட்டில் மட்டும் நிலுவையில் இருந்த வழக்குகள் ஏறத்தாழ, 5.75லட்சம். 2013 மார்ச் இறுதியில், ஏறத்தாழ, 5.25 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன.அதாவது, 2013 - 14ஆண்டில் ஐகோர்ட்டில் (மதுரை அமர்வு உட்பட) பைசல் செய்யப்பட்ட வழக்குகளை தவிர்த்து, மேலும், 50,000வழக்குகள் கூடியுள்ளன என்பதை தான் இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இதே போல, கீழ்கோர்ட்டுகளில், ஏறத்தாழ, 50 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் எல்லாம்,எப்பொழுது தீர்க்கப்படும் என்ற கேள்விக்கு, யாரிடமும் பதில் இல்லை. நிலைமை எவ்வாறு உள்ளது என்றால், புது வழக்குகளை அனுமதிக்கவில்லை என்றாலும், தற்போது, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை பைசல் செய்யவே கிட்டத்தட்ட, 100 ஆண்டுகளுக்கும் மேலாகும்!நிலுவையில் உள்ளவழக்குகளை விரைந்து முடிப்பதற்கு, ஆலோசனை கூற, பல கமிஷன்களின் அறிக்கைகளும், பல விவாதமேடை கருத்துகளும் இருப்பினும், இன்று வரை, கோர்ட்டுகளில் உருப்படியான செயல்திட்டங்கள் வகுக்கப்படவில்லை.
வழக்குகளில், கோர்ட்டுகள், உடனடி தீர்வு காணவில்லை என்றால், அவை கட்டப் பஞ்சாயத்துகளுக்கும், தாதாக்களின்அராஜகங்களுக்குமே வழிவகுக்கும். வழக்குகளின் தேக்க நிலை பற்றி கருத்து கூறுபவர்கள், பெரும்பாலும், நீதிபதிகள்பற்றாக்குறை, உள்கட்டமைப்பு போதாமை மற்றும் வழக்கறிஞர்களின் ஒத்துழையாமையையே காரணங்களாக கூறுகின்றனர்.இவை எல்லாமும் வழக்குகளின் தேக்கத்திற்கு காரணிகளாக இருப்பினும், அவற்றையும் மீறி, வேறு சில முக்கியகாரணிகளும் உண்டு.அவை:

* எல்.கே.ஜி., படிக்கும் சிறுமி பள்ளிக்கு செல்லும் நாட்களை விட குறைந்த நாட்களே, இந்திய கோர்ட்டுகள்செயல்படுகின்றன. கோடிக்கணக்கான வழக்குகள் தேக்கமுற்ற நிலையில், வருடத்திற்கு, 210 நாட்கள் மட்டுமே,நீதிமன்றங்களை திறந்து வைத்திருப்பது, நியாயமற்றசெயலாகும்
*தமிழகத்தில், வக்கீல்களின் கோர்ட் புறக்கணிப்பு போராட்டங்கள், ஆண்டுக்கு, 30 முதல், 40 நாட்கள் நடைபெறுகின்றன.புறக்கணிப்பு தினங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் முழுவதும் முடக்கப்படுகின்றன
*நீதிபதிகள் நியமனத்தில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகளில், தகுதிகளும், திறமைகளும் புறக்கணிக்கப்படுகின்றன
*விசாரணையை அடிக்கடி ஒத்தி வைக்க வாங்கப்படும் வாய்தாக்களினால், வழக்குகளின் தீர்வில் கால விரயங்கள்ஏற்படுகின்றன
*பொய் வழக்குகள் போடப்படுவதை தடுக்கும் விதமாக, அப்படிப்பட்ட வழக்குகளை தொடரும் வழக்காடிகளுக்கு உரியஅபராத தொகைகளை விதிப்பதற்கு நீதிபதிகள் தயங்குகின்றனர். இதனால், எப்படிப்பட்ட பொய் வழக்குகள் போட்டாலும்,தண்டனை கிடையாது என்ற தெம்பு, வல்லடி வழக்காடிகளுக்கு ஏற்படுகிறது
*இந்திய சட்ட அமைப்பு முறையில், சிறு வழக்குகளுக்கும் மேல் முறையீடு, சீராய்வு மனுக்கள், அதற்கும் மேல் ஐகோர்ட்,சுப்ரீம் கோர்ட் மேல் முறையீடுகள் என்று, பல கட்ட முறையீடுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதனால், சிறியஉரிமையியல் வழக்குகள், வீட்டு வாடகை வழக்குகள், தொழிலாளர் வழக்குகள் முடிவதற்கு, 10 முதல், 20 ஆண்டுகளாகின்றன. எனவே, பல கட்ட மேல்முறையீடுகளைத் தவிர்ப்பதற்கு சட்ட திருத்தங்களும் தேவை

இவை தவிர, சட்டக்கல்வி என்பது கேலிக்கூத்தாகிவிட்டதும், ஒரு முக்கிய காரணம். திறமையையும், தகுதியையும் வளர்ப்பதற்கு பதிலாக, சட்ட ஞானமே இல்லாதவர்கள் கூட, வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்வதற்கு,இங்கு வாய்ப்புகள் உள்ளன. தகுதியான சட்ட ஆலோசனை இல்லாமல் தவிக்கும் அல்லது ஏமாற்றப்படும் வழக்காடிகளின்எண்ணிக்கை கூடி வருகிறது.வழக்குகளின் தேக்க நிலைக்கான காரணிகளை அறிந்து, அவற்றை உரிய முறையில் களையமுற்படுவதே தேக்கங்களை தவிர்க்கும். மேம்போக்கான பூச்சு வேலைகள் காரியத்திற்கு உதவாது.வழக்குகளின் தேக்கம்!
வழக்காடிகளுக்கு ஏக்கமே!!


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக