சனி, 12 ஏப்ரல், 2014

நீங்களும் ஜெயிக்கலாம்...

சென்னை, குரூப்–1 தேர்வில் வெற்றி பெற்ற 25 பேருக்கு பணி ஒதுக்கீட்டு ஆணை நேற்று வழங்கப்பட்டது.
குரூப்–1 தேர்வு முடிவுகள் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 8 துணை ஆட்சியர், 4 காவல் துறை துணை கண்காணிப்பாளர், 7 வணிகவரிகள் துறை உதவி ஆணையர், 1 மாவட்ட பதிவாளர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்பட 25 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப்–1 முதன்மை தேர்வு நடத்தப்பட்டது.
இதில், வெற்றி பெற்ற 1,153 பேருக்கு, கடந்த 7–ந் தேதி நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. அவர்களில் 60 பேருக்கு கடந்த 11–ந் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டு, 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
பணி ஒதுக்கீட்டு ஆணை கலந்தாய்வில் நெய்வேலியை சேர்ந்த பி.டீனா குமாரி 623 மதிப்பெண் பெற்று முதலிடமும், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பி.கீதாபிரியா 2–வது இடமும், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பி.ஆர்.ரேஷ்மா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இவர்கள் உள்பட 25 பேருக்கு பணி ஒதுக்கீட்டு ஆணை, சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேற்று வழங்கப்பட்டது.

தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பணி ஆணைகளை வழங்கினார். உறுப்பினர்கள் டாக்டர் பன்னீர்செல்வம், செல்வமணி, முனுசாமி, சண்முக முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் நவநீதகிருஷ்ணன் கூறியபோது, ''குரூப்–1 தேர்வு முறையாக நடத்தப்பட்டு காலியான 25 பணியிடங்களுக்கு திறமை மற்றும் இடஒதுக்கீட்டு அடிப்படையில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு உள்ளது'' என்றார்.

வைராக்கியத்துடன் படித்தேன்
முதலிடம் பிடித்த பி.டீனாகுமாரி கூறியதாவது:– பி.டெக். பொறியியல் பட்டம் பெற்று டி.சி.எஸ் நிறுவனத்திலும், அதனை தொடர்ந்து ஐ.பி.எம். நிறுவனத்திலும் பணியாற்றினேன். 2011–ம் ஆண்டு குரூப்–1 தேர்வு எழுதியதில் முதனிலை தேர்விலேயே தோல்வியடைந்தேன். வெற்றிபெற வேண்டும் என்ற வைராக்கியத்தில் படித்து, தற்போது முதல் மாணவியாக தேர்ச்சியடைந்து துணை ஆட்சியர் பணிக்கு தேர்வு பெற்றுள்ளேன். நெய்வேலியில் பொறியாளராக வேலைபார்க்கும் தந்தை பரமசிவம், பள்ளி ஆசிரியையாக இருக்கும் தாய் பூங்கோதை, விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றும் கணவர் ராஜா சரவணன் ஆகியோர் மிகுந்த ஒத்துழைப்பு நல்கினர். எனக்கு 4 வயதில் சரண் என்ற மகனும் உள்ளார். தேர்வுக்கு சென்னை மேயர் சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் ஒரு ஆண்டு படித்ததால் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடிந்தது. அதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அயராது உழைத்தால் நினைத்த இலக்கை அடைய முடியும் என்பதை தற்போது நிரூபித்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


2–ம் இடம் பிடித்த பி.கீதாபிரியா கூறுகையில், ''2007–ம் ஆண்டு குரூப்–1 தேர்வு எழுதி தோல்வியடைந்தேன். வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று தினசரி 12 மணிநேரம் படித்தேன். தற்போது துணை ஆட்சியர் பணிக்கு தேர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்றார்.
டீக்கடை நடத்துபவர் மகள்
3–வது இடம் பிடித்த பி.ஆர்.ரேஷ்மா பிசியோதெரபி மற்றும் எம்.பி.ஏ, படித்தவர். இவரது தந்தை டீக்கடை நடத்தி வருகிறார். தாயார் அம்மினி. ரேஷ்மா வணிக வரித்துறை துணை ஆணையர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் முகப்பேரில் உள்ள நலவாழ்வு மையத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் பிரம்மவித்யா, கூறுகையில், ''பெற்றோர் டாக்டர் வத்திராஜ், ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி நிறுவனத்தில் மருத்துவராகவும், தாய் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள மருத்துவமனையில் டாக்டராகவும் பணியாற்றுகின்றனர். இவர்களுடைய ஒத்துழைப்புடன் படித்து வெற்றி பெற்றுள்ளேன். தற்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக