செவ்வாய், 31 மார்ச், 2015

'கவுன்சிலிங்' மூலம் சொந்த மாவட்டங்களில் 1,078 ஆசிரியர் நியமனம்

'கவுன்சிலிங்' மூலம், 1,078 பேர் சொந்த மாவட்டங்களிலேயே, முதுகலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை செய்திக் குறிப்பு: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், காலி இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, 1,746 முதுகலை பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான 'ஆன் - லைன் கவுன்சிலிங்', நேற்று முன்தினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடந்தது. இதில் பங்கேற்ற, 1,746 பேருக்கு, அவர்களால் தேர்வு செய்யப்பட்ட காலியிடங்களில், பாடவாரியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில், 1,078 பேர் சொந்த மாவட்டங்களிலேயே பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் உடனடியாக பணியில் சேரவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழ் 265, ஆங்கிலம் 195, கணிதம் 220, இயற்பியல் 188, வேதியியல் 188, தாவரவியல் 92, விலங்கியல் 87, நுண்ணுயிரியல் 2, வரலாறு 196, பொருளியல் 173, வணிகவியல் 140 என, பாட வாரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'ஆசிரியர் தேர்வு வாரியத்தால், 1,789 பேர் தேர்வானதாக அறிவித்திருந்தது; ஆனால், 1,746 பேருக்கு மட்டும், 'ஆன் - லைன் கவுன்சிலிங்' நடந்துள்ளது. எனவே, மீதமுள்ள 43 பேருக்கு, 'கவுன்சிலிங்' உண்டா அல்லது 1,746 பேர்தான் தேர்வு செய்யப்பட்டார்களா என்ற குழப்பம் நிலவுகிறது.