ஞாயிறு, 22 மார்ச், 2015

வாட்ஸ் அப்பில் கணித தேர்வு வினாத்தாள்: அரசு தேர்வுகள் இயக்குனர் விரைவில் விசாரணை

'வாட்ஸ் அப்'பில் கணித வினாத்தாள் 

தமிழ்நாட்டில் தற்போது பிளஸ்–2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.கடந்த 18–ந் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 323 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

அங்குள்ள ஒரு வகுப்பறையில் கண்காணிப்பாளராக பணியில் இருந்த ஆசிரியர் மகேந்திரன், கணித வினாத்தாளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை 'வாட்ஸ் அப்' மூலம் சக ஆசிரியரான உதயகுமாருக்கு அனுப்பினார். தொடர்ந்து அந்த வினாத்தாள் கோவிந்தன், கார்த்திகேயன் ஆகியோருக்கும் 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பப்பட்டது.

4 ஆசிரியர்கள் கைது 


 இவர்கள் 4 பேரும் ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் ஆவார்கள்.

இது தொடர்பாக ஆசிரியர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஊத்தங்கரை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்வி அதிகாரிகள் விசாரணை 


கணித பாடத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பிய விவகாரம் குறித்தும், மேலும் இதில் யார்–யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 ஓசூர் கல்வி மாவட்டத்தில் பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில் உரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஓசூர் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சிலரும் இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதனால் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சென்னையில் இருந்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஓசூருக்கு வர இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

கணித தேர்வு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட முறைகேடு பற்றி சென்னையில் நேற்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜனிடம் கேட்டபோது, இன்னும் ஓரிரு தினங்களில் தான் ஓசூர் செல்ல இருப்பதாக தெரிவித்தார். என்றாலும் கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்றும் கூறினார்.

118 ஆசிரியர்கள் பணி இடமாற்றம் 


இந்தநிலையில் ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய வேறு பள்ளிகளைச் சேர்ந்த 68 ஆசிரியர்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி நடவடிக்கை எடுத்து உள்ளார். அவர்களுக்கு பதிலாக நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ள பிளஸ்–2 தேர்வுக்கு ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி தேர்வு அறைகளுக்கு தலா 2 பேர் வீதம், 88 ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளில் இருந்து நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் கிருஷ்ணகிரியில் உள்ள அதே ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குழுமத்தைச் சேர்ந்த மற்றொரு பள்ளியில் 25 தேர்வு அறைகளுக்கு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்த 50 ஆசிரியர்கள் அங்கிருந்து மாற்றப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு பதிலாக 50 கண்காணிப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுதவிர மாவட்டம் முழுவதும் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்களை தேர்வு மைய கண்காணிப்பாளர் பணியில் இருந்து விடுவிக்கவும் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? 


இந்த முறைகேடு தொடர்பாக, மகேந்திரன் உள்ளிட்ட 4 ஆசிரியர்களும் பிடிபட்டது எப்படி? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

ஓசூர் பரிமளம் மெட்ரிக் பள்ளியில், பிளஸ்–2 தேர்வு நடந்த மையத்தில் கண்காணிப்பாளராக பணியில் இருந்த ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மகேந்திரன் செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை சோதனை செய்து பார்த்த போது, கணித தேர்வு வினாத்தாள், புகைப்படம் எடுக்கப்பட்டு சிலருக்கு அனுப்பப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் அதில் அனுப்பப்பட்ட வினாக்களுக்கான விடைகளும் பிறரிடம் இருந்து அவருக்கு 'வாட்ஸ் அப்' மூலம் வந்து உள்ளது. அந்த விடைகளை தங்கள் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதும் தேர்வு மையங்களில் பணியாற்றும் வேறு பள்ளிகளைச் சேர்ந்த தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு அவர் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள், தங்கள் தேர்வு அறையில் தேர்வு எழுதிய, விஜய் வித்யாலயா பள்ளி மாணவர்களில் ஒரு சிலருக்கு அந்த விடைகளை தெரிவித்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதற்காக அந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம்.

அழிக்கப்பட்ட தகவல்கள் 


இதன் மூலம் தாங்கள் வேலைப்பார்க்கும் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்ய, தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக சென்ற ஆசிரியர்கள் இந்த 'வாட்ஸ் அப்' தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி இருக்கலாம். என்றாலும் மகேந்திரன் அனுப்பிய 'வாட்ஸ் அப்' மெசேஜ் மூலம் அவருடைய பள்ளி மாணவர்கள் விடைகள் எழுதினார்களா? என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

ஆசிரியர் மகேந்திரனை பிடித்த சிறிது நேரத்திலேயே, அந்த 'வாட்ஸ் அப்' தகவல் யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்று கண்காணித்தோம். அதில் சிலரது செல்போன் எண்களில் வினாக்கள் மற்றும் விடைகள் எடுத்த பிரதிகள் அழிக்கப்பட்டு (டெலிட்) இருந்தது தெரிய வந்தது.

'வாட்ஸ் அப்'பில் வந்த தகவல்களை அழித்து விட்டால் அவற்றை கண்டுபிடிக்க முடியாது என்று அவர்கள் எண்ணி உள்ளார்கள். வல்லுனர்களை அணுகி, ''ரெக்கவரி சாப்ட்வேர்'' மூலமாக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்ப எடுக்க இருக்கிறோம்.

 வழக்கு பதிவு 


வினாத்தாளை பிரதி எடுத்து அனுப்பியது, விடைகளை தயார் செய்து, அந்த நகலை பிரதி எடுத்து 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பியது என்று இந்த விவகாரத்தில் சுமார் 20 முதல் 30 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தற்போது கைதான 4 பேர் மீதும், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக