புதன், 22 ஜூலை, 2015

ஜூலை 22-ஆம் தேதி முதல் செவிலியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள்


தமிழக அரசு மருத்துவமனைகளில் செவிலியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் புதன்கிழமை முதல் தொடங்க உள்ளது.
 தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 7,243 பணியிடங்களுக்கு செவிலியர்களை தகுதித் தேர்வின் மூலம் நியமிக்க தமிழக அரசு தீர்மானித்தது. அதன்படி அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஜூன் 28-ஆம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.
 இந்தத் தேர்வில் 38,116 பேர் பங்கேற்றனர். தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
 சான்றிதழ் சரிபார்ப்பு: இவர்களில் அந்தந்தப் பிரிவினரில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜூலை 22-ஆம் தேதி முதல் 10 வேலை நாள்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெறவுள்ளன. 
 சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சுகாதாரத் திட்டக் கட்டட அரங்கத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சான்றிதழ்கள் சரி பார்க்கப்படும்.
 புகார்: ஒவ்வொரு நாளும் சுமார் 500 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இதில் பங்கேற்பவர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. 
 இந்த நிலையில், தங்களைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான தகவல் அனுப்பபட்டுள்ளதாகவும், அதிக மதிப்பெண் பெற்றவர்களின் பெயர் விடுபட்டுள்ளளதாகவும் சிலர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் கூறியது:
 இந்தத் தேர்வு முறையில் எந்தக் குளறுபடிகளும் நடைபெற வாய்ப்பில்லை. மதிப்பெண்- சான்றிதழ் சரிபார்க்கும் பணிகளுக்கு அழைக்கப்பட்டவர்களின் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
 இதுகுறித்து யாருக்காவது சந்தேகமோ, புகாரோ இருந்தால் அதனை mrb.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
 
 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக