கிராமப்புற தெருக்களில் பொருள் களை விற்பவர்கள்தான் சைக்கி ளில் வருவர். கூவி கூவி விற்பனை செய்வர். இது இணையதள உலகம். கைவிரலில் உலகம் சுருங்கி வரும் சூழலில் கிராப்புற பெண்களுக்கு இணையதள வசதியை அளிப்பதற்கான முயற்சியில் டாடா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது.

டாடா அறக்கட்டளை கூகுள் நிறுவனத்துடன் இணைந்து கிராமப்புற பெண்களுக்காக புதிய வசதியை உருவாக்கியுள்ளது. இதன்படி 1,000 சைக்கிள்கள் இதற்காக பயன்படுத்தப்பட உள்ளன. இந்த சைக்கிளில் ஐ-பேட், லாப் டாப், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கும். இதன் மூலம் 4,500 கிராமங்களில் 5 லட்சம் கிராமப் பெண்களுக்கு இணையதளம் பற்றி கற்றுத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

`இண்டர்நெட் சாதி' என்ற பெயரிலான இந்த சைக்கிளில் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தருவோர் கிராமம் கிராமமாக செல்வார். இதன் மூலம் கிராமப்புற பெண்கள் தகவல் தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ள நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் முதல் கட்டமாக குஜராத் மாநிலத்தில் தொடங்கப்படுகிறது. அடுத்து ராஜஸ்தான் மாநிலத்திலும் பிறகு ஜார்க்கண்ட் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அடுத்தடுத்து பயணிக்கும். நாடு முழுவதும் 18 மாதங்களில் இந்த சேவை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராமத்திலும் வாரத்துக்கு இரண்டு நாள்கள் வீதம் நான்கு மாதம் முதல் 6 மாதங்கள் வரை முகாமிட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதைப் பற்றிய விழிப்புணர்வு முழுமையாக ஏற்படுத்திய பிறகு அடுத்த கிராமத்துக்கு இக்குழுவினர் செல்வர்.

நகர்ப்பகுதிகளில் உள்ள பெண் கள் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவான வளர்ச்சியை எட்டி வருகின்றனர். ஆனால் அத்தகைய வசதி கிடைக்காததால் கிராமப்பகுதி பெண்கள் பின்தங்கியுள்ளனர். அந்த நிலையைப் போக்க இப்புதிய வசதி வழியேற்படுத்தும் என்று கூகுள் நிறுவன தெற்காசியா மற்றும் இந்தியாவுக்கான துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன் கூறினார். இந்த முயற்சிக்கு இன்டெல் நிறுவனம் ஆரம்ப கட்ட வசதிகளை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த ரத்தன் டாடா, சில ஆண்டு களுக்கு முன்பு வரை இந்தியாவில் இத்தனை செல்போன்கள் புழக்கத்திலிருக்கும் என்றும், இணையதள இணைப்பும் இவ்வளவு எளிதாகக் கிடைக்கும் என்று எவருமே நினைத்திருக்க மாட்டார்கள். இந்தியாவை டிஜிட்டல் மய இந்தியாவாக்க வேண்டும் என்ற பிரதமரின் கனவை இத்திட்டம் நிறைவேற்ற வழிகோலும் என்றார்.