திங்கள், 27 ஜூலை, 2015

நல்ல குழந்தைகள், நல்ல ஆசிரியர்கள், நல்ல பெற்றோர்கள்!


என் சகலையின் பேத்தி அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் ஓர் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படிக்கிறாள். அந்தப் பள்ளியைப் பார்வையிடும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
 ÷ஜேக்சன் தொடக்கப் பள்ளி என்பது அப்பள்ளியின் பெயர். அரசுப் பள்ளிதான். பென்னி டி அக்விலா என்னும் பெயருடைய ஆண்தான் அப் பள்ளியின் முதல்வர். அடிப்படையில் அவர் ஒரு பொறியாளர். ஆனால், ஆர்வத்தின் காரணமாக ஆங்கிலத்தில் முதுகலைப் படிப்பும், ஆசிரியப் பயிற்சியும் முடித்து ஆசிரியரானவர்.
 ÷அவரைச் சந்திக்க அனுமதி கேட்டு பள்ளி வரவேற்புக் கூடத்தில் அமர்ந்தேன். நம் ஊரில் பெரிய அதிகாரிகள் நாளேட்டைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், காத்திருப்பவரை உள்ளே அழைத்துப் பேசமாட்டார்கள். இவர் எப்படியோ என எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில், "நீங்கள் இப்போதே முதல்வரைச் சந்திக்கலாம்' என்றார் வெளியில் வந்த அப் பெண்மணி. வியப்பு மேலிட கதவை மெல்லத் திறந்து உள்ளே சென்றேன்.
 ÷பள்ளி முதல்வர் அகமும் முகமும் மலர தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று கைகுலுக்கி வரவேற்றார். தொடர்ந்து இரு நாடுகளிலும் நிலவும் பள்ளி நடைமுறைகள் குறித்துப் பேசினோம். தொடர்ந்து பள்ளி வளாகத்தைச் சுற்றிக் காட்டினார்.
 ÷புகழ் வாய்ந்த இப்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க கடும் போட்டி ஏதுமில்லை. காரணம் அரசுப் பள்ளிகளில் உள்ளூர் குழந்தைகள் மட்டுமே சேர முடியும். சேர்க்கைக்கு வசிப்பிடச் சான்று கட்டாயம் தேவை. பள்ளிப் பேருந்து மூன்று மைல் சுற்றளவில் மட்டும் இயங்கும். இதனால், எல்லா அரசுப் பள்ளிகளிலும் குறைந்தது முந்நூறு குழந்தைகள் படிக்கின்றனர்.
 ÷அமெரிக்காவில் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள்தான் அதிகம். 87 விழுக்காடு குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் முற்றிலும் இலவசக் கல்விதான். பள்ளிப் பேருந்துக்கும் கட்டணம் இல்லை. ஏழைக் குழந்தைகளுக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில் மதிய உணவு கிடைக்கும். சில பள்ளிகளில் இலவசமாகவும் கிடைக்கிறது. சீருடை, பாடப் புத்தகம் இவற்றுக்குக் கட்டணம் உண்டு.
 ÷அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் எழுபது விழுக்காட்டினர் பெண்களே. பள்ளிப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களிலும் பெரும்பான்மையினர் பெண்கள் என்பது வியப்புக்குரிய செய்தியாகும்.
 பரந்த விளையாட்டு மைதானமும் தரமான விளையாட்டுக் கருவிகளும் ஒவ்வொரு பள்ளியிலும் உண்டு. ஏனோ கிரிக்கெட் மட்டும் இல்லை. பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது, உங்கள் கிரிக்கெட்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு வந்தார்களோ என்னவோ?
 ÷ஒவ்வொரு பள்ளியிலும் அன்னையர் குழுவும், பெற்றோர் - ஆசிரியர் கழகமும் பெயரளவுக்கு இல்லாமல் சிறப்பாகச் செயல்படுகின்றன. பெற்றோர்களுக்கு நிறைய உரிமைகள் தரப்படுகின்றன. அவர்கள் விரும்பினால் பாடம் நடத்துவதை வகுப்பறையில் அமர்ந்து பார்க்கலாம். ஆசிரியரின் கல்வித் தகுதியைச் சரி பார்க்கலாம். பள்ளி ஆவணங்களைப் பார்வையிடலாம்.
 ÷ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான மழலையர் வகுப்புகளைத் தனியார் நிறுவனங்கள் மட்டும் நடத்துகின்றன. அவர்கள் வசூலிக்கும் கட்டணம் மிக மிக அதிகம். 
 ÷அரசுப் பள்ளிகளில் 5 வயது நிரம்பிய குழந்தைகள் மட்டும் சேர இயலும். 
 கிண்டர் கார்டன் என்பது ஓராண்டு நுழைவு நிலை வகுப்பாகும். இந்த வகுப்பில் படம் வரைவதற்கும், பேசுவதற்கும் பயிற்சி அளிக்கின்றனர். எழுத்துப் பயிற்சி எதுவும் கிடையாது. பிறகு முதல் கிரேடு, இரண்டாம் கிரேடு எனத் தொடரும். 
 இங்கும் எட்டாம் வகுப்புவரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்க No Child Left Behind (NCLB) என்னும் சட்டம் உண்டு. நம் நாட்டில் இருப்பது போல தொடர்ச்சியான முழு மதிப்பீட்டுத் திட்டம் செயல்படுகிறது.
 ÷ஆசிரியர்கள் கொடுக்கும் திட்டப் பணிகளை மாணவர்களே செய்கின்றனர். இப்போது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள ஐம்பது நட்சத்திர தேசியக் கொடியே ஒரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் திட்டப் பணிதானாம். நம் ஊரில் இத்தகையத் திட்டப் பணிகளை பெரும்பாலும் குழந்தைகளின் பெற்றோரே செய்கின்றனர் என்பது கசப்பான உண்மை. 
 வெறும் மதிப்பெண் பெற வைக்கும் எந்தச் செயல்பாடுகளும் இங்கு இல்லை. மாலை நேர சிறப்பு வகுப்பு, விடுமுறை நாள்களில் தேர்வு போன்ற அத்துமீறல்கள் எதுவும் இல்லை. பாடப் புத்தகத்துக்கு அப்பால் நிறையவே உள்ளன என்று நம்புவதால், வாசகர் வட்டம், சாரணர் இயக்கம், சுற்றுச்சூழல் குழு போன்றவற்றைத் திறம்படச் செயல்படுத்துகிறார்கள். இந்த நாட்டில் பெற்றோரும், ஆசிரியரும் குழந்தையிடத்தில் படி படி என்று நச்சரிக்கக் கூடாதாம்.
 பாடத் திட்டம், பாடப் புத்தகம், தேர்வுத் திட்டம், வேலை நாள் போன்றவற்றை உருவாக்குவதற்காகக் கல்வி மாவட்ட அளவிலான அதிகார அமைப்பு உள்ளது. அனுபவம் வாய்ந்த முதல்வர் குழு, கல்வி மாவட்டப் பள்ளிகள் கண்காணிப்பாளர் தலைமையில் இவற்றைத் தயாரிக்கிறது. மாநிலம் தழுவிய பாடப் புத்தகம், தேர்வுத் திட்டம் என ஒன்றுமில்லை.
 ÷சாதி, மதம், நாடு, மொழி, நிறம், பாலினம் என எந்த வேறுபாட்டுக்கும் இடமில்லாமல் பள்ளிகள் தரமான கல்வியை வழங்குகின்றன.
 ÷நான் விடைபெற்றுக்கொள்ளும் நேரம் நெருங்கியது. அமெரிக்க நாட்டு அரசு தொடக்கப் பள்ளிகளின் தர வரிசைப் பட்டியலில் அவரது பள்ளி முதலிடத்தில் இருப்பதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார். இது எப்படி சாத்தியமாயிற்று என்று கேட்டேன். எனக்கு வாய்த்த நல்ல குழந்தைகள், நல்ல ஆசிரியர்கள், நல்ல பெற்றோர்கள் எனச் சொல்லி மகிழ்ச்சிப் பொங்க சிரித்தார். மிகச் சரியாகச் சொன்னீர்கள் என்று கூறி விடை பெற்றேன்.