வெள்ளி, 17 ஜூன், 2016

மனோ சக்தியால் மண்ணுலகை ஆட்டிப் படைக்க முடியும்!


மனோ சக்தியால் மண்ணுலகை ஆட்டிப் படைக்க முடியும் என்பதை இவ்வுலகில் பலர் நிரூபித்திருக்கின்றனர். 1973-இல் தன் மனோ வலிமையால் கண்ணில் தோன்றும் உலோகப் பொருட்களை வளைக்கவும் உடைக்கவும் முடியும் என்பதை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூரி கெல்லர் (Yuri Geller) என்ற ஓர் இளைஞர் தொலைக்காட்சியில் நிரூபித்துக்காட்டிய போது, இவ்வுலகம் திகைத்துப் போனது.

யூரி கெல்லர் தன்னால் உலோகப் பொருட்களை வெறும் பார்வையாலோ அல்லது தீண்டுவதன் மூலமோ வளைக்க முடியும் என்று கூறிய போது யாரும் அதை நம்பவில்லை. ஆனால், பிபிசி தொலைக்காட்சியில் 23.11.1973 அன்று அவர் தோன்றி, நேயர்களின் கண்ணெதிரிலேயே மேசையில் வைக்கப்படும் கரண்டி, ஃபோர்க் முதலியவைகளை வெறும் பார்வையாலேயும் ஸ்பரிசத்தாலேயும் வளைத்துக் காட்டிய போது அறிவியல் உலகம் அதிர்ச்சிக்குள்ளாகியது. தொலைக்காட்சியில் நிகழ்ச்சி முடிந்ததும் பிபிசி நிறுவனத்துக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் கணக்கில் அடங்காது. அப்படித் தொலைபேசியில் அழைத்தவர்களில் பலர் தங்கள் வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டியை நோக்கி வைக்கப்பட்டிருந்த சமையலறைக் கத்திகளும், சிறு கரண்டிகளும் நிகழ்ச்சி நடக்கும்போது தானாகவே உடைந்து போனதாகக் கூறினார்கள் . ஒருவர் வீட்டில் பல நாட்களாக ஓடாமல் இருந்த கடிகாரம் யாரும் எதுவும் செய்யாமலேயே தானாகவே ஓடத் தொடங்கியதாகக் கூறினார்.

பாரா சைக்காலஜி

 (Para psychology) எனப்படும் உளவியல் துறையின் ஒரு பிரிவில் வல்லுநரான டபிள்யூ ஈ காக்ச் என்பவர் யூரி கெல்லரின் திறமையைப் பரிசோதிக்க எண்ணி ஓடாத ஒரு கைக்கடிகாரத்தை யூரி கெல்லரிடம் கொடுத்தார். அலுமினியம் கம்பி ஒன்றின் உதவியால் காக்ச், அந்த கடிகாரத்தை ஓட விடாமல் அதனுள்ளே இருந்த பாகங்களைத் தாறுமாறாக முடுக்கி இருந்தார். ஆனால், யூரி கெல்லரின் ஒரு பார்வையிலேயே அந்த கடிகாரம் ஓடத் தொடங்கியது. மேக்ஸ் ப்ளாங்க் இன்ஸ்டிட்யூட் (Max Planck Institute) என்ற ஜெர்மானிய நாட்டு அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் யூரி கெல்லரை ஆராய்ச்சிக்கு உள்ளாக்கி விட்டு, அவரது சக்தி விளக்கத்திற்கு அப்பாற்பட்டது என்ற முடிவுக்கு வந்தது.

அமெரிக்காவில் வி-2 ராக்கெட்டைக் கண்டுபிடித்த வெர்ன்ஹெர் ஃவான் ப்ரெüன் என்னும் விஞ்ஞானி யூரி கெல்லரை சோதனைக்குள்ளாக்கினார். அந்த விஞ்ஞானியின் கையில் இருந்த தங்க மோதிரத்தின் மேல் தன் கைகளை யூரி கெல்லர் தவழ விட்டபோது, மோதிரம் தட்டை வடிவம் பெற்றது. அவரை பல சோதனைகளுக்கு ஆளாக்கியபின், விஞ்ஞானிகள் யூரி கெல்லரால் மின் அலைகளை உருவாக்க முடிகிறது என்று கண்டறிந்தனர்.

யூரி கெல்லர் தன் பார்வையால் உலோகப் பொருட்களை வளைத்தாரென்றால் சோவியத் யூனியனின் மேடம் நீனா குலகினா (Madame NinaKulagina) தன் பார்வையால் பல பொருட்களை இடம் பெயரச் செய்தார். அறிவியலாளர்கள் அவரைச் சோதனை செய்து கொண்டிருக்கும்போதே நீனா குலகினா மேசையில் வைக்கப்பட்டிருந்த பிங் பாங் பந்தை மேலெழும்பச் செய்தார். அலமாரியில் இருந்த பல பொருட்களை இடம் விட்டு இடம் பெயரச் செய்தார். ரஷ்யாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அவர் பல பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டார். அப்பரிசோதனைகளின் போது அவர் தன் பார்வையாலேயே டேபிளில் வைக்கப்பட்டிருந்த பேனா, சிகரெட் பெட்டி, ப்ரெட் முதலியவைகளை இடம் பெயர வைத்தார். ஒரு கண்ணாடி உருண்டையின் மேல் அவர் கைகளை அசைத்தபோது, அதனுள் இருந்த சிகரெட் புகை இரு கூறாகப் பிரிந்தது. மருத்துவர்கள் நீனா குலகினாவை சோதனைக்குள்ளாக்கிய போது, அவர் அற்புதங்களை நிகழ்த்தும் போதெல்லாம் அவருடைய நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 200 பதிவாகியது. அவருடைய பின் மூளையில் ஏற்பட்ட அதிர்வுகள் சாதாரணமாக ஏற்படக்கூடிய அதிர்வுகளை விட 4 மடங்கு அதிகமாக இருந்தது. அவரைச் சுற்றி ஒரு காந்த வளையம் ஏற்படுவதாக ஒரு சில விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். நீனா குலகினா தான் அற்புதங்களை நிகழ்த்தும் போதெல்லாம் தன்னுடைய முதுகுத்தண்டில் ஒரு மின்சக்தி உருவாகி மேல் நோக்கிக் கிளம்பி பிடரியில் ஒன்று சேர்ந்து அங்கிருந்து வெளியேற்றப்படுவதாகத் தான் உணர்வதாகக் கூறினார்.

ஆனால், உலோகத்தால் செய்யப்பட்ட பூட்டுக்கள் மற்றும் கை விலங்குகளை சர்வ சாதாரணமாக உடைத்தெறிந்தார் ஒருவர் என்றால் நம்ப முடியுமா? 1974-இல் ஒரு யூதப் பாதிரியாருக்கு ஹங்கேரி நாட்டில் புதாபெஸ்டில் மூத்த மகனாகப் பிறந்து வறுமையின் காரணமாக அமெரிக்காவிற்குக் குடியேறியவர் எஹ்ரிக் வீஸ் Ehrich Weiss). வறுமையின் காரணமாக மழைக்குக் கூட பள்ளிக்கூட வாசலை அவரால் மிதிக்க முடியவில்லை. தந்திரக் கலையில் (மாஜிக்) ஏற்பட்ட ஆர்வம் காரணமாகத் தன் பெயரை ஹார்ரி ஹொடினி (Harry Houdini) என்று மாற்றிக் கொண்ட அவர் முதல் முதலாக நியூயார்க் நகரில் ஒரு காலி பீர் குடுவையில் இருந்து தன் பூட்டுக்களை விடுவித்துக்கொண்டு 20 வினாடிகளில் வெளியே வந்த போது, அவரை யாரும் பெரிதாகக் கருதவில்லை. ஆனால், சிக்காகோ போலீஸ் தலைமையகத்தில் அவருக்குப் போடப்பட்டிருந்த கைவிலங்குகளில் இருந்து அவர் தன்னை விடுவித்துக்கொண்டு வெளிவந்ததும் அவர் புகழ் நாடெங்கும் பரவியது. 1899-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13-ஆம் தேதி சானஃப்ரான்சிஸ்கோ நகர போலீஸ் தலைமையகத்தில் அவருடைய சவாலையேற்று போலீஸ் அதிகாரிகள் அவரை நிர்வாணமாக்கி அவர் உடலில் ஏதாவது மறைக்கப் பட்டிருக்கிறதா என்று பரிசோதித்த பின் அவருடைய கைகளைப் பின்னால் இணைத்து 10 விலங்குகளால் அவரைப் பூட்டினர். கைகள் மற்றும் முழங்கால்கள் ஆகியவை பல சங்கிலிகளால் கோர்க்கப்பட்டு அவற்றின் மேல் பூட்டுக்கள் போடப்பட்டன. அதன் பிறகு ஹார்ரி ஹொடினி ஏற்கெனவே பரிசோதனைக்குள்ளாக்கப்பட்ட ஒரு சிறை அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் உள்ளே போனதும் சிறைக் கதவுகள் பூட்டப்பட்டன. பல்வேறு பத்திரிகை நிருபர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஹார்ரி ஹொடினி 10 நிமிடத்தில் தன்னை விடுவித்துக்கொண்டு வெளியே வந்தார். சான் ஃப்ரான்சிஸ்கோ நகரமே இந்த நிகழ்ச்சியைக் கண்டு குலுங்கியது.

1900-ஆம் ஆண்டு மே மாதம் ஹார்ரி ஹொடினி இங்கிலாந்து பயணமானார். உலகப் புகழ் பெற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீசிடம் அவரது கண்கட்டு வித்தை செல்லுமா என்று கேள்விக்குறி எழுப்பப்பட்டது. ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைத் தலைமையகத்தில் கண்காணிப்பாளர் (Superintendent of Police) ஹொடினியைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். அவரது கைகள் இரண்டையும் ஒரு தூணைச் சுற்றிக் கட்டச் சொன்னார். அப்படி கட்டப்பட்ட கைகளில் விலங்கைப் பூட்டிவிட்டு, மெல்வில் (Malville) என்ற அந்த கண்காணிப்பாளர் நீங்கள் சோர்வடைந்த பின் நான் திரும்புகிறேன் என்று இறுமாப்புடன் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால், அவர் வாயிற்கதவை அடையும் போதே ஹொடினியின் குரல் கேட்டு திரும்பினார். விலங்குகள் கழற்றப்பட்ட நிலையில் சுதந்திர மனிதனாக ஹொடினி அங்கே நின்று கொண்டிருந்தார்.

ஜெர்மனியில் யாராலும் கழற்றப்பட முடியாதென்று கருதப்பட்ட மதில்தா காஸ் (Mathilda Gasse) சிறையிலிருந்து தருவிக்கப்பட்ட கைவிலங்குகளை ஹொடினி அவிழ்த்தெறிந்த போது அந்நாட்டின் மிகப் பெரிய சட்ட அமுலாக்க அதிகாரி திரு வான் விந்தேம் (Von Windhiem) அந்நிகழ்ச்சிக்குத் தன் கைப்பட அத்தாட்சியளித்தார்.

1903-ஆம் ஆண்டில் ரஷ்யாவிற்குப் பயணமான ஹொடினி, மிகக் கடுமையாக தண்டிக்கப்பட்ட கைதிகளை சைபீரியாவிற்குக் கொண்டு செல்லும் சிறை ஊர்தியில் (Siberian Transport Cell) தன் சாகசத்தை நடத்தக் கோரினார். அது உலகில் யாராலும் செய்ய முடியாத செயல் என்று அந்நாட்டுக் காவல் துறை சவால் விடுத்தது. ஆனால், அரை மணி நேரத்திற்குள் ஹொடினி அதிலிருந்து வெளியே வந்தார்.

1906-ஆம் ஆண்டில் வாஷிங்டன் கூட்டமைப்புச் சிறையிலிருந்தும், (Washingdon Federal Prison) பின்னர் (Boston) சிறையிலிருந்தும் அவர் தன்னை விடுவித்துக் கொண்ட போது, அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்றோ வில்சன் (Woodrow Wilson) வேடிக்கையாகக் கூறினார், "கடுமையான கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் உங்கள் திறமையைக் கண்டு நான் பொறாமைப் படுகிறேன். அத்திறமை எனக்கு இருக்கக் கூடாதா என்று சில சமயம் எண்ணுகிறேன்' என்றார்.

அப்படி உலகத்தையே தன் கண்கட்டு வித்தையால் கட்டிப் போட்ட ஹொடினி, மழைக்குக் கூட ஒரு பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியதில்லை. ஆனால், தன் கடின உழைப்பாலும், திறமையாலும் அவர் சொற்பொழிவாளர், எழுத்தாளர், வரலாற்றறிஞர் என்று பன்முகம் கொண்ட வல்லுனராகப் பரிணமித்தார். 1926-ஆம் ஆண்டில் தனது 52 வயதில் காலமான ஹொடினி, தன்னுடைய சாகசங்கள் வெறும் தந்திரங்களே தவிர இயற்கையை மீறிய சக்திகளால் அல்ல என்றும் அப்படி இயற்கையை மீறிய சக்தி படைத்திருப்பதாகச் சிலர் சொல்லுவது ஏமாற்று வேலையே தவிர வேறல்ல என்றும் அறை கூவினார். அப்படியானால், அவர் புரிந்த சாகசங்கள் எதில் அடங்கும்? 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக