புதன், 22 ஜூன், 2016

புத்தகமில்லா கல்விக்கு வழிகாட்டி: அரசு நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர்.


புத்தகமில்லா கல்விக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர்.

பள்ளிகளுக்கு புத்தகங்களை சுமந்து சென்று வகுப்பறைகளில் கரும்பலகைகளில் எழுதிப் படித்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. பாடங்களைக் கற்பிப்பதற்கு தற்போது பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், அறிவியல் பாடங்களை கணினி மூலம் கற்பித்து, புத்தகமில்லா கல்விக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள கண்ணக்கன்காடு அரசு நடுநிலைப் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் எஸ்.ரவி. தனது முயற்சிகள் குறித்து அவர் 'தி இந்து' விடம் கூறியதாவது:

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, ஒரு பாடத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எரிமலையைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தேன்.

புத்தகத்தில் எரிமலையின் படம் இருந்தாலும், அதன் செயல்பாடுகளை நான் பலமுறை விளக்கி யும்கூட மாணவர்கள் முழுமை யாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை அறிந்தேன்.

மறுநாள் இணையதளத்தில் இருந்து எரிமலை வெடிப்பது போன்ற வீடியோவை டவுன்லோடு செய்து, அதை எனது மடிக்கணினி மூலம் வகுப்பறையில் காட்டிய போது, மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டனர்.

புத்தகத்தைக் கொண்டு ஒரு மணி நேரம் விளக்கியபோதும் புரிந்து கொள்ளாததை, வீடியோ மூலம் விளக்கியபோது அரை நிமிடத்தில் மாணவர்கள் புரிந்துகொண்டனர். மடிக்கணினியில் ஒரே நேரத்தில் 2 அல்லது 3 மாணவர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

இந்த சிரமத்தைப் போக்குவதற்காக, ஒரே நேரத்தில் அனைவரும் பார்க்கும்வகையில், ஒரு சேவை அமைப்பிடம் இருந்து புரொஜக்டரை நன்கொடையாகப் பெற்று, வகுப்பறையில் பயன் படுத்துகிறேன்.

அறிவியல் பாடப் புத்தகத்தை ஸ்கேன் செய்து, கற்பிக்கக்கூடிய பாடத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரொஜக்டர் மூலம் பெரிதாக திரை யில் காண்பிப்பதாலும், அந்த பாடம் தொடர்பான வீடியோக்களை காண்பிப்பதாலும் மாணவர் கள் எளிதில் பாடத்தைப் புரிந்து கொள்கிறார்கள். இதற்காக, நூற்றுக்கணக்கான வீடியோ காட்சிகளைப் பயன்படுத்துகிறேன் என்றார்.

கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் புத்தகமில்லா கற்றல் முறையை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஆசிரியர் எஸ்.ரவியின் கோரிக்கையாகும்.