வெள்ளி, 17 ஜூன், 2016

ஆவிகள் அமைத்துக் கொடுத்த அற்புத இசை!

"முடிக்கப்படாத சிம்பொனிகள்'  (Unfinished Symphonies) மற்றும் "காலத்தை வென்றவர்கள் என் முழங்கையில்' (immortals at my Elbow) போன்ற நூல்களை எழுதி 1970-களில் இங்கிலாந்தில் புகழ் பெற்றார் திருமதி. ரோஸ் மேரி பிரவுன் (Rose Mary Brown) என்ற பெண்மணி. ஆனால் அவருடைய புகழுக்குக் காரணம் அந்த நூல்கள் மட்டுமல்ல. இசை ஞானமே இல்லாத அந்தப் பெண்மணி இந்த உலகில் தோன்றி மறைந்த இசை மேதைகளான ஃப்ரான்ஸ் லிஸ்ட் (Franz Liszt), ப்ரெட்ரிக் சாபின் (Fredrick Chopin), லுட்விக் வான் பீதோவன் (Ludwig Van Beethovan), ஜோஹன் செபாஸ்டின் பக் (Johaan Sepastin Bach) ஆகியவர்களால் ஆவியுலகில் இருந்து தரப்பட்ட புது காம்போசிஷன்களைக் கொண்ட இசைத் தட்டுக்களை விற்பனைக்குக் கொண்டு வந்தார். 1970ஆம் ஆண்டு மே மாதம் இந்த ஆவியுலக இசைத் தட்டுகள் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்த போது, அறிவியல் உலகம் பிரமித்துப் போனது.

இசையுலக விற்பன்னராகத் திகழ்ந்த பேராசிரியர் இயன் பேரட் (Prof. Ian Parrot), இந்த இசை வடிவங்களைச் சோதித்துப் பார்த்துவிட்டுச் சொன்னார் ஒரு கைதேர்ந்த இசைக் கலைஞனால் கூட இம்மாதிரி இறந்து போன மேதைகளின் இசை வடிவங்களைக் காப்பி அடித்து வடித்திருக்க முடியாது.

ஆவியுலகத்திலிருந்து திருமதி ரோஸ் மேரி பிரவுன் வடித்துக் கொடுத்த காம்போசிஷன்களின் மெய்த்தன்மையைப் பரிசோதிக்க, இறுதியில் ஒரு மல்டி வேரியெட் அனலைசர் (Multi Varate Analyser) எனப்படும் கம்ப்யூட்டரின் உதவியை விஞ்ஞானிகள் நாடினர். மே மாதம் 1971-இல் கணித மேதையும் இசை மேதையுமான ஸ்டான் கெல்லி (Stankelly) என்பவர் இந்தப் பரிசோதனையை நடத்தினார். மறைந்த இசை மேதைகளான ஃப்ரான்ஸ் லிஸ்ட் (Franz Liszt), ப்ரெட்ரிக் சாபின் (Fredrick Chopin), லுட்விக் வான் பீதோவன் (Ludwig Van Beethovan), ஜோஹன் செபாஸ்டின் பக் (Johaan Sepastin Bach) ஆகியோரது இசை வடிவங்களையும், அவர்கள் பெயரால் திருமதி ரோஸ் மேரி பிரவுன் வடிவமைத்த இசையையும், அந்தக் கணினியில் பதிவு செய்து அவைகளுக்குள் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். இவைகளுக்குள் 60% ஒப்புமை (Correlation factors) இருந்தால் திருமதி ரோஸ் மேரி பிரவுன் கொடுத்த இசை ஆவியுலக இசையென்று ஒப்புக்கொள்ள விஞ்ஞானிகள் தயாராக இருந்தனர். ஆனால் பரிசோதனையின் முடிவில் ஒப்புமைக் காரணிகள் 80% முதல் 90% வரை கணினியால் காட்டப்பட்டபோது, அறிவியல் உலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. இன்று வரை திருமதி ரோஸ் மேரி பிரவுன் எப்படி இப்படிப்பட்ட இசையை உருவாக்கினார் என்பது விஞ்ஞான உலகிற்குப் புரியாத புதிராகவே உள்ளது.

திருமதி ரோஸ் மேரி பிரவுன் தன்னுடைய நூலில், ஆவியுலகோடு தன்னுடைய முதற்தொடர்பு சிறு வயதில் ஏற்பட்டதாகவும் பின்னர் 1994இல் தன் தந்தை மரணப் படுக்கையில் இருந்தபோது, தான் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, தன் தந்தையின் ஆவி தன் அருகில் வந்து பேசியதாகவும், அவர் சொன்னவை அனைத்தையும் பின்னர் வீட்டில் இறந்திருந்த தந்தையின் சடலத்திற்கருகில் அமர்ந்திருந்த தன் தாய் உறுதிப் படுத்தியதாகவும் சொல்லியுள்ளார்.

1970களில் திருமதி ரோஸ் மேரி பிரவுன் பிபிசி தொலைக்காட்சியில் தோன்றி ஆவியுலகில் இருந்த தனக்களிக்கப்பட்ட இசை வடிவங்களைப் பற்றி விளக்கமளித்தார். அதைத் தொடர்ந்து அவரது புகழ் உலகெங்கும் பரவியது.

1971இல் அவர் பாரீசுக்குப் போனார். அங்கே 1810 முதல் 1849 வரை வாழ்ந்து தன்னுடைய 39ஆவது வயதில் இறந்து போய் இசையுலகில் ஒரு சகாப்தமாகிப் போன போலந்து இசை மேதை ப்ரெட்ரிக் சாபினின் கல்லறைக்குப் போனார். பல முறை சாபினின் ஆவி, திருமதி ரோஸ் மேரி பிரவுனின் கைகளைப் பிடித்து தன் காம்போசிஷன்களை எழுதிக்கொடுத்த அனுபவத்தைப் பெற்றிருந்ததால், திருமதி ரோஸ் மேரி பிரவுனுக்கு சாபினின் மேல் அளவு கடந்த மரியாதை இருந்தது. எனவே, அக்கல்லறைக்கு அவர் போனார். அங்கே உணர்ச்சி மேலிட்டு, தன்னுடைய அற்புதமான இசையை முழுவதுமாக இவ்வுலகிற்கு அளிக்க முடியாமல், சிறு வயதிலேயே அற்பாயுளில் இறந்து விட்ட அம்மேதையை நினைத்து கண்ணீர் விட்டார். அந்த நிமிடத்தில் ஒரு மயிற்கூச்செரியும் நிகழ்ச்சி நடந்தது. அதை திருமதி ரோஸ் மேரி பிரவுன் பின் வருமாறு விவரிக்கின்றார்: என் அருகில் சோபின் தோன்றினார். என் வருத்தத்தை உணர்ந்து கொண்ட அவர், ஒரு புன்முறுவலோடு என்னை நோக்கி ஏன் வருந்துகிறாய் நான் அங்கு (கல்லறையில்) இல்லை. இதோ இங்கிருக்கிறேன் என்றார்.

இதே போல் ப்ரான்ஸ் லிட்ஸ் என்ற இசை மேதை ரோஸ் மேரியிடம் வாழ்க்கையின் இழை மரணத்துடன் முடிவதில்லை. அது இன்னொரு (நூற்) கண்டிற்கு மாற்றப்பட்டு விடுகிறது. அவ்வளவு தான் என்று கூறியதாக ரோஸ் மேரி குறிப்பிடுகிறார்.

எது எப்படியாயினும், திருமதி ரோஸ் மேரி பிரவுன் தொகுத்தளித்த இசை எங்கிருந்து வந்தது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக