வெள்ளி, 17 ஜூன், 2016

தீர்க்க தரிசனம் :பூமியிலிருந்து நிலவுக்கு (From the earth to the moon)

அபோல்லோ-11 விண்கலம் 1969-இல் நிலவில் தரையிறங்குவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே, அதைப் பற்றிய நுணுக்கங்களை ஒரு எழுத்தாளன் தன் படைப்பில் சொல்லிவிட்டான் என்றால் அதை இன்று நம்ப முடியுமா ஆனால் இது உண்மை.

ப்ரான்ஸ் (France) நாட்டில் 1828-ஆம் ஆண்டு பிறந்து, 1905-இல் தனது 77- ஆவது வயதில் உயிர் நீத்த அறிவியல் புதினப் படைப்பாளர் ஜூல்ச் வெர்னே (Jules Verne) ஒரு பலூனில் ஐந்து வாரங்கள் (5 weeks in an baloon) பூமியின் மையப் பகுதிக்கு ஒரு பயணம் (A Journey to thecentre of tje earth) பூமியில் இருந்து நிலவுக்கும் அதைச் சுற்றியும் ஒரு பயணம் (From the earth to the moon and trip around it), கடலுக்கடியில் 20,000 கூட்டமைப்புகள் (20000 leagues under the sea) 80 நாட்களில் உலகத்தைச் சுற்றி (Around the world 80 days) போன்ற நாவல்களை எழுதி உலகப் புகழ்பெற்றார் அவர்.

1989-இல் அவர் எழுதிய 2899-இல் ஓர் அமெரிக்கப் பத்திரிக்கையாளனின் ஒரு நாள்;"(A day of an American journalist in 2899)" என்ற நாவலில் அவர் தொலைக்காட்சி, கம்பியில்லாத் தகவல் தொடர்பு, சூரியசக்தியில் இருந்து மின்சாரம் எடுப்பது, தொலைக் காட்சியோடு கூடிய தொலைபேசி போன்ற பல அறிவியல் கண்டுபிடிப்புக்களைப் பற்றி எழுதினார்.

1865-இல் அவர் எழுதிய பூமியிலிருந்து நிலவுக்கு (From the earth to the moon) என்ற நாவலிலும், 1870 ஆம் ஆண்டில் அவர் எழுதிய நிலவைச் சுற்றி (Around the moon) என்ற நாவலிலும் ஜூல்ச் வெர்னே கொடுத்துள்ள மிக நுண்ணிய தகவல்கள் ஒரு நூற்றாண்டுக்குப் பின் உண்மையாகவே வடிவம் பெற்றன என்பதை எண்ணும் போது, நம்மால் வியப்படையாமல் இருக்க முடியாது. அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்:

(1) ஜூல்ச் வெர்னே ப்ரெஞ்ச் நாட்டவர். ஆனால் நிலவுக்குப் போகும் விண்வெளிப் பயணம் ப்ரெஞ்ச் நாட்டிலிருந்தோ அல்லது அப்போது அகில உலகையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டிலிருந்தோ நடப்பதாக அவர் தன் நாவலில் எழுதவில்லை. அந்தக் காலக்கட்டத்தில் உலக அளவில் முன்னோடியாக இல்லாமல் இருந்த அமெரிக்காவிலிருந்தே விண்கலம் புறப்படுவதாக அவர் எழுதினார். அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் கேப்டவுன் என்ற இடத்தில் இருந்து விண்கலம் புறப்படுவதாக அவர் எழுதினார். 1969 இல் அவரது தீர்க்க தரிசனத்தை மெய்ப்பிக்கும் வகையில் ப்ளோரிடா மாகாணத்தில் கேப்கென்னடியிலிருந்து தான் விண்கலம் புறப்பட்டது.

(2) ஜூல்ச் வெர்னே நிலவுக்குப் போகும் விண்கலத்தைக் கோண வடிவத்தில் (Cone shape) கற்பனை செய்து அதற்குக் "கொலம்பியாட்' என்று பெயரிட்டார். அது அப்படியே உண்மையாகி, 1969 இல் அனுப்பப்பட்ட அப்போல்லோ - 11 விண்கலம் கோண வடிவில் அமைந்து அதற்கு "கொலம்பியா' என்று பெயரிடப்பட்டது.

(3) தன் நாவலில் அந்த விண்கலத்தில் 3 பயணிகள் இருப்பதாக ஜூல்ச் வெர்னே கற்பனை செய்தார். அதைப் போலவே அப்போல்லோ - 11 இல் 3 விஞ்ஞானிகள் பயணித்தனர்.

(4) ஜூல்ச் வெர்னேயின் நாவலில் வரும் விண்கலம் ஒரு விநாடிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து, மணிக்கு 39,600 கிலோமீட்டர் வேகத்தில் நான்கு நாட்களில் சந்திரனை அடைவதாகக் கற்பனை செய்யப்பட்டது. அது அப்படியே உண்மையாகி, அப்போல்லோ - 11 விண்கலம் மணிக்கு 38,500 கிலோமீட்டர் வேகத்தில் சென்று நான்கு நாட்கள் 6 மணி நேரம் 46 நிமிடங்களில் சந்திரனை அடைந்தது.

(5) வெர்னேயின் நாவலில் வரும் விண்கலப் பயணிகள் தாங்கள் உண்ண வேண்டிய உணவு வகைகளை ஹைட்ராலிக் அழுத்த முறையில் எடுத்துச் சென்றனர். ஒரு நூற்றாண்டுக்குப் பின் விண்கலப் பயணிகள் உணவுப் பண்டங்களை மாத்திரைகளாக்கி எடுத்துச் சென்றனர்.

(6) ஏப்ரல் 1870 இல் ஜூல்ச் வெர்னே எழுதிய "நிலவைச் சுற்றி' நாவலில் கொலம்பியாட் விண்கலம் தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளாகிப் பின் பூமிக்குத் திரும்புவதாக கற்பனை செய்யப்பட்டது. ஏப்ரல் 1970 இல் (சரியாக 100 வருடங்களுக்குப் பின்) அப்போல்லோ - 13 தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளாகித் திரும்பியது.

இப்படி 1870-களில் ஒரு அறிவியல் எழுத்தாளனால் கற்பனையில் உருவாக்கப்பட்ட நிலவுப் பயணம், மிகச் சரியாக ஒரு நூற்றாண்டுக்குப் பின், எப்படி அதே வடிவம் பெற்றது! ஒரு நூற்றாண்டுக்குப் பின் நடக்கவிருப்பதை முன் கூட்டியே துல்லியமாக அறியும் தீர்க்க தரிசனத்தை ஜூல்ச் வெர்னே பெற்றிருந்தாரா என்ற கேள்விக்கு அறிவியலால் பதில் கூற முடியுமா?

இன்றைய உளவியல் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள உண்மை என்னவென்றால், மனித மனத்தின் ஒரு பகுதி, இடம் (space) காலம் (time), வடிவம் (form), அண்ட சராசரங்களோடு தொடர்பு கொண்டிருக்கிறது. நேற்றைய மற்றும் இன்றைய நிகழ்வுகளாலேயே, நாளைய நடப்புகள் உருவாக்கப்படுகின்றன. நேற்று, இன்று, நாளை ஆகியவற்றுள் ஒருமுறை சார்ந்த தொடர்பு இருக்கிறது. டாக்டர் லையல் வாட்சன் (Lyall Watson) என்னும் தலைசிறந்த அறிவியல் அறிஞர் கூறினார் நான்காவது பரிமாணம் (Fourth dimension ) என்பது தொடர்ச்சி அல்லது தொடர் நிகழ்வை குறிக்கிறது. இடம் (space) என்னும் நான்காவது பரிமாணம் ஒரே இடத்தில் எப்படி எங்கும் வியாபித்து இருக்கிறதோ, அது போல் காலம் (time) என்பதும் எல்லா இடத்திலும் வியாபித்திருக்க வாய்ப்புள்ளது. நான்காவது பரிமாணமாகிய இடத்தில் (space) ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவது எப்படி சாத்தியமாகி உள்ளதோ அதே போல் ஐந்தாவது பரிமாணமாகிய (fifth dimension) காலத்திலும் முன்னும் பின்னும் போவது சாத்தியமே. ஆனால், அதற்கு மிகப் பெரிய மனப்பயிற்சி தேவை.

தீர்க்க தரிசனம் என்று நம் முன்னோர் கூறியதை இன்று உளவியல் விஞ்ஞானம் முன் அறிதல் (precognition) என்று அழைக்கிறது. இப்படிப்பட்ட நிகழ்வுகளைக் காலம் மற்றும் இடம் இவற்றுக்கான சின்க்ரொனிசிட்டி (synchronicity) என்று 20 ஆம் நூற்றாண்டின் உளவியல் மேதை கார்ல் யுங் (carl jung) குறிப்பிட்டுள்ளார். எனவே, முக்காலும் உணர்தல் என்பது வெறும் கற்பனையா அல்லது சாதிக்கக் கூடியதா?