சனி, 31 ஆகஸ்ட், 2013

தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி!- -  சா. கந்தசாமி

 நன்றி :தினமணிஇந்திய அரசு 1954-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமியை அமைத்தது.
தன்னாட்சி பெற்றது. ஒவ்வொரு மொழியில் இருந்தும் உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவர். தலைவர் உண்டு. சாகித்ய அகாதெமியின் முதல்
தலைவராக அன்றைய பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு இருந்தார். பத்தாண்டுகள்
- தனது இறுதிக் காலம் வரையில் - தலைவராக இருந்த அவர் சாகித்ய
அகாதெமி விருது பெறவில்லை. அகாதெமி வழியாகத் தன் நூல்களை வெளியிட்டுக் கொள்ளவில்லை. சாகித்ய அகாதெமியின் பல இலக்கிய நோக்கங்களில் ஒன்று, ஆங்கிலம்
உள்பட இந்திய மொழிகளில் எழுதப்படும் சிறந்த
படைப்புகளுக்கு விருது வழங்குவது; அவற்றைப் பிற மொழிகளில்
மொழி பெயர்த்து வெளியிடுவது. ஒவ்வொரு மொழியிலும் இருக்கும்
அசலான படைப்புகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது.
நாடு முழுவதும் இலக்கியக் கருத்தரங்கு, கவிதை வாசிப்பு, கதை வாசிப்பு உள்பட இலக்கிய மாநாடுகள் நடத்துவது என்பதாகும்.
இலக்கியத்திற்காக இந்திய அரசு அளிக்கும் மிக உயர்ந்த விருது சாகித்யஅகாதெமி வழங்கும் விருதுதான்.அது ஒரு எழுத்தாளருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. சாகித்யஅகாதெமி விருது பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அடிக்கடி குற்றம் குறை கூறப்பட்டு வருகிறது. ஆனாலும்அது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சிறந்த நூற்களுக்கு மட்டுமே விருது வழங்கி வந்த சாகித்ய அகாதெமி, சமீபகாலமாக மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம், இளம் படைப்பாளர்விருது என்று தன் இலக்கியப் பரப்பை விரிவாக்கி உள்ளது. 2013, ஆகஸ்டு 23-இல் சாகித்ய அகாதெமியின் செயற்குழு கூட்டம் முதல்முறையாக சென்னையில் நடைபெற்றது. அதில், தமிழ், சமஸ்கிருதம், இந்தி,மைதிலி, சந்தாவி, மலையாளம், கன்னடம் போன்ற இருபத்திரண்டு மொழியினர் கலந்து கொண்டார்கள். இளம்படைப்பாளருக்கான விருதை யுவபுரஸ்கார் என முடிவு செய்தார்கள்.அதோடு தாய்மொழி படிப்புப் பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அது, சாகித்ய அகாதெமி என்பது விருது கொடுப்பது, புத்தகங்கள் பிரசுரம்செய்வது, கருத்தரங்குகள் நடத்துவது, வெளிநாடுகளுக்குச் சென்று வருவது போன்றவற்றை மட்டும் செய்து கொண்டிருக்கும் நிறுவனம் அல்ல. சமூகத்தின் தலையாய பிரச்னைகளைக் கூர்ந்து கவனித்து கருத்துகளைத் தைரியமாகச் சொல்லும் எழுத்தாளர்கள்  கொண்டது  என்பதையும் நிலைநாட்டியிருக்கிறது. 

சாகித்ய அகாதெமி தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் கூடி தாய்மொழியில் படிப்பைக் கொடுங்கள் என்று மாநில அரசுகளைக்
கோரியிருப்பது    தற்செயலாக நடந்ததுதான். ஆனால், சரியான இடத்தில்தான்
நிகழ்ந்து இருக்கிறது. மொழிகள் பற்றிய அம்சங்களில்
தமிழ்நாடு எப்போதும் முன்னே இருப்பதாகும். தமிழ்மொழி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும் இருந்து வருகிறது. அது தனித்து இயங்கும்
தன்மை கொண்ட மொழி. திராவிட மொழி குடும்பத்தின் மூத்தமொழி.
அது இன்னொரு மொழியில் இருந்து கிடைத்தது அல்ல; அதன் எழுத்தும்,
இன்னொரு எழுத்து வடிவத்தில் இருந்து பெற்றதில்லை. தொன்மையான அசலான படைப்பிலக்கியங்களான சங்கப் பாடல்கள்,சிலப்பதிகாரம், திருக்குறள், தேவாரம், திருவாசகம், அருட்பா, பாரதியார் கவிதைகள், புதுமைப்பித்தன் கதைகள் என்று இழையறாத தொடர்
படைப்பிலக்கியங்கள் கொண்டது. பழைமையின் தொடர்ச்சியாக ஜெயகாந்தன்,
அசோகமித்திரன் போன்றோர் எழுதி வருகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கிறது. ஆனால்,இங்கு முப்பதாண்டு காலமாகத் தமிழ் பெருமளவில் தடைபட்டுவிட்டது.
மழலையர் பள்ளியில் இருந்து கல்லூரிப் படிப்பு வரையில் தமிழ் இல்லை.தமிழ்நாட்டில் ஒரு மாணவனோ - மாணவியோ தமிழ்
மொழி ஒரு எழுத்தைக்கூட படிக்காமல் முனைவர் பட்டப்
படிப்பையே முடித்துக்கொண்டு விடலாம். இந்தியாவில் வேறு பல மாநிலங்களில் இது சாத்தியம் இல்லை. ஏனெனில்
அவை மூன்று மொழி மாநிலங்கள். அவர்களின் படிப்பில்
தாய்மொழி சேர்ந்து விடுகிறது. எதன் பொருட்டும் மொழிவாரி மாநிலங்களின் - எந்த மொழியைத்
தாய்மொழியாக, பேச்சுமொழியாக, எழுத்து மொழியாகக் கொண்டவர்கள்
அதிகம் வசிக்கிறார்களோ, அந்த மாநிலங்களின் - மாநில மொழியே படிப்பில்
இருந்து துரத்தப்படுவதைத்தான் சாகித்ய அகாதெமி கண்டிக்கிறது. முதல் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை தாய்மொழியில்
படிப்பதற்கு வசதி செய்து கொடுங்கள்; படிக்கச் செய்யுங்கள்
என்கிறது அகாதெமி. அதில் மொழி திணிப்பு கிடையாது. அசலான படிப்பு என்பது பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அடிப்படையான
படிப்புதான். அதற்கு மேலான படிப்பு என்பது பயிற்சி. படிப்பின் வழியாகப்
பெறுவதுதான். படிப்பு என்பதே பயிற்சி ஆகி விட்டதால் - அதுவே படிப்பு -
கல்வி என்றாகிவிட்டது. உலகத்தின் மகத்தான விஞ்ஞானிகள், படைப்பு எழுத்தாளர்கள், கலைஞர்கள்,
சமூகச் சிந்தனையாளர்கள் எல்லாம் படித்து மேதையானவர்கள். அவர்களின்
மேதைமையை அவர்கள் கண்டுபிடிப்புகள் - செயற்பாடுகள் - படைப்புகள்
வழியாக நிலைநாட்டியிருக்கிறார்கள். உலகத்திலேயே மகத்தான ஞானி என்று போற்றப்படும் புத்தர் மகாதி என்ற
மக்கள் மொழியில்தான் பேசினார்; அவர் ஒரு வரிகூட எழுதி வைக்கவில்லை. சாக்ரட்டீஸ் கிரேக்க மொழியில்தான் பேசினார். மனிதர்களின்
கண்டுபிடிப்புகளிலேயே உச்சமென சொல்லப்படும் மொழிகளையும்
எழுத்துகளையும் அச்சிடும் முறையைக் கண்டுபிடித்த ஜோனான்
கூடன்பர்க்கிற்கு ஜெர்மன் தவிர வேறு மொழியே தெரியாது. அறிவு எந்த மொழியிலும் இல்லை. ஆனால், அறிவை எந்த மொழியின்
மூலமாகவும் பெறலாம். வெளிப்படுத்தலாம். ஆனால், அதில்
தாய்மொழிக்குத்தான் முதல் இடம். ஏனெனில் தாய்மொழி இயல்பானது.
அது ஒருவனுடைய வாழ்க்கை, கலாசாரம், பண்பாடு ஆகியவை சார்ந்தது.
பரம்பரையான அம்சங்கள் - சொல்லத் தெரிந்ததும் சொல்ல முடியாததும்
சொல்லக்கூடாததும் - தாய்மொழியோடு சேர்ந்து வருகிறது. ஆகையால்தான் உலகம் முழுவதிலும் தாய்மொழியில் படிக்க வேண்டும்
என்று போராட ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒரு மனிதனிடம் இருக்கும் மகத்தான
அறிவை தாய்மொழி வழியாகவே துல்லியமாகச் சொல்ல முடிந்திருக்கிறது.
அதுவும் சரித்திரமாக இருக்கிறது. உலகத்தின் மகோன்னதமான
படைப்பிலக்கியங்களையெல்லாம் தாய்மொழியில்தான்
படைத்து இருக்கிறார்கள். அறிவியல், தத்துவக்
கட்டுரைகளை தாய்மொழியில்தான் எழுதியிருக்கிறார்கள். அவற்றை அந்தந்த மொழியில்தான் படிக்க வேண்டும். அதற்காக, பல மொழிகள்
கற்க முடியாது. தாய்மொழியில் மொழிபெயர்த்து படிப்பதுதான்
இயல்பானது. மொழி பெயர்ப்பில் விட்டுப்போனதை தாய்மொழிப்
படிப்பு கொடுத்து விடுகிறது. சாகித்ய அகாதெமி சரியான நேரத்தில் எல்லாத் தாய்மொழிகளுக்கும்
ஆதரவாகக் குரல் கொடுத்து இருக்கிறது. அது வேறு யார் காதில்
விழுகிறதோ இல்லையோ, தமிழ் மக்களின், தமிழ்நாடு அரசின் காதில் விழ
வேண்டும். ஏனென்றால், தாய்மொழிக்காகத் தொடக்கம் முதல் குரல்
கொடுப்பவர்கள் நாம்தானே!
 கட்டுரையாளர்: எழுத்தாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக