சனி, 24 ஆகஸ்ட், 2013

இணையான படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கும் ஆசிரியர் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவு

 பட்டதாரி ஆசிரியர் பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதிக்கு இணையான படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கும் பணி வழங்கிடுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
    இது தொடர்பாக எஸ்.ஹசினா பானு உள்ளிட்ட 17 பேர் மனு தாக்கல்செய்திருந்தனர். ஹசினா பானு தாக்கல் செய்த மனுவில், நான் 2008-ஆம்ஆண்டில் பி.ஏ. ஆங்கிலம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) படிப்பில் பட்டம்பெற்றேன். பின்னர் 2009-ஆம் ஆண்டில் பி.எட்., (ஆங்கிலம்) பட்டம் பெற்றேன்.பி.ஏ. ஆங்கிலம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) பட்டம், பி.ஏ. ஆங்கிலம்பட்டத்துக்கு இணையானது என்று 2009-ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம் அளித்த சான்றிதழின் அடிப்படையில்வேலைவாய்ப்பு அலுவலத்தில் எனது பட்டங்களை பதிவு செய்தேன்.இந்நிலையில் பி.ஏ. ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணி நியமனுத்துக்காக சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு வருமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அழைத்ததன் அடிப்படையில், 15.11.2010 அன்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்குச் சென்றேன். எனினும் நான் பெற்ற பி.ஏ. ஆங்கிலம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) பட்டம் பி.ஏ. ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்
பணிக்கு தகுதியானது அல்ல என்று கூறி எனக்கு பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்து விட்டது. நான் பெற்ற பி.ஏ. ஆங்கிலம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) பட்டம் பி.ஏ. ஆங்கில பட்டத்துக்கு இணையானது என்று பெரியார் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளது. மேலும் 2010-ஆம் ஆண்டு வரை பி.ஏ. ஆங்கிலம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) பட்டம் பெற்றவர்களும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், எனக்கு பணி வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுப்பது சட்ட விரோதமானது. ஆகவே, எனக்கு பணி வழங்கிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார். இதேபோல் மற்றொரு மனுதாரர் தாக்கல் செய்த மனுவில், நான் பி.எஸ்.சி. (புள்ளியியல்), எம்.எஸ்.சி. (புள்ளியியல்) மற்றும் பி.எட். (கணிதம்) ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 8.1.2012 அன்று முதுநிலை கணிதப் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்காக நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் கலந்து கொண்டேன். எனினும் நான் பெற்ற புள்ளியியல் பட்டங்கள் அந்தப் பணிக்கு தகுதியில்லாதவை என்று கூறி எனக்கு பணி வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்து விட்டது. எம்.எஸ்.சி. (புள்ளியியல்) படிப்பில் பெறும் பட்டமும், எம்.எஸ்.சி. (கணிதம்) படிப்பில் பெறும் பட்டமும் ஒன்றுக்கொன்று இணையானவை. இதற்கு முன்பு புள்ளியியல் பாடத்தில் பட்டம் பெற்ற பலர் கணித
ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, எனக்கு பணி வழங்க  மறுப்பது சரியல்ல என்று அவர் மனுவில் கூறியிருந்தார். இதே போன்றகோரிக்கைகளோடு பிற மனுதாரர்களும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
 இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி டி.ஹரிபரந்தாமன், மனுதாரர்கள் அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். மனுதாரர்களை எந்தப் பணி நியமனத்துக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அழைத்ததோ, அந்தப் பணிகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியானது மனுதாரர்கள் பெற்றுள்ள பட்டங்களுக்கு இணையானவை என்று ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது. ஆகவே, பணி நியமனம் பெறும் உரிமை மனுதாரர்களுக்கு உள்ளது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார் 

Source: dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக