வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

தேர்வுகளில் சிறப்பான வெற்றி......FOR SCHOOL STUDENTS

கண்களுக்கு வண்ணங்கள், வடிவங்கள் பிடிக்கும்

உறவினர் ஒருவரின் விருந்து அழைப்பை ஏற்று அவர் வீட்டிற்குச் செல்கிறீர்கள். சிறப்பான கவனிப்பு. உங்களுக்குப் பிடித்த உணவு வகைகள். சுவையும், மணமும் அதிகமாக உண்ண வைக்கிறது. சாப்பிட்டுவிட்டு சற்று ஓய்வாக வரவேற்பு அறையில் ‘சோபா’ வில் அமர்கிறீர்கள். இதமான காற்றை வீசுகிறது. மின்விசிறி. உங்கள் முன்னால் ஒரு மேசையின் மேல் ஓர் ஆங்கில இலக்கண புத்தகம் (English Grammer Book) ஒரு வரலாற்றுப் புத்தகம், அல்ஜிப்ரா புத்தகம், ஆனந்த விகடன், குமுதம், ஒரு படக்கதை ( Comics Book) வைக்கப்பட்டுள்ளன. + படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் அந்த நேரத்தில் எந்த புத்தகத்தை எடுப்பீர்கள்?

பெரும்பாலானவர்கள் (70%க்கு மேல் ) படக்கதைப் புத்தகத்தையே எடுப்பர். மற்றவர்கள் ஆனந்த விகடன் அல்லது குமுதம் புத்தகத்தை தேர்ந்தெடுப்பர். ஏன் மற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை?

அளவிற்கு அதிகமான, சுவையான விருந்து உண்ட களைப்பு, ஜீரண உறுப்புகளுக்கு மூளை இட்ட செயல்படுத்த அங்கு அதிக இரத்த ஓட்டம், இதமான இருக்கை, காற்று, கண்கள் சொருகும் அவ்வேளையில், அல்ஜிப்ரா, இலக்கணத்தில் மனம் இலயிக்குமா? ஆனால் வண்ணப்படங்களை பார்க்க மனம் விரும்பும்.

‘படம் பார்த்து கதை சொல்’ மூலம் கற்ற கதைகள் இன்னும் கண்களை மூடினால் படமாக ஓடுகிறதல்லவா? கண்களுக்கு வண்ணங்கள், வடிவங்கள் பிடிக்கும். அவற்றின் மூலம் படிப்பதும் பதிய வைப்பதும் எளிதானது.

‘நினைவு வரைபடம்’ என்றால் என்ன?

பொதுவாக பாடங்கள் அலகு (Unit)வாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஓர் அலகு என்பது 30 லிருந்து 40 பக்கங்கள் கொண்டதாக இருக்கும். அப்பக்கங்களில் உள்ள முக்கிய செய்திகளை, மறந்து போகக்கூடிய வார்த்தைகளை, சமன்பாடுகளை, படங்களை, சூத்திரங்களை ஒரேபக்கத்தில் உள்ளடக்கியது தான் நினைவு வரைபடம். விரைந்து படித்தலுக்கும், விரைந்து திருப்புதலுக்கும் இது மிகவும் பயன்படும். கண்களுக்கு பிடித்த வண்ணங்களில், வடிவங்களில், படிப்பதால், பார்ப்பதால் மனம் ஒன்றும். அதனால் எளிதில் பதியும்.

வகுப்பறையிலிருந்து ஆரம்பம்

வகுப்பறையில் ஆசிரியர் பாடங்களை நடத்தும்போது கண்களால் பாருங்கள். காதுகளால் கேளுங்கள். பார்த்தவை கேட்டவைகளில் சில/பல உங்களை அறியாமலேயே உங்கள் மூளையில் பதியும். பாடம் நடத்தும், ஆசிரியர் மேல் மதிப்பு, மரியாதை, அன்பு வையுங்கள். ‘இந்த ஆசிரியர் மற்ற மாணவர்களுக்கு முன்னால் என்னை அவமதித்து விட்டார். இவர் எனக்கு எதிரி’ என்று ஓர் ஆசிரியரை நீங்கள் நினைத்தால் அப்பாடம் உங்களுக்கு வேம்பாய் கசக்கும்.

தூண்டக்கூடிய வார்த்தைகள் (Stimulating Works)

பாடம் நடத்தும் போதே சில சந்தேகங்கள் வரலாம். அவற்றை வகுப்பறையிலோ அல்லது ஆசிரியர் ஓய்வறையிலோ கேட்டுத் தெளிவு பெறுங்கள். வீட்டிற்கு வந்த பின்பு அன்று நடத்திய பாடங்களை, அதற்கான புத்தகங்களை எடுத்து அவசியம் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும்போது கூர்முனை கொண்ட பென்சிலால் (Microtip pencil) முக்கியமான, புதிதான, மறந்துபோகக்கூடிய வார்த்தைகளை, சமன்பாடுகளை, சூத்திரங்களை அடிக்கோடு இடவும். அடிக்கோடிட நீங்கள் தெரிவு செய்பவை தூண்டக்கூடிய முக்கியமான வார்த்தைகளாக இருப்பது மிகவும் அவசியம். ஒரு பக்கத்தில் அத்தகைய வார்த்தைகள் பத்துக்குள் இருக்கும்.

புரிந்து படியுங்கள்

படிக்கும் போது சில புரியாமல் இருக்கலாம். படித்த உங்கள் பெற்றோர்/உடன் பிறந்தோர்/ நண்பர்கள்/ ஆசிரியர்கள் மூலம் சந்தேக்களை நீக்கிக் கொள்வது அவசியம். புரியாமல் படிக்கும்போது பதிவதும், பதிலைப் பெறுவதும் சிரமத்திற்குள்ளாகும்.

ஒரு மாணவர் ஒரு பாடத்தில் பலவற்றைப் புரியாமலேயே மனப்பாடம் செய்து +2வில் 200/200 மதிப்பெண் பெற முடியும்.

ஆனால் நுழைவுத் தேர்வில் நன்கு புரிந்து படித்தோரால் மட்டுமே மிக நல்ல மதிப்பெண்கள் பெற இயலும். உயர் படிப்பிற்கும் அதுவே உறுதுணை புரியும்.

வகுப்பில் நடகும் ‘அலகுத் தேர்வுகள்’: (Unit Tests)

வகுப்பாசிரியர் ஓர் அலகை முடித்துவிட்டு அதற்கான வகுப்புத் தேர்வுக்கு நாள் குறித்து விட்டார். நீங்கள் முன்னரே மேலோட்டமாக படித்திருந்தாலும் இப்போது மிகுந்த கவனத்துடன் படிப்பீர்கள். சொலிப் பார்ப்பீர்கள். எழுதிப் பார்ப்பீர்கள். மறுநாள் அதிகாலையில் எழுந்து மீண்டும் படித்தல், எழுதிப் பார்த்தல் என்று முழுமையாக உங்களைத் தயார் செய்கிறீர்கள். இப்போது அந்த அலகு அத்துப்படியாகி விட்டது. இப்போதுதான் நினைவு வரைபடத்தை வரைய ஆரம்பிக்க வேண்டும்.

முதல் தடவை படிக்கும்போது முக்கியமானவற்றை பென்சிலால் கோடிட்டீர்கள். இப்போது மீண்டும் அவைகளைப் பாருங்கள். சுமாராக 10 வார்த்தைகள் இருக்கும். வகுப்புத் தேர்வை எழுதி முடித்த பின்னர் அப்பக்கத்தைப் பார்க்கும் போது 5 வார்த்தைகளே போதுமானதாக இருக்கும். மிக, மிக முக்கியமான அவ்வார்த்தைகள் / சமன்பாடுகள்/ சூத்திரங்கள் மட்டும் தெரிந்தால் மட்டும் போதும். அந்தப் பக்கச் செய்திகளை நினைவில் கொண்டுவர முடியும். அவற்றைத் தவிர மொத்த அலகிற்கும் என அதிகபட்சம் 100 வார்த்தைகள் தான் மிக, மிக முக்கியமானதாக இருக்கும். அவற்றை மட்டும் தெரிவு செய்யவும்.

‘நினைவு வரைபடம்’ வரைதல்:

எந்த அலகிற்கு நினைவு வரைபடம் வரைகின்றோமோ அந்த அலகின் பெயரை மையப்படுத்தி, முப்பரிமாணத்தில் (3D) ஒரு செவ்வகம் வரைந்து அதனுள் எழுத வேண்டும். அதை வண்ணத்தில் அலங்கரிக்க வேண்டும். அதிலிருந்து பிரிந்து செல்லும் கிளைகளாக சதுரம், செவ்வகம், முக்கோணம், வட்டம், நீள் வட்டம் , சாய் சதுரம், செவ்வகம், போன்ற வடிவங்களை ஒவ்வொரு வண்ணத்தால் ( Colour Quitines) அமைக்க வேண்டும்.

கண்களுக்கு வண்ணங்கள், வடிவங்கள் பிடிக்கும் எனவே தான் இந்த ஏற்பாடு.

இந்த வெவ்வேறு வடிவங்களில், நாம் அந்த அலகிற்கான பக்கங்களில் இறுதியில் தெரிவு செய்துள்ள கோடிட்ட தூண்டக்கூடிய வார்த்தைகள், சம்பாடுகளின் முக்கிய வரிகள், சூத்திரங்கள், விதிகள், பெயர், வருடம், தேதி, படங்கள் போன்றவற்றை அழகாக எழுத வேண்டும். விதிகளை மட்டும் வரிகளில் எழுதலாம். மற்றபடி வார்த்தைகள் தான் இருக்க வேண்டும்.

இந்த நினைவு படத்தை தினசி பார்க்க வேண்டும். கண்களை மூடி சிவப்பு நிற செவ்வகத்தில் உள்ளவை என்ன, பச்சை நிற முக்கோணத்தில் உள்ளவை என்ன, நீல நிற நீள் வட்டத்தில் உள்ளவை என்ன என்று பார்க்க வேண்டும். மீண்டும், மீண்டும் நன்கு தெரியும் வரை, நினைவிற்கு வரும் வரை பார்க்க வேண்டும்.

@ நிலையிலிருந்து நினைவு வரைபடச் செய்திகளைப் பதியச் செய்வது அவசியம்.

நினைவு வரைபடம் வரைந்த பின்னர் தினசரியும், ஒரு வாரத்திற்குப் பின்னர் வாரம் ஒரு முறையும், அதன் பின்னர் மாதம் ஒரு முறையும் அதை அவசியம் பார்க்க வேண்டும். இதைப் போலவே அப்பாடத்தில் உள்ள மற்ற அலகிற்கும் நினைவு வரைபடங்கள் வரைந்து, பார்த்து பதியச் செய்ய வேண்டும். அவற்றை ஒரு கோப்பில் (File) போட்டு வைக்கவும். சுமார் 300 பக்கங்கள் உள்ள ஒருர பாடப்புத்தகதின் 10 அலகிற்கும் 10 வரைபடங்கள் தயாரித்து முன்னர்த சொன்னது போல பார்த்து @ நிலையில் பதிவு செய்து விட்டால் அந்த்ப் பாடம் அப்படியே நினைவில் நிற்கும்.

300 பக்கங்கள் 10 நினைவு வரைபடங்களில் அடங்கிவிட்டது. விரைந்து படிக்க இவை மிகவும் உதவும்.

ஒவ்வொரு பாடத்திற்கும் மேலே சொன்னது போல் நினைவு வரைபடங்கள் தயாரித்து அதற்கான தனித்தனி கோப்புகளில் போட்டுவிட வேண்டும். வடிவங்களையும், வண்ணங்களையும் நம் மனதிற்கேற்ப, விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக