வியாழன், 6 மார்ச், 2014

வாழ்க்கையில் வெற்றிபெற தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் அவசியமாகும்.

பட்டம் என்பது கல்வித்தகுதியை மட்டுமே கொடுக்கும் என்பதால் வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாசன் சுந்தர்ராஜன் பேசினார்.
பட்டமளிப்பு விழா
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 13–வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பெரியார் கலையரங்கில் நேற்று மதியம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான ரோசய்யா தலைமை தாங்கி பல்கலைக்கழக அளவிலும், கல்லூரிகள் அளவிலும் முதலிடம் பெற்ற 114 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களையும், இதர மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்கினார். இதில் திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாசன் சுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:–

2020–ல் இளைஞர் சக்தி
'உலக நாடுகளின் புள்ளி விபரங்கள்படி 2020 முதல் 2030 ஆம் ஆண்டில் இந்தியாவில் தான் அதிகளவில் இளைஞர் சக்தி இருக்கும். முந்தைய காலங்களில் இலக்கியம், கலை, அறிவியல் சம்பந்தமான பாடங்கள் மாணவர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றன. தற்போது வேலைவாய்ப்பு பெறும் வகையில் அறிவுசார் சமூகத்தில் அவர்களுடைய ஆக்கத்தை உரிய முறையில் உருவாக்கும் வகையில் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இன்றைய காலக்கட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் அதற்குரிய வகையில் அமைவதில்லை. அதனால் காணொலி காட்சிகள் மூலம் நடைபெறும் வகுப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதன்மூலம் ஒரு ஆசிரியர் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் குழுமியுள்ள மாணவர்கள் இடையே உரையாற்ற முடியும். மேலும், விரைவான தொழில்நுட்ப மாற்றங்களினாலும், ஆசிரியர்களின் கற்பித்தல் பாதிக்கப்படுகிறது. அதற்காக ஆசிரியர்களும், கல்வி பெற வேண்டிய அவசியமாகிறது.

வளர்ந்து வரும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தால் ஆசிரியர்களும், மாணவர்களும் தகவல் தொடர்பு சார்ந்த பயிற்சிகளை எடுத்துக்கொள்வது அவசியமாகும். எழுச்சி பெற்ற கலை, அறிவியல் படிப்புகள் இன்றைய வேலைவாய்ப்பு சூழலும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது என்றே கூறலாம்.
முன்பெல்லாம் கலை, அறிவியல் சார்ந்த வேலைவாய்ப்புகள் கல்வி, ஆராய்ச்சி, வங்கி மற்றும் அலுவலகங்களில் கிடைக்கப்பெற்றன. அதன்பிறகு மருத்துவம், பொறியியல் சார்ந்த படிப்புகளும், வேலைவாய்ப்புகளும் முக்கியத்துவம் பெற்றது. தற்போது மீண்டும் கலை, அறிவியல் படிப்புகள் சார்ந்த வேலைவாய்ப்புகள் எழுச்சி பெற்றுள்ளன.

இதுதவிர, ஊடகவியல், மருத்துவச் சுற்றுலா, ஆடை வடிவமைப்பு, ஓட்டல் போன்றவை சார்ந்த திறமைகள் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கின்றன. அதன்மூலம் கலை அறிவியல் சார்ந்த படிப்பு படித்தவர்கள் தொழிற்சாலைகளில் அதிகளவில் வேலையமர்த்தப்படுகிறார்கள்.

கல்வித்தகுதி பட்டங்கள் மூலம் வழங்கப்படும் போது திறமைசார்ந்த பயிற்சிகள் சான்றிதழ்கள் மூலம் அங்கீகாரம் பெறுகின்றன. அதன்மூலம் வேலை தேடும்போது நிறுவனங்கள் அவருடைய திறமைகளை எளிதாக மதிப்பிட இயலும். அதற்காக நாடு முழுவதும் ஒருங்கிணைந்த திறன் வளர்ச்சிக்கும் மையங்களை உருவாக்கி சான்றிதழ்கள் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
புதுமை, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவு ஆகிய மூன்றும் உயர்கல்வியின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாகும். தொழில்நுட்பங்களை மேற்கொள்ளும்போது உரிய தொழில்நுட்பத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும்.

திறமைகளை வளர்த்துக்கொள்ள...
படித்து பெறுகின்ற பட்டங்கள் வெறும் கல்வித்தகுதியை மட்டுமே கொடுக்கின்றன. ஆனால் எழுத்து மற்றும் பேச்சுத்திறமை இருந்தால் மட்டுமே அந்தக் கல்வி தகுதிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் என்பதை அனைவரும் உணரவேண்டும். இருப்பினும், வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்து கொள்வது அவசியம் ஆகும். அப்போது தான் வாழ்க்கையில் வெற்றிபெறமுடியும். அதற்கு தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் அவசியமாகும்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக