புதன், 3 ஜூன், 2015

அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தினால் நூலகம், கேன்டீன், சிறப்பு வகுப்புகள் வசதி கிடையாது தனியார் பள்ளியை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டம்


சென்னை அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை செலுத்தினால் மாண வர்களுக்கு நூலகம், கேன்டீன், சுற்றுலா, சிறப்பு வகுப்புகள் உள்ளிட்ட வசதிகள் கிடையாது என்ற தனியார் பள்ளியின் அறிவிப்பை கண்டித்து பெற்றோர் கள் அப்பள்ளியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
சென்னை அடையாறு காந்தி நகரில் இயங்கி வருகிறது பால வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றி வரும் இந்த பள்ளியில் 1,400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஏற்கெனவே இப்பள்ளி நிர்வாகம், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும், அது தொடர்பான புகாரின் பேரில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை பெற்றோரிடம் திருப்பிக் கொடுக்குமாறு நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலு கமிட்டி உத்தர விட்டதாகவும் கூறப்படுகிறது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், அண்மையில் பள்ளி நிர்வாகம் அனுப்பியிருந்த சுற்றறிக்கை பெற்றோரை அதிர்ச்சி அடையச் செய்தது. அந்த சுற்றறிக்கையில், "அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை செலுத்தினால் அத்தகைய மாணவர்களுக்கு தினமும் நாலரை மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடக்கும். அவர்களுக்கு இருக்கை வசதி மட்டுமே கிடைக்கும். நூலகம், கேன்டீன், சுற்றுலா, சிறப்பு வகுப்புகள் உள்ளிட்ட வசதிகள் கிடைக்காது. பள்ளி வசூலிக்கும் கட்டணத்தை செலுத்தி னால் மட்டுமே மேற்கண்ட வசதிகள் கிடைக்கும்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த 2 வாய்ப்புகளில் ஒன்றை தேர்வுசெய்து விருப்பத்தை தெரிவிக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். மாணவர்கள் மத்தியில் 2 விதமான கல்விச்சூழலை உருவாக்கும் இந்த சுற்றறிக்கையைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 
இந்த நிலையில், மாணவ-மாணவிகளின் பெற்றோர் சுமார் 400 பேர் நேற்று காலையில் அந்த பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவர்கள் இடையே வேறுபாட்டை உருவாக்கும் இந்த விதிமுறையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களுடன் பேசி சமாதானப்படுத்தினர்.

 பெற்றோரின் போராட்டம் குறித்து பள்ளி முதல்வரின் கருத்தை அறிய பள்ளி அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, முதல்வர் உள்பட ஆசிரியர்கள் யாரும் அலுவலகத்தில் இல்லை என்று பள்ளியின் ஊழியர்கள் தெரிவித்தனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக