திங்கள், 22 ஜூன், 2015

TRB PG TAMIL :தமிழ் இலக்கிய விமர்சனத்தின் வரலாறு(History of Tamil Critism)


தமிழ் இரண்டாயிரம் வருட இலக்கிய மரபினைக் கொண்டது. இலக்கியம் குறித்த தமிழ்ச்சிந்தனை மரபும் இதற்கிணையானது. தமிழ் இலக்கிய மரபின் துவக்கப் புள்ளியான தொல்காப்பியத்திலேயே இலக்கியம் குறித்த தெளிவான சிந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியம் மொழிக்கு மட்டுமன்று இலக்கிய வடிவங்களுக்கும், இலக்கிய உள்ளடக்கத்திற்கும் விதிகளைக் குறித்துள்ளது. ஏற்கப்பட்ட ஒழுங்கிலிருந்தே விதிகள் தோன்றக் கூடும். இவ்வகையில் தொல்காப்பியத்திற்கு முன்பே இலக்கிய மரபும், இலக்கிய சிந்தனை மரபும் இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியத்திற்குப்பின் தமிழ் இலக்கிய சிந்தனை மரபு காலத்திற்கேற்ற வளர்ச்சியையும் மாறுதல்களையும் பெற்று வந்துள்ளது. வடமொழி இலக்கிய சிந்தனை மரபு தமிழ் மரபில் பெரும் பாதிப்பை நிகழ்த்தியுள்ளது. யாப்பு குறித்த சிந்தனையும் முறையான வளர்ச்சியினைக் கண்டுள்ளது. யாப்பில் இனங்காண முடிகிற மாறுதல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. மாறி வந்த இலக்கிய வடிவங்கள் குறித்த சிந்தனையைப் பிற்காலப் பாட்டியல் நூல்கள் முன்னெடுத்துச் சென்றுள்ளன.


தமிழ் இலக்கிய சிந்தனையை ஆராய்ந்து சமகால மொழியில் தொகுக்கும் முயற்சியில் தமிழ் போதிய முன்னேற்றத்தை அடையவில்லை யென்றே குறிப்பிட வேண்டும். தமிழ் யாப்பின் வளர்ச்சி குறித்து சோ.ந. கந்தசாமி விரிவாக ஆராய்ந்துள்ளார். அதுபோல் திராவிட யாப்புக்குறித்து எஸ்.எஸ். சுப்ரமணியம் தன் ஆய்வை முன்வைத்துள்ளார். இந்த ஆய்வுகளுக்கு நிகரான ஆய்வைத் தமிழ் இலக்கிய சிந்தனை மரபின் பிற துறைகளில் காண இயலவில்லை.

உரையாசிரியர்கள் தமிழ் இலக்கியப் படைப்புகளைத் தங்கள் காலத்திற்கு எடுத்து வந்துள்ளனர். வாசகர்களை முன்னிறுத்தி விளக்கியுள்ளனர். உரையாசிரியர்களை விமர்சகர்களாக ஏற்கக்கூடுமா என்ற விவாதம் தமிழில் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது. தமிழ்ப் படைப்புச்சூழலில் உரையாசிரியர் களைக் குறித்து எதிர்மறையான மதிப்பீடுகளே இருந்து வந்துள்ளன. புதுமைப்பித்தன் 'அன்றிரவு' சிறுகதையில் தமக்குள் முரண்பட்டுத் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருப்பவர்களாகவே உரையாசிரியர்களைக் கதைஉலக மனிதர்களாகச் சித்திரித்துள்ளார். தமிழ்ப் படைப்பாளிகளில் தமிழ் இலக்கிய மரபு குறித்து விரிவும், தெளிவும் ஒருங்கே கொண்டப் புரிதலையுடையவர் புதுமைப்பித்தன் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர ராமாசாமியும், வெங்கட் சாமிநாதனும் இலக்கியச் சிந்தனை மரபில் உரையாசிரியர்களின் இடம் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளனர். வெங்கட் சாமிநாதன் தமிழரின் இலக்கியச் சிந்தனையைக் குறித்தே ஐயம் கொண்டுள்ளார். உரையாசிரியர்களை விமர்சகர்களாக ஏற்க மறுக்கிறார். ஜெயமோகன் மட்டுமே உரையாசிரியர்களை, இலக்கியச் சிந்தனை யாளர்களாக இனம்காண்கிறார். "உரை என்பது நம் மண்ணுக்கு உரிய ஒருவகை விமரிசன வாசிப்பு என்று கொள்ளுதலே சரியானது" என தன் மதிப்பீட்டை வெளிப்படையாக முன்வைத்துள்ளார். அதற்கானக் காரணங்களையும் விளக்கியுள்ளார். உரையாசிரியர்கள் மேற்கோள்களாக முன்வைத்துள்ளக் கவிதை வரிகளின் இலக்கியத் தரத்தைச் சுட்டியுள்ளார். 'தமிழ் விமர்சன முதல்வர்'களாக மதிப்பிடவும் செய்கிறார். தமிழ்ப் பேராசிரியர்கள் பெரும்பான்மையோர் உரையாசிரியர்களை விமர்சகர் களாகவே இனம்கண்டுள்ளனர்.

உரையாசிரியர்கள் பெரும்பாலும் பத்தாம் நூற்றாண்டையும் அதனைத்தொடர்ந்து வரும் நான்கு நூற்றாண்டுகளையும் சார்ந்தவர்கள். உரைகள் தோன்றுவதற்கானக் காலச்சூழலும், தேவையும் இருந்தது. உரையாசிரியர்கள் ஓர் இலக்கியச் சிந்தனை மரபின் தொடர்ச்சியாகத்தான் இருந்தாக வேண்டும். இலக்கியச் சிந்தனையே இவர்களிடமிருந்துதான் தோற்றம் கொண்டது என்பதல்ல. சங்கப்புலவர்களில் முதல்தலைமுறையைச் சார்ந்த சாதனையாளர்களைத் தொடர்ந்து வந்த தலைமுறைகளைச் சார்ந்த சங்கப் புலவர்கள் தங்கள் பாடல்களில் புகழ்ந்துள்ளனர். அவர்கள் சுட்டிய சாதனையாளர்களை, சாதனையாளர்களாக சமகாலத்திலும் ஏற்க முடிகிறது. இலக்கியத்தர அடிப்படையிலானத் தெரிவு அவர்களிடம் இருந்துள்ளது. இத்தேர்விற்கான காரணங்களைக் குறித்த வெளிப் படையான விவாதங்கள் மொழியில் பதிவுப் பெறவில்லை. மொழியில் பதிவு பெறாதக் காரணத்தினால் சிந்தனை மரபே இல்லை என்றாகி விடாது. குறிப்பிட்டுச் சொல்லும்படியான இலக்கியத்தரம் கொண்ட படைப்புகளே உரைகளைப் பெற்றுள்ளன. சிலப்பதிகாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட உரைகள் உள்ளன. மணிமேகலை, உரையைப் பெறவில்லை. இதற்கு சமய உணர்வை மட்டுமே காரணமாகச் சுட்டமுடியாது. நச்சினார்க்கினியர் பதிமூன்றாம் நூற்றாண்டில் சீவக சிந்தாமணிக்கு உரை செய்துள்ளார். அவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் அல்ல. சிந்தாமணி சமண சமயக்காப்பியமே.

உரையாசிரியர்களின் சமகால இலக்கியம் மரபாலும், மொழி நடையாலும் அவர்கள் உரை செய்த இலக்கியங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. சமகால வாசகருக்கு இந்த இடைவெளிகளைக் கடந்து, நூற்களை அணுகுவதில் சிக்கல்கள் இருந்திருக்க வேண்டும். உரையாசிரியர்கள் சிக்கல்களுக்கானத் தீர்வை முன்வைத்துள்ளனர். சங்க இலக்கியத்தையும், சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் இனம்கண்டு வாசிக்கும் வாசகர்கள் உரையாசிரியர்களின் காலத்திலும் இருந்துள்ளனர். இவர்களிடம் தர உணர்வு செயல்பட்டுள்ளதை உறுதியாகக் கூறமுடியும். உரையாசிரியர்கள் தேர்ந்த நூல்களை இனம்கண்டு சமூகத்திற்கு உணர்த்தும் பணியை ஆற்றவில்லை. இலக்கியத்தரத்தின் அடிப்படையில் ஒரு சமூகம் பாதுகாத்த இலக்கியச் செல்வங்களை சமகால வாசகர் வாசிக்க உரையாசிரியர்கள் துணைசெய்கின்றனர். உரையாசிரியர்களை இலக்கிய ஆசிரிய மரபின் முன்னோடிகளாகக் குறிப்பிட வேண்டும். சமகால இலக்கிய ஆசிரியர் களிலிருந்து வேறானவர்கள், இவர்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கே உரித்தான தனித்தன்மைகள் உண்டு. பிரதிகளின் பொருள் உற்பத்தியில் கவனம் கொள்கின்றனர். தாங்கள் கண்டுபிடித்த வழிமுறைகளையும் கையாள்கின்றனர். நூல்களின் சிறப்பை மட்டுமே புலப்படுத்தும் நோக்கம் இவர்களுடையது. இலக்கியத்தரமானதாக சமூகம் தேர்வு செய்த நூல்களைச் சமகால வாசகர் வாசிக்க வழிவகைகள் செய்வது மட்டுமே இவர்கள் பொறுப்பு. இளம்பூரணர் காலத்தால் முன்னோடி. பிற்கால உரையாசிரியர் களின் பாராட்டுதலைப் பெற்றவர். அடியார்க்கு நல்லார் பலதுறை அறிஞர். சேனாவரையர் வடமொழிப் புலமைமிக்கவர். நச்சினார்க்கினியர் எண்பத்தி இரண்டு நூற்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டியுள்ளார். இவர்களைப் பேரறிஞர்களாக இனம் காண்பதில் தடையேதுமில்லை.

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தமிழ் இலக்கியச் சிந்தனை மரபின் தொடர்ச்சி குறித்து ஐயம் எழுகின்றது. ஆனால் கம்பராமாயணத்தின் மேன்மையை உணர்ந்துகொண்டுள்ளனர். பிற்காலக் காப்பியங்கள் அனைத்தும் இதன் தாக்கத்தைப் பெற்றுள்ளன. சைவம் செழித்திருந்தாலும், கந்தபுராணம் தாக்கத்தைச் செலுத்தவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உ.வே. சாமிநாதய்யர் ஏடுகளில் மூலம் ஏது? உரை எது? எனப் பிரித்தறிந்து இனம்காண இயலாதவாறு கலந்திருந்ததாகப் பதிவு செய்துள்ளார். உரைகளே மூலத்தைப் புதிய காலத்திற்கு எடுத்து வந்துள்ளன. உரையாசிரியர்கள் துணையின்றிச் சொற்களின் பொருள் பரிமாணங்களை அறிய இயலலாது. மரபு குறித்த அறிவினையும் அவர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டாக வேண்டும். அவர்கள் முக்கியத் துவத்தை இலக்கியச் சிற்றிதழ்களில் இயங்கிய விமர்சகர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அதேசமயம் அவர்களைத் தமிழ் இலக்கிய விமர்சன மரபின் முன்னோடிகளாக வலிந்து ஏற்க வேண்டும் என்பதும் இல்லை. தற்காலத் தமிழ் விமர்சனத்தின் துவக்கத்தை, கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்திலிருந்துதான் இனங்காண முடிகிறது. ஒப்பிலக்கணத்தின் முதற்பதிப்பு 1857ல் வெளியானது. 1875ல் அதன் இரண்டாவது பதிப்பு வெளியானது. இவ்விருபதிப்புகளிலும் இடம்பெற்ற தமிழ் இலக்கியம் தொடர்பான பகுதிகள் பின்வந்த பதிப்புகளில் நீக்கப்பட்டுள்ளன. இந்த விடுபடல் கால்டுவெல்லின் மரணத்திற்குப்பின் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதால் கால்டுவெல்லின் தமிழ் இலக்கியம் தொடர்பான பதிவுகளைக் கணக்கில் கொண்டாக வேண்டும். தமிழில் இலக்கிய விமர்சனத்தின் அடிப்படையான மதிப்பீடு கால்டுவெல்லின் பதிவுகளில்தான் முதன்முதலாக இடம்பெறுகிறது.

தமிழ் ஒட்டுமொத்த இலக்கிய மரபை விமர்சனக் கண்ணோட்டத்தோடு கால்டுவெல் அணுகியுள்ளார். தொல்காப்பியத்திற்கு எவ்வளவு பழமையைக் கற்பித்தாலும், பல நூற்றாண்டு இலக்கிய வளர்ச்சிக்குப் பின்னரே அது தோற்றம் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், விதி என்பது ஏற்பினைப் பெற்ற வழக்கமே. திருக்குறளிலும் சிந்தாமணியிலும்தான் தமிழ் இலக்கிய மரபு அதன் உச்சத்தை எட்டியுள்ளது. கால்டுவெல் தெளிவான விமர்சனக் கண்ணோட்டத்தோடு மரபினை அணுகியுள்ளதை இது உறுதிப் படுத்துகிறது. இங்கு, மதிப்பீடு நிகழ்த்தப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு மதிப்பீடு தமிழ் இலக்கியத்திற்கு கால்டுவெல்லுக்கு முன் நிகழ்த்தப்பட்டிருக்கவில்லை.

தமிழ் இலக்கிய வரலாற்றின் சட்டகத்தை உருவாக்கியவரும் கால்டுவெல்லே. தமிழ் இலக்கிய பரப்பைச் சமண வட்டம், இராமாயண வட்டம், சைவ மறுமலர்ச்சி வட்டம், வைணவ வட்டம், இலக்கிய மறுமலர்ச்சி வட்டம், எதிர்ப்பார்ப்பனிய வட்டம், தற்காலப் படைப்பாளிகள் என அவர் வகைபடுத்துவது குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் ஆங்கில இலக்கிய விமர்சகரான டி.எஸ். எலியட் இத்தகைய வட்டக் கோட்பாட்டினைக் கொண்டு ஆங்கில இலக்கிய மரபை வகைப்படுத்தியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.

தமிழ் இலக்கியப் படைப்புகளைப் பிறமொழி இலக்கியப் படைப்புகளோடு ஒப்பிட்டு மதிப்பிடும் ஒப்பிலக்கிய மரபும் கால்டுவெல்லில் தான் வேர்கொண்டுள்ளது. சமணர்களால்தான் சமஸ்கிருதத்திலிருந்து வேறான இலக்கியப் பண்பாட்டினைத் தமிழில் வளர்த்தெடுக்க முடிந்தது என்ற முடிவுக்குவரும் கால்டுவெல், நீதி இலக்கியத்தில் தமிழ், வடமொழியை விட வளம்பெற்றுள்ளது என்னும் மதிப்பீட்டை முன்வைத்துள்ளார். வடமொழி இராமாயணத்தோடு கம்பராமாயணத்தை ஒப்பிடும் கால்டுவெல் கம்பராமாயணம் எவ்வித சந்தேகமுமின்றி உயர்ந்த கவிதை என்ற முடிவிற்கு வருகிறார். சிந்தாமணி மட்டுமே இராமாயணத்தின் சிறப்பைக் கேள்விக்குள்ளாக்கக்கூடும் என்கிறார். தெளிவான விமர்சனக் கண்ணோட்டத்தை இங்கு எதிர்கொள்ள முடிகிறது. சித்தர் பாடல்களை எதிர்ப்பார்ப்பனிய வட்டத்தினைச் சார்ந்த கவிதைகளாகக் கால்டுவெல் கணக்கிடுகிறார். சித்தர் பாடல்கள் சாதாரண மக்களை முன்வைத்து எழுதப்பட்ட பாடல்களாகக் கால்டுவெல் மதிப்பிடுகிறார். தற்காலத் தமிழ் - வங்காள இலக்கியங்களை ஒப்பிட்டு எண்ணிக்கையில் அதிகமாகத் தமிழ் இலக்கியப் படைப்புகளும் தரத்தில் உயர்ந்தனவாக வங்காள இலக்கியப் படைப்புகளும் திகழ்வதாக மதிப்பிடுகிறார்.

சமகாலத்தில் கால்டுவெல்தான் விமர்சனக் கண்ணோட்டத்தோடு தமிழ் இலக்கியத்தை முதல்முதலாக அணுகியுள்ளார். எனவே, சமகாலத் தமிழ் இலக்கிய விமர்சனத்தின் வரலாற்றைக் கால்டுவெல்லில் இருந்துதான் துவங்கவேண்டும்.

19ம் நூற்றாண்டின் இறுதியில் சி.வை. தாமோதரம்பிள்ளையும் தொடர்ந்து உ.வே. சாமிநாதய்யரும் தொன்மையான இலக்கியங்களைச் சுவடியிலிருந்து அச்சுவடிவில் பதிப்பிக்கத் துவங்கினர். இவர்களுக்கு முன்னமே திருக்குறள் போன்ற மரபில் சிறப்பிடம் பெற்ற இலக்கியப் படைப்புகள் அச்சு வடிவம் கண்டிருந்தாலும் ஆய்வு அடிப்படையிலான பதிப்பு முயற்சி இவர்களால்தான் துவக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்பட்டது. கூடவே, நூல்களுக்குச் சமகாலத் தமிழில் உரையும் செய்தனர். நூல் தொடர்பான தகவல்களைத் திரட்டித் தருவதில் இவர்கள் பணி குறிப்பிடத்தக்கது. பல நூல்களில் இருந்து ஒப்புமைக் கூறத்தக்கப் பகுதிகளைத் தொகுத்தும் தந்துள்ளனர். இது எதிர்காலத் தமிழ் ஆய்வின் வளர்ச்சிக்குச் சிறந்த அடிப்படையாக அமைந்தது. தமிழ் இலக்கிய மரபு என்றும் இவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளது. ஆனால், விமர்சனக் கண்ணோட்டம் இவர்களுக்கு அறவே இல்லாதிருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். சிலப்பதிகாரம், குறுந்தொகை போன்ற தமிழ்ச் செவ்வியல் படைப்புகளைப் பதிப்பித்த உ.வே. சாமிநாதய்யர் இவற்றிற்கு இணையாகவே கோவில் தலபுராணங்களையும் கருதியிருந்தார் என்று கூறமுடிகிறது. நூலாசிரியர்கள் மீது இவர்கள் கொண்டிருந்த பக்தி உணர்வு விமர்சனக் கண்ணோட்டத்திற்குத் தடையாக அமைந்தது எனக் குறிப்பிட வேண்டும். தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களுக்குச் சமகாலத்தில் உரை செய்த சோமசுந்தரனார், துரைசாமிப்பிள்ளை போன்றவர்கள் உ.வே.சா. வகுத்த பாதையில்தான் பயணம் செய்துள்ளனர்.

20ம் நூற்றாண்டின் தமிழ்க்கல்விச் சூழல் விரிவடைந்தது. மதுரைத் தமிழ்ச்சங்கம் தோற்றங்கொண்டது. இலக்கிய ஆய்விற்கென்றே மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாகச் செந்தமிழ் இதழ் வெளிவரத் துவங்கியது. தொன்மையான இலக்கியங்களின் காலத்தைத் தீர்மானிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றை உருவாக்கும் முயற்சி செயல்வடிவங் கொண்டது. இச்சூழலில் இலக்கியப் புலமையாளர்களின் மரபு தோற்றங்கொண்டது. பூரணலிங்கம் பிள்ளை, மறைமலையடிகள், வேங்கடசாமி நாட்டார், பரிதிமாற் கலைஞர், ரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், மா. இராசமாணிக்கனார், செல்வகேசவராய முதலியார், கே.என். சிவராஜ பிள்ளை என இம்மரபு தொடர்ந்தது. இவர்கள் விமர்சனக் கண்ணோட்டம், அதற்கு அடிப்படைத் தேவையான அழகியல் உணர்வு ஆகியவற்றைக் கொண்டிருந்தனர் எனக் கூற இயலாது. ஆனால், இம்மரபில் விமர்சனக் கண்ணோட்டத்தை இயல்பாகப் பெற்றவர்களும் இருந்தனர்.

தற்காலத் தமிழ் விமர்சனத்தின் தொடர் இயக்கத்தினை 20ம் நூற்றாண்டின் முதல் 20 வருடங்களில்தான் தேடிக் கண்டடைய வேண்டும். வ.வே.சு. ஐயரைப் பலரும் முன்னோடியாகக் குறிப்பிட்டுள்ளனர். இலக்கியத்தரம் குறித்த விழிப்புணர்வு இக்காலக் கட்டத்தில்தான் தமிழில் அழுத்தம் பெற்றுள்ளது. விமர்சனக் கோட்பாடுகளின் அடிப்படையில் தெளிவான பாதைகளை வகுத்து இலக்கியத் தரத்தைத் தீர்மானிக்கும் முயற்சியும் இக்காலக்கட்டத்தில் நிகழ்வடிவம் பெற்றுள்ளது. வ.வே.சு. ஐயர், கம்பராமாயணத்தைக் கிரேக்க வடமொழிக் காவியங்களோடு ஒப்பிட்டு, கம்பனின் கலை மேதைமையை நிறுவ முயன்றுள்ளார். அதுபோல், பாரதியின் கண்ணன் பாட்டைத் தெளிவான விமர்சனக் கண்ணோட்டத்தோடு அணுகியுள்ளார். வ.வே.சு. ஐயரைப் போல் பாரதி விமர்சனக் கட்டுரைகளை எழுதியிராவிடினும், ஆங்காங்கே அவர் விட்டுச் சென்றுள்ள பதிவுகள் அவருடைய விமர்சனக் கண்ணோட்டத்தைத் துலக்கவே செய்கின்றன. வள்ளுவன், கம்பன், இளங்கோ என்ற தரவரிசை அவரால்தான் தமிழில் முதன்முதலில் முன்வைக்கப்பட்டுள்ளது. விமர்சன உணர்வு கொண்ட படைப்பாளிகளுக்கு, பாரதியே முன்னோடியாக விளங்குகின்றார்.

இவர்கள் இருவரோடு ஒப்பிடும்போது அ. மாதவையரே விமர்சகராக முக்கியத்துவம் பெறுகிறார். ஆனால், சமகாலத் தமிழ் இலக்கிய விமர்சனத்தின் வரலாற்றை ஆராய்ந்த பலரும் மாதவையரை விமர்சகராகப் பொருட்படுத்தவில்லை. வாழுங்காலத்தில் இதழ்களில் வெளிவந்த மாதவையரின் கட்டுரைகள் சமகாலத்தின் பார்வைக்குக் கிடைக்காதது இதன் காரணமாகலாம். 1920 மார்கழி தமிழர் நேசன் இதழில் மாதவையர் எழுதிய 'தமிழ் இலக்கிய அபிவிருத்தி' என்னும் கட்டுரையை இவ்வகையில் குறிப்பிட வேண்டும். இக்கட்டுரைக்கு நிகராகக் கால்டுவெல்லின் தமிழ் இலக்கியம் குறித்தப் பதிவுகளைச் சுட்டலாம். இருவரும் சமகாலம் வரையிலான தமிழ் இலக்கிய மரபை ஒட்டுமொத்தமாக விமர்சனக் கண்ணோட்டத்துடன் தங்கள் மதிப்பீட்டிற்கு உள்ளாக்கியுள்ளனர். தங்கள் பார்வைக்கேற்றதான முடிவுகளுக்கும் வந்துள்ளனர்.

மாதவையர் சொல்லப்படும் விஷயத்திற்குத் தரும் முக்கியத்துவத்தை வெளியிடும் வல்லமைக்கும் தரவேண்டும் என்கிறார். இப்பார்வை, தமிழ் விமர்சன மரபிற்கு முற்றிலும் புதுமையானது. தமிழின் பிற்கால இலக்கியங்களை அரேபிய பாலைவனத்திற்கு ஒப்பிடும் மாதவையர், தலபுராணங்களையும் அந்தாதிகளையும் இலக்கியச் சிறப்பின்றி, வறண்ட பாலை நிலத்திற்கு உவமையாக்குகின்றார். இவைகளைக் குறித்து, 'போலி இலக்கிய நூல்கள்' என்ற மதிப்பீட்டினையும் முன் வைக்கின்றார். கம்பன் சீவகசிந்தாமணிக்குக் கடன்பட்டுள்ளதைத் துலக்கும் மாதவையர், கம்பனுக்கு நிகரான கவிவன்மை இல்லாதவர்களால்தான், எதுகை, மோனை, சிலேடை, யமகம், நீரோட்டகம், ஏகபாதம், திரிபு, மடக்கு ஆகிய வித்தைகள் தமிழுக்கு வந்தன என்ற முடிவிற்கு வருகிறார். மாதவையரைப் பொறுத்தவரையில் மரபு என்பது மேதைகளின் பங்களிப்பின் தொடர்ச்சி. "காலஞ் செல்லச் செல்லத் தமிழ்க்காவியங்கள் இலக்கியச் சிறப்புகளும் அழகுகளும், எளிய நடையும், வலிய கருத்தும் குன்றித் தலைகீழாக, இலக்கணத்திற்கு இயைய ஒழுகலாகி, சொல் ஆடம்பரங்களும், படாடோபங்களும், வாக்கு ஜாலங்களுமே மலிந்து வெளிவரலாயின." தமிழ் இலக்கிய மரபின் வீழ்ச்சிக் குறித்து முதன்முதலாக நிகழ்த்தப்பட்ட மதிப்பீடாக இதனைக் கருத வேண்டும். தமிழின் 17,18ம் நூற்றாண்டு இலக்கியங்களை 'இருண்ட முட்செறிந்து உள்நுழைவதே சிரம சாத்தியமாய் அச்சத்தை விளைவிக்கும் அடவிகளாக' மாதவையர் மதிப்பிடுவது புதிய விமர்சன மரபின் தோற்றத்தைக் குறிக்கின்றது. வாசகர் பார்வையில் தமிழ்ப் புலமையாளர்களின் வலிந்து பொருள்கொள்ளும் போக்கினைக் கடுமையான மொழியில் விமர்சிக்கின்றார். தமிழ் மரபின் வீழ்ச்சியை விமர்சிக்கும் மாதவையர், எதிர்கால வளர்ச்சிக்கான வழிவகைகள் குறித்தும் சிந்தித்துள்ளார். பிறமொழி இலக்கிய நயங்களை நமக்கேற்றவாறு மாற்றி ஏற்க வேண்டும் என்கிறார். ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் வசனகவிதையைத் தமிழிற்கு அவர் வரவேற்பது வியப்பூட்டுவது. மொழித்தூய்மை, நடையழகை சிதைப்பதை ஏற்க மறுக்கிறார்.

வ.வே.சு. ஐயரின் விமர்சனப் பார்வை ஐரோப்பிய மரபு சார்ந்தது. அப்பார்வையில் தமிழ் இலக்கிய மரபின் உச்சத்தை மதிப்பிடுகிறார். மாதவையரோ தமிழ் இலக்கியமரபை ஒட்டுமொத்தமாக உள்வாங்கிக் கொண்டு ஒரு விமர்சனப் பார்வையைத் தன்னுள் துலக்கித் தமிழ் இலக்கியம் குறித்ததான மதிப்பீடுகளை முன்வைக்கின்றார். இலக்கியப் புலமையாளர்களுள் பெரும்பான்மையோர் ரசனை உணர்வு கொண்டவர்களல்லர். இலக்கியப் படைப்புகள் அவை எக்காலத்தைச் சார்ந்தனவாக இருப்பினும் சுவைப் பதற்குரியன என்ற உண்மையை அவர்கள் சற்றேனும் எதிர்கொள்ளவில்லை. இவர்களுள் சைவச் சார்புடையவர்களே எண்ணிக்கையில் அதிகம். சைவச் சார்புடைய இலக்கியங்களை மட்டுமே முதன்மைப்படுத்தினர். சைவச் சார்புடைய எதுவும் உயர்ந்ததாகவே இவர்களுக்குப் பட்டது. இலக்கியப் படைப்புகளின் அழகுகளை அல்ல, தங்கள் புலமையை வெளிப்படுத்தவே எழுத்தைக் கையாண்டனர். பண்டிதப்போக்கு எனப் பின்னால் விமர்சகர்கள் வெறுத்தொதுக்கிய போக்கு, இவர்கள் எழுத்துக்களின் மூலம்தான் தமிழில் தோற்றங்கொண்டது. புதுமைப்பித்தன் போன்ற தலைசிறந்த இலக்கியப் படைப்பாளர்கள் தங்கள் கதைகளில் இவர்களைக் கேலிச் சித்திரமாக்கினர்.

இப்போக்கின் எதிர்வினையாக ரசனைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் ரசனைமுறை விமர்சனம் தமிழில் தோற்றம் கொண்டது. டி.கே.சி. எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படும் டி.கே. சிதம்பரநாத முதலியாரைக் கவனத்தில்கொள்ள வேண்டும். க.நா.சுப்ரமணியம் "தமிழில் இரண்டாயிரம் வருஷத்து இலக்கியத்தில் முதல் முறையாக விமரிசனம் பிறக்கிறது டி.கே.சியுடன் தான்" என தமிழ் இலக்கிய விமர்சனத்தையே டி.கே. சியிடமிருந்துதான் துவக்குகிறார். டி.கே.சி. தன் புலமையை அல்ல கவிதையின் அழகையே முதன்மைப்படுத்தினார். கவிதைக்கும் வாசகனுக்கு மிடையில் குறுக்கீட்டினை நிகழ்த்தாமல் வாசகன் கவிதையை நெருங்கும் படித் தூண்டினார். இவர் எளிமை உருவம், சந்தம், வேகம் இவற்றையே அளவுகோலாகக் கொண்டார். கவிதையின் ஆழத்தைச் சற்றேனும் பொருட்படுத்தவில்லை. கம்பராமாயணப் பாடல்களையும், நந்திக்கலம்பகப் பாடல்களையும் ஒரேதளத்தில் அவரால் எதிர்கொள்ள முடிந்தது. அதேசமயம், தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களை அவரால் அணுக இயலவில்லை. தரமதிப்பீடுக் குறித்த உணர்வு அவருக்கிருந்தது. "தமிழ் இலக்கியத்தில் முதல்முறையாக நல்ல கவிதையுடன் பெரும்பாலான கவிதைகள் மட்டமான வைகளாகவும் இருக்கின்றன என்று சொன்னவர் டி.கே.சி. தான்." க.நா. சுப்ரமண்யத்தின் டி.கே.சி குறித்ததான இம்மதிப்பீடு மிகையானது. மாதவைய்யரின் எழுத்துக்களைப் பார்வையிடும் வாய்ப்பு, க.நா. சுப்ரமண்யத்திற்கு இல்லாதிருந்திருக்க வேண்டும். டி.கே.சி சுவைத்த பிற்காலத் தனிப் பாடல்களைத் தமிழ் மரபின் வீழ்ச்சியென்றே மாதவையர் கணித்துள்ளார். கவிதையின் ஆழங்குறித்த தேடல் மாதவையருக்கிருந்தது. இக்காரணத்தால் தான் வசனகவிதையின் வருகையை மாதவையர் எதிர்நோக்கினார், வரவேற்றார். டி.கே.சியின் பார்வையில் வசனக்கவிதை கவிதையாக முடியாது. இலக்கியத்தரம் குறித்த உணர்வு டி.கே.சி.யிடமிருந்தது. ஆனால் உரைநடை இலக்கியத்தில் டி.கே.சி., பொழுதுபோக்குக் கதை ஆசிரியர்களையே முதன்மைப்படுத்தினார். அதுபோல், தன் ரசனைக்குப் பொருந்தாதவற்றைப் படைப்பாளி எழுதியிருக்க முடியாதென்றும் வாதித்தார். ஒரு பெருங்காப்பியத்தில் அதன் பாடல்கள் ஒவ்வொன்றும் உச்சத்தை எட்டிவிடவேண்டும் என்பதல்ல. உச்சத்தை எட்டுவதற்கான படிகளாகவும் அமையக்கூடும் என்ற உணர்வு அவருக்கில்லாதிருந்தது. டி.கே.சி.யின் ரசனை அணுகுமுறை தமிழ் விமர்சன மரபில் தன் செல்வாக்கினைச் செலுத்தியது. ஆனால், டி.கே.சி.யின் மரபில் வந்த மகராசன், பாஸ்கரத் தொண்டைமான் போன்றோர் கவிதையை, மேடையில் நிகழ்த்துபவர்களாகவே இனங்காணப்பட்டனர்.

மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை என்ற அரசியல் இயக்கம் பின்னடைவை நேரிட்டபோது, அதன் எதிர்வினையாகத் தமிழ் இலக் கியத்தில் 'இரண்டாவது மறுமலர்ச்சி' தோற்றங்கொண்டது. மணிக்கொடி, இம்மறுமலர்ச்சி படைப்பாளிகளின் தளமாக அமைந்தது. இது தனது தெளிவான விமர்சனப் பார்வையைக் கொண்டிருந்தது. இலக்கியத்தையும் அதனோடு தொடர்புடைய நாடக அரங்கினையும் இசை மேடையையும் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாக்கியது. தமிழில் முதன்முதலாக விமர்சனத்திற்கான சூழல் தோற்றுவிக்கப்பட்டது. கு.ப. ராஜகோபாலன் தாகூர் கவிதைகள் மீதான தன் விமர்சனத்தின் மூலமாகவே படைப்புலகிற்கு அறிமுகமானார். புதுமைப்பித்தன் தமிழ் மரபிலக்கியக் கவிதைகளை விமர்சனத்திற்குள்ளாக்கினார். டி.கே.சி.யின் பார்வையின் பாதிப்பு அவரிடமிருந்தது எனினும் ஆழம் குறித்த உணர்வும் இருந்தது. இலக்கியத்தின் அடிப்படைகள் தமிழில் முதன்முதலாக விவாதிக்கப்பட்டன. கு.ப. ராஜகோபாலனும், புதுமைப்பித்தனும் துருவங்களில் நின்று விவாதித்தனர். இலக்கிய வடிவங்கள் குறித்த சிந்தனையும் எழுந்தது. 'இரண்டாவது மறுமலர்ச்சி' என்ற காலக்கணிப்பு கு.ப. ராஜகோபாலனுடையது. பாரதியின் கவிதைகளைக்கூட ஆழ்ந்த விமர்சனங்களுக்கு உட்படுத்தியே மதிப்பிட வேண்டும் என்ற நிலைபாடு புதுமைப்பித்தனுடையது. இவர்கள் இருவரும் சில பொதுமைகளையும் கொண்டிருந்தனர். ஐரோப்பிய இலக்கியத்தையும் அதனின்று பிறந்த விமர்சன மரபையும் அறிந்திருந்தனர். மணிக்கொடியின் இறுதிக் காலக்கட்டத்தில் க.நா. சுப்ரமண்யம் கால் தடம் பதித்தார். தமிழ் விமர்சன மரபை முன்னெடுத்துச் சென்ற பெருமை இவருடையது.

நாற்பதுக்களின் துவக்கத்தில் மணிக்கொடி நின்றுவிடினும், மணிக்கொடி மரபினோடு தொடர்புடைய இளம்படைப்பாளிகளான ரகுநாதனும் கு. அழகிரிசாமியும் இலக்கிய விமர்சனத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். 1948ல் ரகுநாதனின் இலக்கிய விமர்சனம் வெளியானது. இலக்கிய விமர்சனத்தை முதன்மை நோக்கமாகக் கொண்ட முதல்நூலாக இதனைக் குறிப்பிட வேண்டும். கறாரான அணுகுமுறையும் ஆளுமையைத் துலக்கும் இதன் நடையும் மணிக்கொடி மரபிற்குப் பின்வந்த விமர்சகர்களை மிகவும் பாதித்தது. ஆனால், ரகுநாதன் வளர்ச்சிப் பாதையில் மார்க்சியக் கோட்பாடு அடிப்படையிலான விமர்சனத்தை முன்னெடுத்துச் சென்றார். இவ்வகையாலும் முன்னோடியாகத் திகழ்ந்தார். மற்றொரு இளம்படைப்பாளியான கு. அழகிரிசாமி, புதுமைப்பித்தனைப் போலவே தமிழ் மரபுக் கவிதைகளை விமர்சனத்திற்கு உட்படுத்தினார். டி.கே.சி.யின் பாதிப்பு இவரிடமிருந்தது. கவிதையின் ஆழம்குறித்த உணர்வு டி.கே.சி.யைப் போலவே இவரிடமும் இல்லாதிருந்தது. அழகிரிசாமியும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் புறக்கணித்தார். ஆனால் ரகுநாதனிடம் செவ்வியல் இலக்கியங்கள் மீதான ஈடுபாடு இருந்தது.

விடுதலையைத் தொடர்ந்த காலக்கட்டத்தில் வணிக இதழ்கள் பெரும் வளர்ச்சியைக் கண்டன. மத்தியத் தர மக்களின் பொழுதுபோக்குத் தேவை, உற்பத்திப் பெருக்கத்தின் விளைவாகத் தோற்றங் கொண்ட நுகர்பொருளுக்கான சந்தைக் குறித்த தேடல், நுகர்வோரைக் கவர்ந்திழுக்கும் விளம்பர யுகத்தின் தோற்றம், இவை இணைந்து வணிக இதழ்களைப் பெரும் நிறுவனங்களாக வளர்ச்சியடையச் செய்தன. பொழுதுபோக்குக் கதைமரபு வளர்ச்சி கண்டது. கல்கி, அகிலன் என்று இம்மரபு தொடர்ந்தது. பொழுதுபோக்குக் கதைகள் இக்காலக் கட்டத்தில் இலக்கியப் படைப்புகளாகத் தமிழ்க்கல்வி வட்டத்தைச் சார்ந்தவர்களின் ஏற்பினைப் பெற்றன. பொழுதுபோக்குக் கதையாசிரியர்கள் இலக்கியப் படைப்பாளிகளால் அங்கீகரிக்கவும் பட்டனர். வாசகர் எண்ணிக்கை அங்கீகாரத்தின் அளவுகோலாக ஏற்கப்பட்டது. இந்நிலையில், மணிக்கொடி மரபினைச் சார்ந்த படைப்பாளிகள் விமர்சன அங்கீகாரம் என்பதனை முன்னிலைப்படுத்தத் துவங்கினர். பொழுதுபோக்குக் கதைகள் மீதான எதிர்ப்புணர்வு, தரமான வாசகர் குறித்த தேடல், விமர்சன அங்கீகாரத்தின் அவசியம் குறித்த உணர்வு, இவை இணைந்து ஓர் இதழியல் மரபைத் தோற்றுவித்தன. தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம் இக்காலக் கட்டத்தில் வேர்கொண்டது. இலக்கிய விமர்சனம் முதன்மைப் பெற்றது. தமிழ் விமர்சன மரபின் வளர்ச்சி இச்சிற்றிதழ் மரபினையே சார்ந்துள்ளது.

தமிழ்ச்சிற்றிதழ் மரபின் முன்னோடிகளான எழுத்து, சரஸ்வதி போன்ற இதழ்கள் 50களின் இரண்டாவது பகுதியில் தோற்றங்கொண்டன. இவ்விதழ்கள் இலக்கியத்தின் எல்லா வடிவங்களுக்கும் இடம் தந்தாலும் விமர்சனத்தை முன்னிலைப்படுத்தின. எழுத்து இதழில் மணிக்கொடி மரபினைச் சார்ந்த க.நா. சுப்ரமணியமும், சி.சு. செல்லப்பாவும் இணைந்து இயங்கினர். பொழுதுபோக்குக் கதைகளின் போலி அங்கீகாரத்தினைக் கடுமையான சொற்களில் கேள்விக்குள்ளாக்கினர். ஐரோப்பிய விமர்சன அடிப்படைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தனர். எஸ்ரா பவுண்ட், டி.எஸ்.எலியட், எஃப்.ஆர். லூயிஸ் போன்ற ஐரோப்பிய விமர்சன சிகரங்கள் தமிழில் விவாதிக்கப்பட்டனர். இம்மேதைகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான ஐரோப்பிய விமர்சன மரபினைத் தீர்மானித்தவர்களுங்கூட, க.நா. சுப்ரமண்யம் தன் இலக்கிய அனுபவத்தை அடித்தளமாகக் கொண்ட அனுபவமுறை விமர்சனத்தை முன்வைத்தபோது, சி.சு. செல்லப்பா வடிவவியல் விமர்சனத்தை முன்வைத்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் இருதுருவங்களில் நின்று விவாதித்துக் கொண்டனர். மணிக்கொடிக்குப் பின் விமர்சன அடிப்படைகள் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாயின. ஆனால், கலைச்சாதனைகளின் அடிப்படையில் படைப்பாளிகளைத் தேர்வதில் கருத்தொற்றுமை கொண்டிருந்தனர். க.நா.சு. அனுபவப் பதிவு முறை விமர்சனத்தின் மூலம் மௌனியைத் தலைசிறந்த படைப்பாளியாக இனங்கண்ட போது, சி.சு. செல்லப்பா வடிவவியல் விமர்சனத்தின் மூலம் மௌனியின் விமர்சன அங்கீகாரத்தினை உறுதிப்படுத்தினார்.

சி.சு. செல்லப்பா தன் விமர்சனப் பார்வையை நூல் வடிவம் பெறச் செய்வதில் முனைப்புக் கொண்டு வெற்றியும் கண்டார். க.நா.சு. இலக்கிய வட்டம் சிற்றிதழை வெளிக்கொணர்ந்தார். க.நா.சு.வின் விமர்சனக் கட்டுரைகள் மிக அண்மையில்தான் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. க.நா. சுப்ரமணியத்தையே தமிழ் விமர்சன மரபின் முதல் சிகரமாகக் கொள்ள வேண்டும். ஆரம்ப நாள்களில் தமிழ் மரபிலக்கியத்தைப் புறக்கணித்து வந்திருந்தாலும் பிற்காலத்தில் தமிழ் மரபிலக்கியம் குறித்த தன் விமர்சனப்பதிவுகளை முன்வைத்துள்ளார். தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளின் பட்டியலைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுக் கொண்டிருந்தார். பட்டியலில் அவ்வப்போது இணங்கான முடிகிற முரண்பாடுகள் அவர் பார்வையைத் துலக்குவனவாக அமையவில்லை. ஆனால், அவர் இனங்காட்டிய இலக்கியப் படைப்புகள் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளாக ஏற்கப்பட்டன.

விடுதலை பெற்ற இந்தியாவில் உயர்கல்வி வேகமாக வளர்ச்சிக் கண்டது. தமிழ்க்கல்வியாளர்கள் வட்டம் தோற்றங் கொண்டது. இலக்கியப் புலமையாளர்கள் தற்கால இலக்கியத்தைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், கல்வி வட்ட ஆய்வாளர்கள் தற்கால இலக்கியத்தையும் ஆய்வுப் பொருளாகக் கொண்டனர். உரையாசிரியர் மரபினைச் சார்ந்தவர்களாக இவர்களைக் கொள்ள இயலாது. பொழுதுபோக்கு எழுத்துக்களுக்கு இவர்கள் தந்த விமர்சன அடிப்படையில்லாத அங்கீகாரம் சிற்றிதழ் சூழலில் இயங்கிய விமர்சகர்களிடம் எதிர்ப்புணர்வைத் தோற்றுவித்தது. இவர்களை விமர்சகர்களாக ஏற்கக் கூடுமா? என்ற விவாதம் தமிழில் முடிவற்று நிகழ்ந்து வரும் விவாதங்களில் ஒன்று. இவர்களில் பெரும்பான்மையோர் இலக்கியம் குறித்த செய்திகளைத் திரட்டித் தருபவர்கள். இலக்கியப் பிரதிகளை வாசித்ததற்கான அடையாளங்களை இவர்கள் எழுத்தில் காண இயலாது. தன் முன்னோரின் பதிவுகளை விருப்பு வெறுப்பின்றி மீண்டும் மொழிவது இவர்களுடைய போக்கு. 19ம் நூற்றாண்டு ஆங்கில விமர்சகர்களின் மேற்கோள்களை எவ்விதப் பொருத்தமின்றி தங்கள் எழுத்துக்களில் கையாண்டு, தங்கள் ஆங்கிலப் புலமையையும் வெளிப்படுத்திக் கொள்வர். மு.வ.வின் இலக்கிய மரபு, அ.சா. ஞான சம்பந்தனின் இலக்கியக் கலை போன்ற நூல்கள் ஹட்சனின் ஆங்கில நூலின் தழுவல்கள். ஹட்சன் ஆங்கில மரபில் விமர்சன சிகரமாக ஒருபோதும் ஏற்கப்பட்டதில்லை. சிற்றிதழில் இயங்கிய விமர்சகர்கள் சமகால ஆங்கில விமர்சன மரபைத் தமிழுக்கு அறிமுகம் செய்ய முனைந்து கொண்டிருந்தபோது, கல்வியாளர்கள் சென்ற நூற்றாண்டின் ஆரம்ப நிலை இலக்கிய மாணவர்களுக்கு விமர்சனம் கற்பித்தவர்களின் மேற்கோள்களைக் கையாண்டு கொண்டிருந்தனர். இலக்கியப் புலமையாளர்களைப் போலவே எண்ணற்ற நூற்களை இவர்கள் இலக்கியம் தொடர்பாக வெளியிட்டுள்ளனர். 1955ல் 'பற்றி இலக்கியமும் இலக்கிய விமர்சனமும்' என இவர்களை விமர்சகர்களாக க.நா. சுப்ரமண்யம் அங்கீகரிக்க மறுத்தபோது, 2005ல் பேராசிரியர் மருதநாயகம் "படைப்பிலக்கியம் பற்றி எழுதப்பட்ட எத்தகைய நூலையும் விமர்சன நூலாக அங்கீகரிக்க வேண்டும்" என்கிறார். ஆனால், பேராசிரியர் மருதநாயகம், "அரைத்த மாவையே அரைப்பார் போல் பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றி ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட கருத்துக்களையே மீண்டும் மீண்டும் சொல்லி வந்தனர். அவர்தம் அணுகுமுறைகளில் புரட்சியோ புதுமையோ ஏதுமில்லை, மறுமதிப்பீடுகளில் அவர் ஈடுபட்டாரிலர், பொருளுள்ள புதிய இலக்கியச் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தாரிலர்; புதிய உள்ளொளிகளை அவர்கள் நூல்களில் காண்பதும் அரிதாம்" என எதிர்மறையாக மதிப்பிடவும் செய்கின்றார்.

தமிழ் விமர்சன மரபில் தமிழ்க்கல்வியாளர்களின் பங்கு மிகக் குறைவானது. எனினும், தெளிவான விமர்சனப் பார்வை கொண்ட கல்வியாளர்களும் இல்லாமலில்லை. வையாபுரிப்பிள்ளை, ஏ.வி. சுப்பிரமண்ய ஐயர், தெ.பொ.மீ., ஜேசுதாசன் போன்றவர்களின் பங்களிப்பினை ஒருபோதும் மறுக்க இயலாது. தமிழ்க் கல்வியாளர்களுள் விமர்சகர்களாக இயங்கியவர்களைத் தேர்ந்துகொண்டு தமிழ்விமர்சன மரபின் வளர்ச்சிக்குக் கல்வியாளர்களின் பங்களிப்பினைத் தீர்மானிக்க வேண்டும்.

தமிழ் உயர்கல்வி வட்டம் தன்னுடையதான விமர்சனப் போக்கு ஒன்றை உருவாக்குவதில் தோல்வி கண்டிருந்தாலும், சில இதழ்கள் அந்த இடத்தினை நிரப்ப முயன்றன. குறிப்பாக சக்தி இதழைக் குறிப்பிட வேண்டும். 1939ல் வை. கோவிந்தனால் சக்தி இதழ் தோற்றுவிக்கப்பட்டது. சக்தி இதழ் தமிழ்க் கல்வியாளர்களுக்குத் தாராளமாக இடம் தந்தது. வி.ஆர்.எம். செட்டியார், வையாபுரிப்பிள்ளை, சீனிவாச ராகவன், மு. அருணாசலம், சபரிராஜன், சந்திரசேகரன் போன்ற கல்வியாளர்களின் விமர்சனக் கட்டுரைகள் தொடர்ந்து சக்தி இதழில் வெளிவந்து கொண்டிருந்தன. சுத்தானந்த பாரதி போன்ற இலக்கியப் புலமையாளர்களும் டி.கே.சியும் சக்தி இதழில் எழுதி வந்தனர். இவர்களுடைய விமர்சனப் போக்கு சிற்றிதழ் விமர்சகர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைந்தது. கல்விவட்டத்தின் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் இவர்கள் எழுத்துக்களில் இனங்காண முடிகிறது. தமிழ்க்கல்வியாளர்களின் விமர்சனப் பங்களிப்பை இவர்களின் எழுத்துக்களைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும். ஒருவகையில் சக்தி இதழ் ஒரு கல்வி நிலையமாகவே செயல்பட்டது.

விடுதலைக்குப்பின் கோட்பாடு சார்ந்த விமர்சனப் போக்கும் தமிழுக்கு அறிமுகமானது. மார்க்சியர்களை இதற்கு முன்னோடிகளாகச் சுட்ட வேண்டும். விஜயபாஸ்கரனின் சரஸ்வதி இதழ் இதற்குக் களம் அமைத்துத் தந்தது. மார்க்சியக் கோட்பாட்டில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்த விஜயபாஸ்கரன் சக்தி இதழிலிருந்து இதற்கான உந்துதலைப் பெற்றுக் கொண்டார். 'இலக்கியத்தை வளர்ப்பதற்குப் பரந்த விசாலமான மனப்பான்மையும், சுதந்திரமான, சுயசிந்தனையும், சிருஷ்டி ஆர்வமும் தேவை என்பதில் அவருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா போன்ற சிற்றிதழ் விமர்சகர்களுக்கும் சரஸ்வதி இடம் தந்தது. அதேசமயம் சிதம்பர ரகுநாதன், எஸ். ராமகிருஷ்ணன் கா. சிவத்தம்பி, கைலாசபதி, ஆர்.கே. கண்ணன், தி.க. சிவசங்கரன் போன்ற மார்க்சியக் கோட்பாட்டில் நம்பிக்கைக் கொண்ட படைப்பாளிகளை ஒருங்கிணைத்தது. மார்க்சியப் பார்வையின் அடிப்படையிலமைந்த விமர்சன மரபு சரஸ்வதி மூலமாகத்தான் தமிழில் தோற்றங் கொண்டது. மார்க்சிய அரசியல், இலக்கியத்தையும் கட்டுப்படுத்த முனைந்தபோது சரஸ்வதியின் இயக்கம் தடைப்பட்டது. பிற மொழிகளோடு ஒப்பிடும்போது மார்க்சிய விமர்சன மரபு தமிழில் போதிய வளம் பெறாததற்கு இதுவே காரணமாக அமைந்தது. ஆனால் இலக்கியத்தைத் தத்துவ நோக்கில் அணுகும் அணுகுமுறை இவர்களால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முதல் தலைமுறை மார்க்சிய விமர்சகர்கள் தமிழ் விமர்சன மரபிற்கு ஒரு புது பரிமாணத்தைச் சேர்த்தனர்.

எழுத்து இதழில் அறிமுகமான இளம் விமர்சகர்களான வெங்கட் சாமிநாதன். தருமு சிவராமு போன்றவர்கள் மணிக்கொடி முன்னோடிகளை உள்வாங்கிக் கொண்டு மரபை முன்னெடுத்துச் செல்ல முயன்றனர். விடுதலைக்குப் பின் மணிக்கொடி முன்னோடிகள் அரசியலுக்கும் இலக்கியத்திற்குமான தொடர்பினைத் துண்டித்துக் கொண்டனர். அதுபோல் இலக்கியத்திற்கும் பிறகலைகளுக்குமான தொடர்பினையும் புறக்கணித்தனர். இப்போக்கினோடு முரண்பட்ட இளம்விமர்சகர்கள் தங்களுடையதான பாதையைத் தீர்மானித்துக் கொண்டனர். இச்சூழலில் தமிழ்ச்சிற்றிதழ் இயக்கம் வேகம் பெறத் துவங்கியது.

சிற்றிதழ் விமர்சகர்கள் இலக்கியத்தின் மகிழ்வூட்டல் பண்பை வெறுத்தனர். தேர்ந்த வாசகர்களை முன்னிறுத்தி, படைப்பாளி இயங்க வேண்டியதின் அவசியத்தைத் தங்கள் விமர்சனங்களில் வலியுறுத்தினர். சிற்றிதழ் விமர்சனப் போக்கு அதற்கான அடையாளங்களோடு வளர்ச்சிக் கண்டது. இப்போக்கை சிறு வட்டத்திற்கான இலக்கியமாக மார்க்சிய முதல் தலைமுறை விமர்சகர்கள் தவறாக இனங்கண்டதால் விமர்சன மோதல்களும், அதன் அடிப்படையிலான இலக்கிய அரசியலும் தமிழில் வேர் கொண்டன. மார்க்சிய விமர்சகரான கைலாசபதி கடுமையான மொழியில் விமர்சிக்கப்பட்டார். கைலாசபதி மணிக்கொடி முன்னோடிகளின் இலக்கியப் பங்களிப்பினை மறுதலித்தார். சிற்றிதழின் இலக்கிய அரசியல் மணிக் கொடியிலேயே தோற்றங்கொண்டிருந்தாலும் இக்காலக் கட்டத்தில்தான் அது வேகம் பெற்றது.

ஒத்த சிந்தனையாளர்கள் தங்களுடையதான இதழைத் தோற்றுவித்துக் கொண்டனர். சிந்தனைகளில் கருத்து வேறுபாடு தோற்றங்கொண்டபோது, வேறு இதழைத் தோற்றுவித்தனர். இச்சூழலில் சிற்றிதழ்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. எழுத்து இதழிலிருந்து தோற்றங்கொண்ட இளம் படைப்பாளிகளின் இதழான நடை, எழுத்து இதழின் ஆயுளுக்கு நிகரான ஆயுளைப் பெறவில்லை. இலக்கியச் சிற்றிதழ்கள் நிலையற்ற ஆயுளைக் கொண்டிருந்தாலும் விமர்சன மரபில் தங்களுடையதான பதிவை நிகழ்த்தியுள்ளன. தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் தோற்றங்கொண்ட இரு முக்கிய விமர்சகர்களாக வெங்கட் சாமிநாதனையும், தருமு சிவராமையும் குறிப்பிட வேண்டும். வெங்கட் சாமிநாதன் தன்னுடையதான தனித்த பார்வையினைக் கொண்டுள்ளார். தன் பார்வைக்கு நேர்மையாக இயங்கவும் செய்தார். இலக்கியத்தைக் கலையின் ஒரு உட்பிரிவாக இனங்கண்ட சாமிநாதன் கலையின் ஒட்டுமொத்த எழுச்சியே இலக்கிய வளர்ச்சியைத் தோற்றுவிக்கும் என்றார். தமிழ்ச்சூழலில் கலை வளர்ச்சிக்கான உந்து சக்தியின் வீழ்ச்சியே இலக்கியத்திலும் பின்னடைவிற்குக் காரணம் என்றார். தமிழ்விமர்சன மரபு வெங்கட் சாமிநாதனின் விமர்சனப் பதிவுகளினூடாக விரிவான தளத்தினைப் பெற்றுக் கொண்டது. வெங்கட் சாமிநாதனின் சமகால விமர்சகரான தருமு சிவராம் இலக்கியப் படைப்புக்களின் ஆழங்களைத் துலக்குவதையே தன் விமர்சன செயல்பாடாகக் கொண்டியங்கினார். கலையின் பிறவடிவங்களைச் சார்ந்திராத இலக்கியத்தின் தனித்த இருப்பின் மீது நம்பிக்கைக் கொண்டிருந்தார். இந்த இரு விமர்சகர்களுக்கிடையில் சிந்தனை ரீதியாகத் தோற்றங்கொண்ட விவாதம் ஆளுமைகளின் மோதலாகச் சிற்றிதழ்ச் சூழலில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அறுபதுக்களில் நவீனத்துவம் ஓர் இலக்கியப் போக்காக வலுப்பெற்றபோது கசடதபற சிற்றிதழ் வரிசையில் தன்னையும் சேர்த்துக் கொண்டது. படிமம், குறிப்புணர்த்தும் பாங்கு, துல்லியமான மொழி ஆகியன விமர்சன மதிப்பீடுகளின் அடிப்படைகளாக அமைந்தன. சிற்றிதழ் இயக்கம் யாத்ரா, கொல்லிப்பாவை என விரிவு கண்டபோது சுந்தர ராமசாமி போன்ற விமர்சன உணர்வு கொண்ட படைப்பாளிகளும் விமர்சனத்தில் ஈடுபாடு கொண்டனர். தமிழ் இலக்கிய விமர்சன மரபின் வளர்ச்சியில் விமர்சன உணர்வு கொண்ட படைப்பாளிகளின் பங்களிப்பு மகத்தானது. இலக்கியம் குறித்ததான தங்கள் எண்ணங்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிராமல் தீவிரமான விமர்சன செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். சுந்தர ராமசாமி விமர்சனத்திற்கென்றே காலச்சுவடு இதழையும் தோற்றுவித்தார். ஆரம்ப நாள்களில் சிற்றிதழாக இயங்கிய காலச்சுவடு பின் நடுநிலையிதழாக உருமாறியது. இது தமிழ்ச் சிற்றிதழ் மரபின் வீழ்ச்சியினை அடையாளப் படுத்தியது.

தமிழ்ச் சிற்றிதழ் மரபையும் விமர்சன மரபையும் இணையாகவே காணவேண்டும். ஒன்றில்லாமல் இன்னொன்றின் வளர்ச்சியை மதிப்பிடவும் இயலாது. அறுபதுகளின் பிற்பகுதியில் மார்க்சிய விமர்சகரின் இரண்டாம் தலைமுறையினர் சிற்றிதழ் இயக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டனர். படிகள், பரிணாமம், பிரக்ஞை, இலக்கு, நிகழ் போன்ற இதழ்களை இவ்வகையில் குறிப்பிட வேண்டும். கோ. கேசவன், எஸ்.வி. ராஜதுரை, ஞானி போன்ற இரண்டாம் தலைமுறையினர் மார்க்சியத்தை ஒரு மெய்யியலாக இனங்கண்டு அதன் அடிப்படையில் இயங்கினர். மார்க்சிய விமர்சன மரபு புதுப்பரிமாணம் பெற்றது.

எண்பதுக்களில் அமைப்பியல் தமிழிற்கு அறிமுகமானது. அமைப்பியல் குறித்த தமிழவனின் நூல் இந்திய மொழிகளுள் முன்னோடியானது. பூரணச்சந்திரன், நோயல் இருதயராஜ் போன்றவர்கள் தமிழ் விமர்சன மரபின் இப்புதிய வளர்ச்சியில் பங்குகொண்டனர். 90களில் பின்னமைப்பியலும், பின் நவீனத்துவமும் புதிய வரவாக அமைந்தன. ரமேஷ்-பிரேம், அ. மார்க்ஸ் போன்ற விமர்சகர்களை இதில் குறிப்பிட வேண்டும். அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் ஆகிய இலக்கியப் போக்கினைச் சார்ந்த படைப்புக்கள் பெருவாரியாக வெளிவராத காரணத்தினால் இப்போக்கில் அமைந்த விமர்சனம் தமிழில் போதுமான அளவிற்கு வேர் கொள்ளவில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும்.

90களில் இலக்கிய விமர்சன உணர்வு கொண்ட படைப்பாளியான ஜெயமோகன் தமிழ் விமர்சன மரபைப் புதிய வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளார். புதிய விமர்சனக்கோட்பாடுகளை முழுமையாகச் சார்ந்திராது அனைத்து இலக்கியப் போக்குகளின் நற்கூறுகளைத் தன்னகத்தே கொண்டு தன்னுடையதான பாதையை வகுத்துக் கொண்ட விமர்சகர் ஜெயமோகன்.

சமகாலத்தில் விமர்சன மரபில் இயங்கும் தமிழவன், வேதசகாயகுமார், ராஜ்கௌதமன், அரசு போன்றோர் பேராசிரியர்களாகப் பணிபுரிபவர்களே. ஆனால் இவர்களுடைய விமர்சன செயல்பாடு சிற்றிதழ் சார்ந்ததாகவே அமைகின்றது.

ஈழத்தில் தமிழ்நாட்டினைச் சார்ந்திராத தனித்தன்மைக் கொண்ட ஒரு விமர்சன மரபு வளர்ந்து வளம் பெற்றுள்ளது. 19ம் நூற்றாண்டில் ஈழத்தில் இலக்கியப் புலமையாளர்களே செல்வாக்குப் பெற்றிருந்தனர். 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் சைவச்சார்புடைய தமிழ்க்கல்வியாளர்களே இலக்கியச் சூழலைச் தீர்மானித்திருந்தனர். ஆனால் உயர்கல்வி விரிவடைந்தபோது கல்வி வட்டம் சார்ந்த விமர்சன மரபு தோற்றங் கொண்டது. கைலாசபதி, கனகரத்தினா, கா. சிவத்தம்பி போன்ற விமர்சகர் களைக் குறிப்பிட வேண்டும். இவர்கள் அனைவரும் மார்க்சிய சிந்தனைச் சார்புடையவர்களே. இவர்கள் தோற்றுவித்த இலக்கிய அரசியலைக் கேள்விக்குள்ளாக்கி மு. தளையசிங்கம் விமர்சனக் குரலை எழுப்பியபோது ஈழத்தமிழ் விமர்சன மரபு ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது. தளையசிங்கத்தின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி தமிழில் மிகச்சிறந்த இலக்கிய விமர்சன நூலாக அமைகிறது. நுஃமான் போன்ற அடுத்த தலைமுறை விமர்சகர்கள் மார்க்சிய விமர்சன மரபை அடுத்தக் காலக்கட்டத்திற்குச் செலுத்துவதில் வெற்றியும் கண்டுள்ளனர். ஈழத்தமிழர்கள் உள்நாட்டுக் கலகத்தின் காரணமாக ஐரோப்பாவில் புகலிடம் தேடியபோது ஐரோப்பிய நகரங்களிலிருந்தும் இலக்கிய இதழ்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. தமிழ் இலக்கியமும், விமர்சனமும் உலகளாவிய பார்வையைப் பெறத் துவங்கியுள்ளன. சமகாலத்தில் இணையத்தளத்தின் ஊடாகவும் இலக்கிய விமர்சனம் இயங்கிவருகிறது.

தமிழ் விமர்சனத்தின் வரலாற்றினை எழுதும் முயற்சிகள் தமிழில் நிகழ்ந்துள்ளன. ஆனால் இம்முயற்சிகள் போதிய ஆவணங்களைத் திரட்டியிராததின் காரணத்தினால் இடைவெளிகள் கொண்டனவாகவே அமைகின்றன. திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தமிழ் விமர்சன வரலாற்றினை மறுவரைவு செய்வதின் கட்டாயம் இங்கு எழுகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக