திங்கள், 22 ஜூன், 2015

TRB PG TAMIL:உரையாசிரியர்கள்

உரையாசிரியர்கள் பெரும்பாலும்u பத்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர்கள். சமகால இலக்கியங்களுக்கு இவர்கள் உரை வகுக்கவில்லை. காலத்தால் முற்பட்ட இலக்கிய இலக்கணங்களுக்கு மட்டுமே உரை வகுத்துள்ளனர். உரையாசிரியர்களை விமர்சகர்களாக ஏற்கும் மரபு உள்ளது. கல்வி வட்டத்தைச் சார்ந்தவர்களும், தமிழ் சமகால படைப்பாளிகளுள் ஜெயமோகனும் தமிழ் விமர்சன மரபின் துவக்கப் புள்ளியாக உரையாசிரியர் களைக் காண்கின்றனர். சிற்றிதழ் சூழலைச் சார்ந்த படைப்பாளிகளும், விமர்சகர்களும் இதற்கு முரணான கருத்தினைக் கொண்டுள்ளனர். உரையாசிரியர்கள் நூற்களைப் போற்றும் மரபினைக் கொண்டவர்கள். தேர்வு இவர்களுக்கில்லை என்பது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகர்களின் நிலைபாடு. இக்காரணத்தினால் விமர்சகர்களாக இவர்களை ஏற்க மறுக்கின்றனர். பேராசிரிய மரபின் முன்னோடிகளாகக் கருதுகின்றனர். ஜெயமோகன் இவர்கள் உரைவகுத்த நூற்களின் தெரிவு ஒருவகையிலான மதிப்பீடு குறித்த உணர்வு இவர்களிடம் இயங்கி உள்ளதற்கு சான்றுகளாக அமைவதைச் சுட்டுகிறார். தமிழ்ச் சூழலில் உரையாசிரியர்கள் மீதான புறக்கணிப்பு, உரைகளின் மீதான வாசிப்பின் அடிப்படையில் நிகழ்ந்திராததையும் குறிப்பிடுகிறார்.

உரையாசிரியர்கள் மிகப்பெரிய அறிஞர்கள் என்பதில் முரண்பாடான கருத்துகளுக்கு இடமில்லை. உரையாசிரியர்களின் தனித்தன்மைகளை அவர்கள் உரைகளிலிருந்து உணரமுடிவதைக் குறிப்பிட வேண்டும். உரையாசிரியர்களின் நூலறிவு வியப்பிற்குரியது. எண்ணற்ற நூற்களை மேற்கோள்களாகச் சுட்டி சென்றுள்ளனர். சொற்களுக்குப் பொருளளிப்பது மட்டுமே அவர்கள் நோக்கமல்ல; கவிதையின் ஆழ்நிலைப் பொருளை உணர்வைப்பதையே இலக்காகக் கொண்டுள்ளனர். இலக்கண உரைகள் தங்கள் நிலைபாடுகளை உணர்த்துவதோடு, பிறநிலைபாடுகள் மீது தாக்குதலையும் நிகழ்த்துகின்றன. இலக்கிய உரைகளில் தங்களுக்கு முரணான பார்வையைக் குறித்து அக்கறை கொள்வதில்லை. எனினும் நக்சினார்க்கினியர் புறநானூற்றின் பாடல்களில் வரலாற்று கொளுக்கள் காலத்தால் பிற்பட்டவையாக மதிப்பிடுவதைக் குறிப்பிட வேண்டும்.

எல்லா நூற்களும் உரைபெறவில்லை. சிலப்பதிகாரம் இரு உரைகளைப் பெற்றபோது மணிமேகலை உரையாசிரியர்களின் கவனிப்பைப் பெறவில்லை. உரைகூறுவதற்கான நூற்களை சமய அடிப்படையில் தேர்வு செய்ததற்கான சான்றுகள் இல்லை. சைவரான நச்சினார்க்கினியர் சமணக்காப்பியமான சிந்தாமணிக்கு உரைசெய்துள்ளதைக் குறிப்பிட வேண்டும். சிந்தாமணியில் துலங்கும் சமணக் கோட்பாடுகளைச் சுட்ட தயங்கவும் இல்லை. உரையாசிரியர்கள் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வந்த நூற்களை சமகால வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றனர். ஒருவகையில் இலக்கியக் கல்வி, தமிழ்ச்சூழலில் இயங்கி வந்துள்ளதை உணர முடிகிறது. அதில் கற்பிக்கப்பட்ட நூல்களுக்கு காலம் சார்ந்த பொருளை உரையாசிரியர்கள் தருகின்றனர். இலக்கண உரைகளிலிருந்துதான் புதிய இலக்கண நூற்கள் தோற்றம் கொண்டுள்ளன. உரைகளின் உதவியோடுதான் மூலநூற்களை அழிவிலிருந்து மீட்க முடிந்துள்ளது.

இளம்பூரணம், பேராசிரியர், பரிமேலழகர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் முதலியவர்களைப் புகழ்பெற்ற உரையாசிரியர்களாகக் குறிப்பிடவேண்டும். இளம்பூரணர் தொல்காப்பியத்திற்கு உரை வகுத்தவர்களுள் முன்னோடியாகத் திகழ்கிறார். பதினோராம் நூற்றாண்டைச் சார்ந்த இவர் சமண சமயத்தினர். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரைவகுத்தவர். இசைத்துறையைப் பற்றிய இவர் அறிவு குறிப்பிடத்தக்கது. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த நச்சினார்க்கினியர் இலக்கண இலக்கியங்களுக்கு உரைவகுத்தவர். தொல்காப்பியம், சிந்தாமணி, கலித்தொகை, குறுந்தொகை என இவர் உரையின் பரப்பு மிக விரிவானது. தன் உரை நூல்களில் எண்பத்தி இரண்டு நூற்களிலிருந்து மேற்கோள்கள் சுட்டியுள்ளார்.

தொல்காப்பியத்திற்கு உரைவகுத்த சேனாவரையர் வடமொழி வல்லுநரும்கூட. பரிமேலழகர் திருக்குறளுக்கும், பரிபாடலுக்கும் உரைவகுத்துள்ளார். தெய்வச்சிலையார், கல்லாடர் சங்கரநமச்சிவாயர், மயிலைநாதர் முதலிய உரையாசிரியர்களையும் குறப்பிட வேண்டும். ஆசிரியர் பெயர் தெரியாத உரைகளும் உண்டு. அகநானூற்றின் முதல் 90 பாடல்களுக்கும் ஆசிரியர் பெயர் கண்டறியப்படாத உரை உள்ளது.

திருக்குறள் பன்னிரு உரைகளைப் பெற்றுள்ளது. வேறுபட்ட சமயத்தைச் சார்ந்தவர்களால் உரைகள் வகுக்கப்பட்டுள்ளன. சமய நூற்களுக்குக் குறிப்பிட்ட அச்சமயத்தவர்களால் உரை வகுக்கப்பட்டுள்ளன. நாலாயிர திவ்யபிரபந்த உரைகள் குறிப்பிடத்தக்கன. மணிப்பிரவாள நடை சமகால வாசிப்பிற்கு இடையூறாக அமைகிறது.

உரையாசிரியர்கள் தங்களுக்கென்று ஒரு நடையை வகுத்துள்ளனர். செந்தமிழ் நடையாக இதனைக் குறிப்பிட வேண்டும். வீரமாமுனிவர் சமகாலத்திற்கு இதனைக் கொணர்ந்தார். உரையாசிரியர்களின் நடையிலிருந்தே உநைடை தோன்றியது.

உரையாசிரியர்களால் உரைவகுக்கப்பட்ட நூற்கள் இருபதாம் நூற்றாண்டில் புதிய உரைகளைப் பெற்றுள்ளன. ஆனால், இவ்வுரைகள் உரையாசிரியர்களின் உரைகளை மலினப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.

உரையாசிரியர்களை விமர்சகர்களாகக் கொள்ளவேண்டும் என்பதில்லை. ஆனால் தலை சிறந்த ஆசிரியர்களாகக் கொள்ள வேண்டும்.

1.அ. தாமோதரன், சங்கரநமச்சிவாயர், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.
2.சத்தீஸ், சங்கஇலக்கிய உரைகள், அடையாளம் (2008)