திங்கள், 22 ஜூன், 2015

செவ்வியல் போக்கு(Classicism)


உணர்ச்சிமையவாத இலக்கியப் போக்கு என்பதைப்போல் இலக்கியப் படைப்பின் தன்மைகளின் அடிப்படையில் இனம் காணப்படும் இலக்கியப் போக்கு. "வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அணுகி சாரம் நோக்கிச்செல்லும் முயற்சி, பண்பாட்டின் அடிப்படையாக அமையும் விழுமியங்களை உருவாக்குதல், வாழ்க்கையை எப்போதும் சமநிலையுடன் மிகைப் படுத்தாமல் நோக்கும் அணுகுமுறை, வாழ்க்கையின் எல்லாக் கூறுகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் நடுநிலை, பிற்காலத்தில் உருவாகும் எல்லாவகை அழகியல் வடிவங்களுக்கும் முன்னுதாரணங்களைத் தன்னுள் கொண்டிருத்தல்" என செவ்வியல் இலக்கியங்களின் பொதுப்பண்புகளை ஜெயமோகன் தொகுத்துக் கூறியுள்ளார். செவ்வியல் இலக்கியப் பண்புகள் அனைத்தும் பழமையானச் செவ்வியல் இலக்கியங்களிலிருந்துப் பெறப்பட்டவையே. இப்பண்புகள் பழமையானச் செவ்வியல் படைப்புக்கள் செலுத்தியத் தாக்கத்தின் காரணமாகப் பிற்கால இலக்கியப் படைப்புகளை வந்தடைந்தவை. எடுத்துக்காட்டாக ரோமானியர்களின் செவ்வியல் இலக்கியப் பண்புகள் கிரேக்க இலக்கியத் தாக்கத்தின் காரணமாகத் தோற்றம் கொண்டவை. ஐரோப்பியச் செவ்வியல் இலக்கியங்கள் கிரேக்க ரோம செவ்வியல் இலக்கியங்களின் தாக்கத்தின் காரணமாகத் தோற்றம் கொண்டன. ஐரோப்பியர்கள் கிரேக்க ரோம செவ்வியல் இலக்கியங்களை நகல்செய்யவும் செய்தனர். அரிஸ்டாடில், ஹோராஸ் கவிதைக் கோட்பாடுகள் 15,16ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிதைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கிரேக்க நாடகங்கள் ஐரோப்பிய நாடகங்களின் பாதையைத் தீர்மானித்தன. டிரேடன், போப், ஜாண்சன் ஆகியோரிடம் செவ்வியல் இலக்கியத் தாக்கத்தைத் தெளிவாகவே இனம் காணமுடிகிறது. ஐரோப்பாவில் புதுச்செவ்வியல் இலக்கியப்போக்கும் தோற்றம் கொண்டது. ஆங்கில இலக்கியத்தில் 17,18ஆம் நூற்றாண்டுகளைப் புதுச்செவ்வியல் இலக்கியப் போக்கின் காலகட்டமாகச் சுட்டவேண்டும். ரோம செவ்வியல் இலக்கியங்கள் ஆங்கில இலக்கியத்தின்மீது இக்காலகட்டத்தில் பெரும் தாக்கத்தைச் செலுத்தின. உணர்ச்சிமையவாதக் கவிஞர்கள் செவ்வியல் இலக்கியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். ஆங்கில இலக்கிய மரபின் மூலமாக கிரேக்க இலக்கியத்தைக் கொண்டனர். வடமொழிகுறித்த அறிமுகம் ஐரோப்பாவை அடைந்தபோது, செவ்வியல் இலக்கியமாக வடமொழி இலக்கியத்தையும் கொண்டனர்.

செவ்வியல் இலக்கியத்திற்கென வகுக்கப்பட்ட அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கிய இலக்கியமாகச் சங்க இலக்கியத்தைக் குறிப்பிட வேண்டும். தமிழ் இலக்கிய மரபின் துவக்கப் புள்ளியாகச் சங்க இலக்கியம் அமைகிறது. சங்க இலக்கியத்தின் அழகியல் கூறுகளே பிற்கால மரபின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன. அதன் அகம், புறம் பாகுபாடு சமகால இலக்கியத்திற்கும் பொருந்துவதாக அமைகிறது. 17,18ஆம் நூற்றாண்டுகளில் செவ்வியல் இலக்கியங்கள் சமய அடிப்படையிலானப் புறக்கணிப்பைப் பெற்றன. "சங்க நூல்கள் எல்லாம் புத்த சமண சமயச் சார்புடையன; அவைகளைப் பயிலுதல் கூடாது என்று எனது இளமைப் பருவத்திற் சில சிவனடியார்கள் கூறியதுண்டு." 1940ல் வெளியான சங்க இலக்கியங்களின் சமாஜப் பதிப்பின் முன்னுரையில் இடம்பெறும் இவ்வரி முக்கியத்துவம் வாய்ந்தது. ஐரோப்பிய புதுச்செவ்வியல் போக்கிற்கு நிகரான ஒருபோக்குத் தமிழில் எழாததற்கு இது காரணமாக அமைந்தது. திருமுருகாற்றுப்படைக்கு மட்டுமே அதிக எண்ணிக்கையிலான ஏட்டுப் பிரதிகள் கிடைத்துள்ளன. பெரும்பான்மையான சங்க இலக்கிய ஏட்டுப்பிரதிகள் ஒரே மூலத்திலிருந்து நகல் செய்யப்பட்டவை எனக் கருத இடமுண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சங்க இலக்கியங்கள் அச்சிடப்பட்டு, பரவலான வாசிப்பினைப் பெறத்துவங்கின. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் அரசியல் கிளர்ச்சி வலுபெற்றபோது, வடமொழியும் தமிழும் முரண் இணையாக முன்நிறுத்தப்பட்டன. பழமைக் காரணமாக சங்கச் செவ்வியல் இலக்கியமும் கவனம் பெற்றது. ஆனால் சங்க இலக்கியத்திலிருந்து அறியலாகும் பழந்தமிழர் வாழ்வே மிகுதியாகப் பேசப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை ஆங்கிலச் செவ்வியல் நாடக வடிவைத் தழுவித் தன் நாடகத்தை எழுதியுள்ளார். ஒருவகையில் இதனைச் செவ்வியல் போலியாகக் குறிப்பிட வேண்டும். சமகாலத்தில் இலட்சுமணப்பிள்ளை சொபாக்ளிசின் கிரேக்கச் செவ்வியல் நாடகம் ஒன்றை வீலநாடகம் என தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சுந்தரம்பிள்ளை உரையாசிரியர் மொழிநடையை அடியொற்றி தன் நாடகத்திற்கான மொழிநடையை அமைத்துக்கொண்டபோது, இலட்சுமணப்பிள்ளை இருபதாம் நூற்றாண்டின் எளிமையான மொழியில் செவ்வியல் இலக்கியப்பண்பை எழுப்பமுயன்று வெற்றியும் பெற்றுள்ளார். 'அன்னிமிஞிலி' போன்ற நாடகங்கள் சங்க இலக்கியத்திலிருந்து அறியலாகும் கதைகளை நாடக வடிவில் முன்வைத்தாலும், சுந்தரம் பிள்ளையின் நாடக வடிவைத் தழுவி செவ்வியல் போலிகளாக அமைந்துள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலப் பேராசிரியரும் மலையாளக் கவிஞருமான ஐயப்ப பணிக்கர் சங்க இலக்கியத்தின் திணைக்கோட்பாட்டினைச் சமகாலத்தின் மாற்று அழகியலாக ஆங்கிலத்தில் முன்வைத்துள்ளார். க.நா. சுப்பிரமணியம் போன்ற தமிழ் விமர்சகர்கள் திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் சமகால இலக்கியத்தை எதிர்கொள்ள முடியும் எனக் கூறிவந்தாலும், சமகால விமர்சனம் அதைப் புறக்கணித்துள்ளது என்றே கூறவேண்டும்.

தமிழில் நவீனத்துவத்தின் தேக்கநிலைக்குப்பின் இளம்படைப்பாளிகள் மரபை மறுபார்வைக்கு உட்படுத்தினர். செவ்வியல் இலக்கியங்கள் புதிய கவனிப்பைப் பெற்றன. சங்கச் செவ்வியல் இலக்கியத்தினுடனான தொப்பிள்கொடி உறவை வலுப்படுத்தினர். ஜெயமோகனின் காடு, கொற்றவை எனும் நாவல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக