வெள்ளி, 19 ஜூன், 2015

கருணை வேலை வழங்குவதில் ஆண், பெண் பாலின பாகுபாடு கூடாது -உயர் நீதிமன்றம்

"கருணை வேலை வழங்குவதில் ஆண், பெண் பாலின பாகுபாடு கூடாது. திருமணமான பெண்ணுக்கும் கருணை வேலை வழங்கலாம்" என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்த ஏ.ரோகிணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் விவரம் வருமாறு: என் தாயார் மின்வாரிய மதிப்பீட்டாளராக பணிபுரிந்தார். அவர் பணியின்போது இறந்தார். அவருக்கு நான் ஒரே வாரிசு. கருணை வேலை கேட்டு மனு கொடுத்தேன். ஆனால், எனக்கு திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி என் விண்ணப்பத்தை சிவகங்கை மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் நிராகரித்து உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து, கருணை வேலை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு: அரசுப் பணியில் இருந்து இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை வேலை வழங்கும்போது ஆண், பெண் வேறுபாடு பார்க்கக் கூடாது. கருணை வேலையைப் பொறுத்தவரை, இறந்த ஊழியரின் மகன் கருணை வேலை பெறுவதற்கு தடையில்லை. ஆனால், மகள்களுக்கு கருணை வேலை வழங்குவதற்கு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆண் வாரிசுகளுக்கான அளவீட்டினையே பெண் வாரிசுகளுக்கும் வழங்க வேண்டும். வயதான பெற்றோரை பாதுகாக்கும் பொறுப்பு ஆண், பெண் இருவருக்கும் உண்டு. ஆகவே, கருணை வேலை வழங்குவதில் பாலின பாகுபாடு கூடாது. மேலும், பெண் வாரிசுகளுக்கு கருணை வேலை மறுப்பது சரியல்ல. பெண்களுக்கு கருணை வேலை மறுப்பது அவர்களை வேறுபடுத்து வதாகும். எனவே, மனுதாரருக்கு 3 மாதத்தில் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக