தமிழகம், புதுவையில் பலத்த பாதுகாப்புடன் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 35.28% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது.
காலை 11 மணி நிலவரப்படி ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் 27% வாக்குகள் பதிவாகியுள்ளது. வட சென்னையில் 27.4%, தென் சென்னையில் 26.3% மத்திய சென்னையில் 25.4% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
காலை 11 மணி நிலவரப்படி தருமபுரியில் அதிகபட்சமான 42.9% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, காலை 9.15 மணியளவில் மத்திய சென்னை தொகுதியின் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தேர்தல் சுமுகமாக நடைபெற வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
திமுக தலைவர் கருணாநிதி காலை 10.55 மணியளவில் மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம் சாரதா பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
முன்னதாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இதே வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
சென்னை மயிலாப்பூரிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி கனிமொழி ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசுவதாக கூறினார். மேலும், தமிழகத்தில் 144 தடை உத்தரவு போட வேண்டிய தேவை இல்லை என்றார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினருடன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 11 மணியளவில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்றார். அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளும் வாக்காளர்களுக்கு மாறி மாறி பணப் பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சென்னை முகப்பேர் மீனாட்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், சென்னை நந்தனம் பள்ளியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக புகார் கூறினார். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்றும் கூறினார்.
நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வாக்கினை பதிவு செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த், காலை 7.15 மணியளவில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி ஆழ்வார்பேட்டை, மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
திருவான்மியூரில் நடிகர் அஜீத்குமார், அவரது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்கை பதிவு செய்தார்.
தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மக்களவை தொகுதியில் வாக்களித்தார்.
புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி காலை 7.30 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார்.
9 மணி நிலவரம்: 14.31% வாக்குகள் பதிவு
தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 14.31% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக கரூரில் 18%, குறைந்தபட்சமாக அரக்கோணத்தில் 8% வாக்குகள் பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் காலை 9 மணி நிலவரப்படி 16.45 சதவீத வாக்குகளும், காரைக்காலில் 16.43, மாஹேவில் 14.88%, ஏனாமில் 16.22% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக