செவ்வாய், 22 ஏப்ரல், 2014

பிரச்சாரம் ஓயந்த நிலையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு

வேட்பாளர்களின் பிரச்சாரம் ஓயந்த நிலையில், தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி, மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆறாவது கட்டமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் வாக்கு சேகரிப்புக்கான காலக்கெடு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறும்போது, "தமிழகம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு தினமான 24-ம் தேதி காலை 6 மணி வரை 36 மணி நேரத்துக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இந்த 36 மணி நேரத்துக்கு, 5 பேருக்கு மேல் கும்பலாக சேர்ந்து செல்லக்கூடாது. வீடு, வீடாக வாக்கு சேகரிக்கச் செல்வது தடுக்கப்படும். அதேவேளையில், திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது.

இன்று முதல் 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி ஹோட்டல், பார், பொது இடங்களில் மது விற்பனை செய்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு, 22-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடக்கூடாது.

இந்தத் தேர்தலையொட்டி, பணப் பட்டுவாடாவைத் தடுப்பதற்காக ஏற்கெனவே 2,000 நிலை கண்காணிப்புக் குழுக்கள் உள்ளன. தற்போது, மண்டல அளவில் மேலும் 5,000 குழுக்கள் அமைத்து கண்காணித்து வருகிறோம்.

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை நிலை ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் உள்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி சீட்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், தபால் அலுவலக கணக்குப் புத்தகம், பான் கார்டு, ஆதார் அட்டை, பென்ஷன் ஆவணம், தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, 100 நாள் திட்ட அடையாள அட்டை போன்ற 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்" என்றார் பிரவீண் குமார்.

இதனிடையே, தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களின்படி, ஜனநாயக ரீதியாகத் தேர்தலை நடத்திட வேண்டுமெனவும், பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டுமெனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தேர்தல் காலங்களில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால், அது சாதாரண ஜனநாயக செயல்பாட்டை முடக்குவதுடன், நியாயமான தேர்தல் சார்ந்த பணிகளைச் செய்வதற்கும் தடையாக இருக்கும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக