புதன், 23 ஏப்ரல், 2014

அங்கீகாரமில்லாத 723 பள்ளி அட்மிஷன் ரத்து: மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை

அரசு அங்கீகாரம் பெறாத 723 மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ரத்துசெய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகள், 5,071 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்பட 34,871 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. தனியார் தொடக்கப் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மட்டும் 6,278 பள்ளிகள் உள்ளன.

தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகிய அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு அங்கீகாரம் பெறவேண்டியது அவசியம். முதலில் 3 ஆண்டுகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கப்படும். 3 ஆண்டுகளில் விதிமுறைகளை முழுவதுமாக பூர்த்தி செய்யாவிட்டால் அவற்றை நிவர்த்தி செய்துகொள்ள அவகாசம் வழங்கி மேலும் 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் நீட்டிக்கப்படும். அனைத்து விதிமுறை களும் பூர்த்தி செய்யப்பட்டதும் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படுகிறது. நிரந்தர அங்கீகாரம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படும்.

இயக்குநருக்கு அரசு உத்தரவு

இந்நிலையில், அரசு அனுமதி, அங்கீகாரம் பெறாமல் செயல்படும் மழலையர் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து, உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் 1,296 மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் கண்டறியப்பட்டன. அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, மேற்கண்ட 1,296 பள்ளிகளில் 723 பள்ளிகளுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த அந்த 723 மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில் (2014-15) மாணவர் சேர்க்கையும் ரத்துசெய்யப் பட்டுள்ளது

தற்போது அந்த பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளை அருகில் உள்ள அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகளில் சேர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பட்டியல் விரைவில் வெளியீடு

அங்கீகாரம் பெறாத 723 பள்ளிகள் எவை என்று அறிந்துகொள்ள மாணவர் களும் பெற்றோரும் விரும்புவார்கள் என்பதால் இதுகுறித்து

''மாணவர் சேர்க்கை ரத்துசெய்யப் பட்ட பள்ளிகளின் பட்டியல் அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மாத இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் அட்மிஷன் ரத்து செய்யப்பட்ட பள்ளிகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்'' என்று தொடக்கக் கல்வி இயக்குநர்ஆர்.இளங்கோவன் .தெரிவித்தார்.



Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக