சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, வேலைவாய்ப்பு அலுவலகபதிவு மூப்பு அடிப்படையில், புதிய கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில், 1,000த்திற்கும் அதிகமான, கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களை முறையாக நியமனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு தேர்வை தமிழக அரசு நடத்தியது. இதில், 652 பேர் தோல்வி அடைந்தனர். பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 652 பேரையும், பணி நீக்கம் செய்ய, கடந்த ஆண்டு,உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில், கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 'பி.எட்., கல்வித்தகுதி பெற்ற கம்ப்யூட்டர் ஆசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், புதிய கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்ய, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. துறை வட்டாரம் கூறுகையில், 'உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்தும், புதிதாக கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டியது குறித்தும், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். அரசின் உத்தரவு வந்ததும்,
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், புதிய கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமிக்கப்படுவர்' என, தெரிவித்தது. எனவே, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,000த்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை, பதிவு மூப்பு அடிப்படையில், ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு ஆவன செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக