முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைத்துள்ளது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமனா அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு விபரம்:
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு விதிக்கபட்ட இடைக்காலத் தடை தொடரும்.
குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக முடிவெடுப்பதற்க்காக அரசியல் சாசன அமர்வுக்கு 7 கேள்விகளை உச்ச நீதிமன்றம் தயார் செய்துள்ளது. மேலும், தூக்கு ரத்து செய்யப்பட்டு ஆயுளாக குறைக்கப்படும் பட்சத்தில் அந்த கைதிக்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்க அதிகாரம் இருக்கிறதா என்பதையும் அரசியல் சாசன அமர்வே முடிவு செய்யும், இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
வழக்கு பின்னணி:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கடந்த பிப்ரவரி 18-ம் தேதி ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதையடுத்து முருகன் உள்ளிட்ட மூவர் மட்டுமல்லாது, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 4 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.
மூவர் உட்பட வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்து தமிழக சட்டசபையில், 20-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு மனு:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.முருகன் உள்ளிட்ட மூவருக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்ததற்கு எதிராக சீராய்வு மனுவை தாக்கல் செய்த மத்திய அரசு, குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவுக்கு எதிராகவும் மனு தாக்கல் செய்தது.
இதனையடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஓய்வுக்கு முன் தீர்ப்பு:
ராஜீவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்திருந்தார். 25-ம் தேதி ஓய்வு பெறப் போவதாகவும், அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கோவையில் அவர் கூறியிருந்தார்.
அதன்படி வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக