ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து,வாழ்க்கையை அனுபவித்து, அதன்பின்,புதிய வாழ்க்கையை தொடங்கமுடியுமா? ஆயிரம் எழுத்தாளர்களின் ஆக்கப்பூர்வமான தகவல்களை படித்தால்,ஆயிரம் ஆண்டு வாழ்ந்த அனுபவம் கிடைக்குமே. அடுத்தவர்களின் அனுபவங்கள் தான்...ஒவ்வொருவர் வாழ்க்கையின் அரிச்சுவடி. எழுத்துக்கள்... நேசிக்க வைக்கும், நம்மோடு பேசும், மனதை லேசாக்கும், அறிவைத் தூண்டும், ஆழமாய் யோசிக்க வைக்கும், இதயத்தை புரட்டும், இன்னதெனசொல்ல முடியாததவிப்பை உண்டாக்கும்.வாசிப்பு தான்,மனிதனை செம்மைப்படுத்தும், செழுமைப்படுத்தும். 'வாசிப்பை நேசித்தால்... வசமாகும் வாழ்க்கை' என்கின்றனர், புத்தகங்களை நேசிக்கத் தெரிந்தவர்கள்.
இன்று உலக புத்தக தினம். தங்களை மாற்றிய, தூண்டிய எழுத்துக்களை விவரிக்கின்றனர், இவர்கள்...
எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி (28 புத்தகங்கள் எழுதியவர்):
என்னைப் பாதித்த விஷயங்களை, கருத்துக்களை, எனது எழுத்துக்களில் இடம்பெறச் செய்துவிடுவேன். எழுத்தாளர் கலீல் ஜிப்ரானின்மொழிபெயர்ப்பு நாவலான 'தீர்க்கதரிசி' எனக்கு ஆர்வமூட்டியது. எனது, 'கண்ணா வருவாயா' புத்தகத்தில்,பகவத் கீதையைப் பற்றி, நம் கடமையைப் பற்றி, இவரது எழுத்துக்களாய் சொல்லியிருக்கிறேன். 1991ல் படித்தது,இன்னமும் நினைவிருக்கிறது. 'உன் வேலை என்பது, உன் அன்பின் வெளிப்பாடு; நீ செய்யும் வேலையை உன்னால்காதலிக்க முடியவில்லை என்றால், வேண்டாவெறுப்புடன் தான் உன்னால் வேலை செய்ய முடியும் என்றால்... உன்வேலையை தூக்கி எறிந்துவிட்டு, கோவில் வாசலில் அமர்ந்து, பிச்சை எடு. தன் வேலையை காதலிப்பவர் போடும் பிச்சையில், உன் வயிற்றை வளர்த்துக் கொள்; அதுவே உனக்கு சிறந்த வாழ்வு,'என்று சொல்லியிருப்பார்.இந்த வரிகளின் பாதிப்பு, என்னை எல்லா விதத்திலும் செம்மைப்படுத்தி வருகிறது.வருமான வரி தாக்கல் செய்வதில் தொடங்கி, எழுத்து, சிறு உதவி செய்வது வரை, இந்த வரிகள் தான்,வாழ்க்கை வழிகாட்டுதலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பேராசிரியர் இரா.மோகன்(113 புத்தகங்கள் எழுதியவர், தொகுத்தவர்):
பேராசிரியர் மு.வரதராஜன் எழுதிய 'கரித்துண்டு' நாவல், என் வாழ்க்கையை மாற்றிக் காட்டியது. தெருவில் கரித்துண்டால் ஓவியம் வரையும்சாமானியனின் நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டும் நாவல். கதாநாயகன் பெயர் மோகன், கதாநாயகி பெயர் நிர்மலா. இரண்டு பெயர்களுமே என்னை ஆழமாக பாதித்தது. இந்த பெயருடைய பெண்ணையே திருமணம் செய்ய வேண்டுமென, மனது உருப்போட்டது. அதையே செயல்படுத்தவும் முடிந்தது. அவர், 1972ல் மதுரைக்கு வந்தபோது, கையெழுத்து வாங்கினேன். அப்போது, 'தமிழ் உன்னை வளர்த்தது... தமிழை நீயும்வளர்க்க வேண்டும்' என்று, எழுதிக் கொடுத்தார்.இந்த இரண்டு வரிகள் தான், இன்றும் என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றன. பழமை மட்டுமின்றி, புதுமையையும் போற்றியவர் அவர். தனது புத்தகங்களுக்கு, மாணவர்களை அணிந்துரை எழுதச் சொன்ன, புதுமைக்கு சொந்தக்காரர் அவர். தலைமுறைகளை வடிவமைக்கக்கூடிய அவரது எழுத்துக்கு, தலைவணங்குகிறேன்.
எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன்(165 புத்தகங்கள் எழுதியவர்):
ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு எழுதிய 'பத்தாயிரம் மைல் பயணம்' எழுத்து தான், சமீபத்தில் படித்ததில் என்னை வியக்க வைத்தது. மனிதன் வாழ்க்கையில் பயணம் எவ்வளவு தூரத்திற்கு மேம்படுத்துகிறது. ஒரே இடத்தில் அடைந்து கிடந்தால், மனிதன் மனவிரிவு இல்லாமல் போகிறான். பயணத்தின் மூலம் மற்றவர்களின் மொழி, கலாசாரம், தொன்மையான செய்திகளை பெறமுடிகிறது என்பதை சொல்லியிருப்பார். படித்தது, கேள்விப்பட்டது, அனுபவித்தது மூன்றையும் கலந்து, புத்தகமாக்கியுள்ளார். நூறு புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்ளும் விஷயங்கள், ஒரே புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்னொன்று, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'நமது இந்தியா'. சுதந்திரத்திற்கு முன்னும், பின்னுமான பெரும்பாலான தகவல்கள், புதியவை. இரண்டு புத்தகங்களுமே, மாணவ சமுதாயத்தை மேம்படுத்தக் கூடியவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக