சனி, 19 ஏப்ரல், 2014

அரசன் வணங்கிய ஆசிரியர்

ராமநாதபுரம் அரசர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 38 ஆண்டுகள் பணியாற்றிய இராஜா ஐயர் 1962 முதல் 1974 வரை தமிழக சட்டமன்ற மேலவையில் ஆசிரியர் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

இராஜா ஐயர் பற்றி அன்றைய முதல்வர் அண்ணா மேலவையில் பேசும்போது,
""ஆசிரியர் சமுதாயத்திற்கு இவரைப் போல் உறுப்பினர்கள் கிடைத்தது இல்லை இனியும் கிடைக்க மாட்டார்கள். கல்வியின் தரம் உயர்வதற்கு ஏற்ற எண்ணத்தோடு அவர்கள் கேள்விகளைப் போடுவதும்,விளக்கங்களைப் பெறுவதும், விளக்கங்களை அளிப்பதுமாக மிகச்சிறந்தபணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.

அப்போது மேலவைத் தலைவராக இருந்த சி. பி. சிற்றரசு, ""சட்டமன்ற மேலவையின் வளர்ந்து வந்த பெரும் புகழுக்குத் தனது பண்பட்ட விவாதங்களினால் மேலும் பெருமை சேர்த்தவர் இராஜா ஐயர். ஆன்றவிந்து அடங்கிய சான்றோர் வரிசையில் உள்ள பெரிய மனிதர்'' என்று குறிப்பிட்டார். இராஜா ஐயர் 1913ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். அவரது தந்தை முத்துசாமி ஐயரும் பள்ளி ஆசிரியராக இருந்தவர்.

இராஜா ஐயர், பரமக்குடி, பெரியகுளம், மதுரை போன்ற ஊர்களில் பள்ளிப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பையும் முடித்த பிறகு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கணித ஆனர்ஸ் பட்டம் பெற்றார். பல்கலைக்கழக மாணவர் மன்றத் தலைவராகவும் இருந்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் இவருடைய கல்லூரித் தோழர். அன்றைக்கு கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கி இருந்த இராமநாதபுரம் பகுதியில் அரண்மனை முதல் சின்னஞ்சிறு குடிசை வரை கல்வியின் வெளிச்சம் பரவச் செய்வதையே தம் வாழ்வின்தலையாய பணியாகக் கொண்டார்.

பதவி உயர்வுக்கு எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும் அவற்றை யெல்லாம் மறுத்து அதே ஊரிலேயே பணியாற்றி ஓய்வு பெற்றார். இராமநாதபுரம்இராஜா உயர்நிலைப் பள்ளியில் அவர் பணியாற்றிய அந்த 38 ஆண்டுகளில் அவரிடம் படித்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பற்றிய அத்தனை விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருந்த அவருடையநினைவாற்றல் வியக்கத்தக்கதாகும்.

இராமநாதபுரத்தைச் சுற்றிலும் உள்ள கிராமங்களிலிருந்து தினம்நடந்தே பள்ளிக்கு வரும் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்கும் முறையை ஊர்ப்பணக்காரர்களிடம் நிதி வாங்கி ஏற்படுத்தினார்.
ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் இணையற்ற பேச்சாளராகிய இராஜா ஐயர் மாணவர்கள் படித்து முன்னேறுவதோடு, நல்ல கண்ணியமுள்ள குடிமக்களாக வாழவேண்டும் என்பதையும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தினார்.

1965இல் நல்லாசிரியருக்கான தேசிய விருது பெற்ற இராஜா ஐயரின் அறுபதாவது பிறந்த நாள் விழா 1973ல் நடைபெற்றது. அந்த மணிவிழாவின் போது, பலரும் அவர் காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெற்றனர். அப்போது இராமநாதபுரம் மன்னராக இருந்தவரும், ஆசிரியரின் முன்னாள் மாணவருமான இராமநாத சேதுபதியும் காலில் விழுந்து வணங்கினார்.
இராமநாதபுரம் மன்னர் பரம்பரையிலேயே மற்றவர்கள் காலில் மன்னர் விழுவது அதற்கு முன்னால் ஒரே ஒரு முறைதான் நடந்திருக்கிறது. விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி சேதுபதி பூமியில் கால் வைத்தவுடன் அவருடைய காலில் விழுந்து மன்னர் பாஸ்கர சேதுபதி வணங்கினார். அதற்குப் பிறகு இதுதான்.

எளிய வாழ்க்கை உயர்ந்த சிந்தனை சொல்லும் செயலும் ஒன்றுபட்ட நேர்மை இவையே இராஜா ஐயர்.அவர் உடலால் மறைந்தார், எனினும் உள்ளத்தால் என்றென்றும் வாழ்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக