புதன், 11 மார்ச், 2015

நியமனம், இட மாறுதலில் விதிகளை மீறுவதால் நேர்மையான அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர்: அரசு ஊழியர் சங்கங்கள் குற்றச்சாட்டு


நிர்வாகப் பணிகளில் விதி முறைகளை மீறி செயல்படுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதால் நேர்மை யான அதிகாரிகள் பாதிக்கப் படுவதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

வேளாண்மைத் துறையில் ஓட்டுநர் பணிக்கான காலி யிடங்களை நிரப்புவதில் விதிமுறை களை மீறி செயல்படுமாறு மேலிடத்தில் இருந்து நிர்ப்பந்திக் கப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாகவே செயற்பொறியாளர் முத்துக் குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாகவே வேளாண்மைத் துறை அமைச்ச ராக இருந்த அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அமைச்ச ரவையில் இருந்து விடுவிக்கப் பட்டார் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில், நேர்மையான முறையில் அதிகாரிகளால் நிர் வாகப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். விதிமுறைகளுக்கு மாறாக செயல்படுமாறு துறை அதிகாரிகளையும் அலுவலர் களையும் நிர்ப்பந்தம் செய்யும் போக்கு பல ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் இரா.பன்னீர்செல்வம் கூறியதாவது:

ஊழியர்கள் பணி நியமனம், பணியிட மாறுதல், பதவி உயர்வு போன்ற நிர்வாகப் பணிகளில்தான் அதிக அளவில் விதிமுறை மீறல்கள் நடக்கின்றன. அரசு அலுவலகங்களில் அதிகாரிகளும், ஊழியர்களும் நேர்மையாக பணி செய்வது என்பதே மிகவும் சவாலான விஷயமாக மாறிவிட்டது. விதிமுறைகளின்படி மட்டுமே நான் செயல்படுவேன் என்று எந்த ஒரு அதிகாரியோ, ஊழியரோ உறுதியுடன் இருந்தால், அவர் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது.

பணி நியமனம், பணியிட மாறுதல், பதவி உயர்வு போன்ற வற்றில் விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்றோ, சலுகைகள் வழங்க வேண்டும் என்றோ எந்த ஒரு ஊழியர் சங்கமும் கேட்ப தில்லை. அரசு வகுத்துள்ள விதி முறைகளை கண்டிப்பாக பின்பற்றி, அதன்படி மட்டுமே இந்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஊழியர் சங்கங்கள் போராடி வருகின்றன.

ஆனாலும் விதிமுறைகளுக்கு மாறாகவே பல நடவடிக்கைகள் நடக்கின்றன. இதனால் நேர்மை யான மற்றும் தகுதியான அதிகாரிகளும், ஊழியர்களும் தான் பெருமளவில் பாதிக்கப்படுகின் றனர். இது எல்லா துறைகளிலும் இருக்கிறது.

இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கு.பால சுப்பிரமணியன் கூறியதாவது:

வேளாண் அதிகாரி முத்துக் குமாரசாமி தற்கொலை என்பது ஒரு சம்பவம் மட்டுமே. முத்துக் குமாரசாமி போல பாதிக்கப்பட்ட நேர்மையான அதிகாரிகளும், ஊழியர்களும் ஏராளமானோர் உள்ளனர். அரசுப் பணியாளர்களின் பணி நியமனமும், இட மாறுதலும் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு ஏராளமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி நடந்தால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், விதிமுறைகளை மீறி நியமனம் செய்வதும், பணியிட மாறுதல் செய்வதும் தமிழகத்தில் ஒரு தொழிலாகவே மாறிவிட்டது.

விதிமுறைகளை மீறி செயல் படும் துப்புரவுப் பணியாளர், காவலர் உள்ளிட்ட கடைநிலை பணியாளர்கள் மீதுகூட அந்த மாவட்டத்தில் உள்ள துறையின் தலைமை அதிகாரியால் சுதந்திர மாக நடவடிக்கை எடுக்க முடியாது. ஒருவேளை அந்த அதிகாரி நடவடிக்கை எடுத்தாலும், அதை விதிமுறைகளுக்கு மாறாக ரத்து செய்யக் கூடிய வாய்ப்பு அந்த கடைநிலைப் பணியாளருக்கு தாராளமாகக் கிடைக்கிறது.

தமிழகத்தில் ஏதேனும் ஓர் ஆண்டு அல்லது 6 மாதத்தை எடுத்துக்கொண்டு அந்த காலகட்டத்தில் மட்டும் அனைத்து அரசுத் துறைகளிலும் நடந்த பதவி உயர்வு, பணியிட மாறுதல் நடவடிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தினால், எத்தனை விதிமீறல்கள் நடந்துள்ளன என்பது வெளிச்சத்துக்கு வரும்.

குடியரசுத் தலைவரோ, பிரதமரோ சொன்னால்கூட விதி முறைகளுக்கு உட்பட்டு மட்டுமே அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்றுதான் நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால் அரசிய லமைப்புச் சட்டம் கூறும் அந்தக் கடமையை நிறைவேற்ற முடியாமல் நேர்மையான அதிகாரிகளும், பணியாளர்களும் தவிப்பதுதான் எதார்த்த நிலையாக உள்ளது.

இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.

கூடுதல் பொறுப்புகளால் மன உளைச்சல்

கோவை

கூடுதல் பணிச் சுமை குறித்து பெயர் வெளியிட விரும்பாத வேளாண் அலுவலர்கள் சிலர் கூறியதாவது:

வேளாண்மை பொறியியல் பிரிவில் தலைமைப் பொறியாளர் பதவியில் உள்ள 2 பேரும் 4 ஆண்டுகளாக பொறுப்பு அதிகாரிகளாகவே உள்ளனர். 7 கண்காணிப்பு பொறியாளர், 15 செயற்பொறியாளர். 55 உதவி செயற்பொறியாளர் உட்பட தமிழகம் முழுக்க 50 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. அங்கெல்லாம் பொறுப்பு அதிகாரிகளே பணியில் உள்ளனர். கோவை மண்டலத்தில் ஒரே அதிகாரி சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என 8 மாவட்டங்களை கவனிக்கிறார். அதேபோல விருதுநகர் அதிகாரி ஒருவர் 9 மாவட்டங்களை கவனிக்கிறார். இப்படி ஒருவரே பல ஏரியாக்களை கவனிப்பதால் மன உளைச்சல் மட்டுமல்ல நெருக்கடியும் ஏற்படுகிறது. இந்த அவலத்தை நீக்கக் கோரி துறை அமைச்சரை விரைவில் சந்திக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக