உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் சுமார் ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

இது எதிர்பார்த்ததை விட இருமடங்காகும். தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடி இலக்கு நிர்ணையித்திருந்தது என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.


சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் வியாழக்கிழமை மாலை முதல்வர் ஜெயலலிதா பேசியதன் முக்கிய அம்சங்கள்:

* "உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு இறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை இறுதி செய்வதே இலக்காக இருந்தது, ஆனால் தற்போது இரு மடங்காகியுள்ளது. 

* 1991 முதல் 2011 வரை கையெழுத்திடப்பட்ட அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரவேற்கப்பட்ட ஒட்டுமொத்த முதலீட்டைக் காட்டிலும் இது அதிகம். இன்று 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு ஆவணங்கள் பறிமாறிக் கொள்ளப்பட்டன.

* இறுதி செய்யப்பட்ட மொத்த 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டில், உற்பத்தித் துறைக்கு 1,04,286 கோடியும், மின்சக்தித் துறைக்கு ரூ.1,07,136 கோடியும், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.10,950 கோடியும், கைத்தறி மற்றும் ஜவுளி ஆடைத் துறைக்கு ரூ.1955 கோடியும், வேளாண் துறைக்கு ரூ.800 கோடியும், மீன்வளத்துறைக்கு ரூ.500 கோடியும் முன்மொழியப்பட்டுள்ளன.

* 5345 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டம் ரூ.35,366 கோடி முதலீட்டில் உருவாவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

* ரூ.16,533 கோடி முதலீட்டில் 10,000 சிறு மற்றும் நடுத்தர தொழிற்கூடங்கள் அமைக்கவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

* உற்பத்தித் துறைக்காக முன்மொழியப்பட்டுள்ள ரூ.1,04,286 கோடி முதலீட்டில் 50% தென் மாவட்டங்களுக்கே செல்லவுள்ளது. 

* தமிழ்நாடு ஏற்கெனவே உலகின் 10 பெரிய ஆட்டோமொபைல் தொழிற்சாலை நகரங்களில் உள்ளது. இந்த மாநாட்டில் வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களின் படி உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நகரமாக சென்னை மாற்றமடையும்.

* ஜவுளித்துறை, நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்பான சேவைகள், எலெக்ட்ரானிக்ஸ், ஏரோஸ்பேஸ், மற்றும் ராணுவ உற்பத்தி ஆகிய துறைகளுக்கான கொள்கைத் திட்டங்களை தமிழக அரசு உருவாக்கும்.

2017-ல் மாநாடு

* முதலீட்டாளர்களின் திட்டங்களுக்கு 30 நாட்களில் அரசு அனுமதி வழங்கும். "திட்ட நடைமுறைகள் குறித்த சட்ட ரீதியான, திட்ட நிறைவேற்றத்துக்கான முன்-நடைமுறைகள் ஆகியவற்றுக்கு ஆன் லைன் மூலம் எனது அரசு அனுமதிகளை வழங்கும்.

* மேலும், இதே போன்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் என்றும் அடுத்த மாநாடு 2017-ல் நடைபெறும்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.