ஆயுர்வேத மருத்துவத்தில் நெய் முக்கியத்துவம் வாய்ந்தது. அது மட்டுமல்லாமல் உணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான 10 உணவு வகைகளில் நெய்யும் ஒன்று.

மருத்துவரீதியாக நெய் மிதமான குளிர்ச்சியை அளிக்கக்கூடிய பொருள். இளமையோடு இருக்க உதவும் பொருளை உள்ளடக்கி யிருப்பதால், நெய் ஆயுளை நீட்டிக்கச் செய்கிறது. இதனால்தான் பெரும்பாலான ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் நெய் முக்கிய அம்சமாக விளங்குகிறது.

செரிமானத்துக்கு உதவி

ஒருவருடைய உடல்நலம், உட்கொள்ளும் உணவைப் பொருத்ததல்ல. செரிமானமடைவதையே சார்ந்துள்ளது. சத்து நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடும்போது, அது சரியாகச் செரிக்காவிட்டால் உரிய பலன் கிடைக்காது. உணவுப் பொருள் முழுமையாகச் செரித்தால்தான், சத்துகள் உடலுக்குக் கிடைக்கும்.

இந்த வகையில் உணவு முழுமையாகச் செரிமானமடைய நெய் உதவுகிறது. இதன்மூலம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் அதிகபட்ச சத்து கிடைக்கிறது. அதனால் ஆரோக்கியமான மனிதனின் உடலுக்கு, நீரைப் போல் நெய்யும் இன்றியமையாதது.

வறுப்பதற்காக நெய்யைப் பயன்படுத்தும்போது, உணவிலுள்ள ஈரப்பதத்தை நீக்கப் பயன்படுவதுடன், உடலுக்கு நன்மையும் தருகிறது. உணவைத் தயாரித்த பின்பும் நெய்யைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். நாள்பட்ட செரிமானப் பிரச்சினை மற்றும் வாய்வுத் தொல்லைகளுக்கு நெய் நிரந்தரப் பலன் கொடுக்கிறது. இதில் பசு நெய் சிறப்பானதாகக் கூறப்படுகிறது.

பலன்கள்

நெய் அறிவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது, நினைவாற்றல் பெருகும், ஸ்திரமான மூளைச் செயல்பாட்டுக்கு வழிவகுக்கும், பார்வைத் திறன் அதிகரிக்கும், இல்வாழ்க்கை சிறக்கும். குழந்தைகளுக்கும் நெய் ஏற்றது. முதியவர்கள் உடலைச் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

தினசரி நெய் சேர்த்துக்கொள்வதன் மூலம், தோலின் ஈரப்பதம் சீராக இருக்கும். நோய்த்தொற்றைத் தடுக்கவும், சரும ஒவ்வாமை, நிறம் மாறுவது, வயதாகும்போது ஏற்படும் தோல் சுருக்கம் போன்றவற்றையும் நெய் தடுக்கும்.

ரத்தத்தின் தன்மையையும் அளவையும் பாதுகாக்க நெய் உதவுகிறது. உடலின் மேம்பட்ட ஆரோக்கியம், தோலின் பளபளப்பி லிருந்து இதை அறிந்துகொள்ளலாம். குரல் வளம் நீடிக்கவும் நெய் உதவும்.

சிறப்புத்தன்மை

நெய்யில் கரையும் உணவுப் பொருட்கள், நேரிடையாக மூளைக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும், உடலின் மற்றப் பாகங்களுக்கும் கொண்டு செல்லும் விசேஷத் தன்மை நெய்க்கு உண்டு. நெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளும் இதேபோலத்தான். நெய் மூலம் இப்பொருட்கள் உடல் முழுவதும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

இதனால்தான் பல வகை மருந்துப் பொருட்கள் நெய்யை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. உயிர் காக்கும் ஆயுர்வேத மருந்துகள், புத்துணர்வூட்டும் மருந்துகள், செல்களுக்குப் புத்துயிர் அளிக்கும் மருந்துகளில் நெய் முக்கியமாகச் சேர்க்கப்படுகிறது.

மருந்துகளில்...

நரம்பு மண்டலச் செயல்பாடுகளைப் பாதிக்கும் நோய்களைக் குணப்படுத்த, நெய்யை மூலப்பொருளாகக் கொண்ட மருந்துகளே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன.

மூளைத் திசுக்களைச் சிறப்பாகச் செயல்பட வைப்பதில் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. நெய் குறைவாகப் பயன்படுத்தும்போது, மறதி நோய், பார்க்கின்சன்ஸ், அல்செய்மர் நோய் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. மூளை செல் பாதிப்பு, மனஅழுத்தம், மனச்சிதைவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதன் பின்னணியில் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மயக்கம், வலிப்பு நோய், தலை, கண், காதில் ஏற்படும் நோய்கள், பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதில் நோய் முக்கிய பங்கு வகிக்கிறது. புண்கள், கொப்புளங்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது. நெய் சேர்க்கப்பட்ட மருந்துகள் காயம், தீ மற்றும் விஷப் பாதிப்புகளைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன . எனவே, உணவாகப் பலனளிப்பது மட்டுமல்லாமல், மருந்துகளிலும் நெய் முக்கிய பங்கு வகிப்பதிலிருந்து அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.


நெய் மருந்துகள்

நெய் சேர்க்கப்பட்ட சில ஆயுர்வேத மருந்துகள்:

இந்துகாந்த கிருதம்

உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க உதவும்.

கல்யாணக கிருதம்

குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க அளிக்கப்படுகிறது.

டாடிமாதி கிருதம்

ரத்தத்தில் உள்ள அனைத்துச் சத்துகளும் மேம்பட, சருமம் பளபளப்பாக இருக்க உதவும்.

மாதுளம் பழம் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தக் கிருதம், ரத்த நலனைப் பராமரிப்பதன் மூலம் தோலை மிருதுவாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

திரிபலா கிருதம்

உடலில் உணர் உறுப்புகளையும், அவற்றின் செயல்பாடுகளையும் மேம்படுத்த உதவுகிறது.

எவ்வளவு சாப்பிடலாம்?

# உள்ளுக்குச் சாப்பிடும் மருந்துகளில் நெய் முக்கியமானது. வெளிப்புண்ணுக்கு தடவவும் பயன்படுகிறது. தீக்காயம், அரிப்பு, உலர்தன்மை ஆகியவற்றுக்கு நெய் சிறந்த தீர்வு. சில நேரம் மருத்துவ மலமிளக்கியாகவும் தரப்படுவது உண்டு.

அதேநேரம் ஆயுர்வேத மருத்துவரின் பரிந்துரைப்படி நெய்யில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.- சரியான செரிமானமடைந்தால், நெய் எவ்விதத் தீய விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. உணவில் நெய்யைச் சீராகப் பயன்படுத்துவதால் நன்மை கிடைக்கும், கொழுப்பு உடலில் சேரும்.

# சுவாசம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்களுக்கு நெய் பரிந்துரைக்கப்படுவதில்லை. சளி அதிக அளவில் இருந்தாலும் நெய் பரிந்துரைக்கப்படாது.

# ஓர் ஆரோக்கியமான மனிதர் தினசரி 5 மி.கிராம் அளவுக்கு உணவில் நெய்யைச் சேர்த்துக்கொள்ளலாம்.

 - கட்டுரையாளர், சஞ்ஜீவனம் ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் ஆயுர்வேத மருத்துவர்