செவ்வாய், 15 செப்டம்பர், 2015

பள்ளியின் கழிப்பறையும் கற்றுக் கொடுக்கும்!

COMMENT   ·   PRINT   ·   T+ .

கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி மலுமிச்சம்பட்டி. இங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை வேறு. ஆனால் இன்று இந்த பள்ளியின் நிலை தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் பெருமை பொங்க கூறுகின்றனர்.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பள்ளிக்கு ஒருபுறம் ஊராட்சி நிர்வாகமும், மறுபுறம் தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றன. இதனால் ஆண்டுதோறும் இங்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதாவது இரண்டு வருடம் முன்பு 180 ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, இந்த ஆண்டு 255-ஐ எட்டியுள்ளது.

தனியார் பள்ளிகளே கற்றுக் கொள்ளும் அளவுக்கு இந்த பள்ளியில் பல்வேறு வசதிகள் இருப்பதாகவும், இந்த பள்ளியை தரம் உயர்த்தினால் எங்கள் குழந்தைகள் மேலும் பயனடைவார்கள் என்றும் கூறுகின் றனர் இப்பகுதி பொதுமக்கள்.

கழிப்பறையும் கற்றுக் கொடுக்கும்

பள்ளியின் வகுப்பறைகளில் மாணவர்களின் சீருடைகளில் இருந்து, மேஜை, கரும்பலகை அனைத்திலுமே கவனம் ஈர்க்கும் வகையில் புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. இதேபோல பள்ளி வளாகத்தில் தரம்பிரிப்புக் குப்பைத் தொட்டிகள், காய்கறித் தோட்டம், மாணவர்களால் வளர்க்கப்படும் மரங்கள் என கல்வியைத் தாண்டி இங்கு கற்றுக் கொள்ளும் படிப்பினைகள் ஏராளம்.

குறிப்பாக, இப்பள்ளியின் கழிப்பறை அனைவரது கவனத்தை யும் ஈர்க்கிறது. அசுத்த, அலங் கோலங்களின் அடையாளமாக இருக்கும் கழிப்பிடங்கள், இங்கு கற்றுக் கொடுக்கும் இடங்களாக உள்ளன. கழிப்பிடச் சுவர் முழுவதும் நன்னெறிகளைக் கற்றுக் கொடுக்கும் சித்திரங்களும், அறிவுப்பூர்வமான தகவல்களும் நிறைந்து கிடக்கின்றன.

பாராட்டும், பரிசும்

பள்ளித் தலைமையாசிரியர் ஆர்.சதி கூறியதாவது: இந்த பள்ளிக்கு நான் வரும்போது பாழடைந்த கட்டிடமாக இருந்தது. பள்ளித் தரப்பிலிருந்து நாங்களும், ஊராட்சித் தலைவரும் இணைந்து தனியார் நிறுவனங்களை அணுகினோம். இதன் பயனாக எல் அன்ட் டி நிறுவனம் மட்டும் எங்கள் பள்ளிக்கு ரூ.27 லட்சத்துக்கு பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. விகேசி நிறுவனம், குழந்தைகளுக்கு தேவையான காலணிகளை வழங்கியுள்ளது. ஒவ்வொரு முக்கிய தினங்களிலும் ஊராட்சி நிர்வாகம் மூலம் மாணவர்களுக்கு பலவிதமாக பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதனுடன் அரசின் விலையில்லாப் பொருட்களையும் கொடுப்பதால், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களும், வசதியுடன் படித்துச் செல்கின்றனர்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை படிக்க வைப்பது மட்டும் ஆசிரியர் பணியல்ல. படிக்க முடியாத மாணவர்களுக்கு கல்வியைக் கொடுக்க வேண்டும். ஈச்சனாரி அருகே பொம்மை விற்பனையில் ஈடுபட்டிருந்த 4 வடமாநில சிறுவர்களை எங்கள் பள்ளியில் படிக்க வைக்கிறோம். இது தவிர வேலைதேடி இங்கு வந்துள்ள வட மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் 40 பேர் இங்கு படிக்கின்றனர். தமிழ் வழியில் 5-ம் வகுப்பு வரையும், ஆங்கில வழியில் 3ம் வகுப்பு வரையும் வகுப்புகள் உள்ளன. அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஆங்கில அறிவு தேவை என்பதால் தனியார் நிறுவன உதவியுடன் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி, எளிய கணிதப் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

முழு வருகைப்பதிவு, நல்ல தேர்ச்சி, சுய சுத்தம், வகுப்பறைச் சுத்தம், தலைமைப்பண்பு என தனித்தனியாக மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்குகிறோம். பரிசுகளும், பாராட்டுகளை மாணவர்களை மேலும் ஆர்வமுடையவர்களாக மாற்றும். அந்த ஆர்வத்துடன் கல்வி கற்கும்போது, படிப்பு எளிமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக