மதுரை புத்தக காட்சியில் அமைக்கப்பட்டிருந்த 'தி இந்து' அரங்கில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்கள் விற்கப்பட்டன. மேலும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என்ற தலைப்பிட்ட எழுதுபலகையில், 'இதை தங்களால் வாசிக்க முடிந்தால் நன்றி சொல்வீர் உமது ஆசிரியர்களுக்கு' என்ற வேண்டுகோள் இடம்பெற்றிருந்தது.

அதைப் பார்த்ததும் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் தங்கள் கருத்துகளை எழுதினர். சுமார் 400 பேர் தங்கள் கருத் துகளை பதிந்திருந்தனர். அதில் சிறந்த வாசகத்தைத் தேர்வு செய்யும் பொறுப்பு நமது ஆசிரியர் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெரும்பாலானவர்கள் சிறப்பான கருத்துகளை பதிந்திரு ந்ததால், அதில் 3 பேரை மட்டும் தேர்வு செய்வது என்பது சிரமமாக இருந்தது. இருப்பினும் சொல் லவந்த கருத்தை மிகச்சுருக்கமாக, அதேநேரத்தில் அழகாக வெளிப்படுத்தியிருந்த 3 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், மேலூரை சேர்ந்த பள்ளி ஆசிரியை அழ.பா.சுதா எழுதியிருந்த, 'அம்மா என்று அழ மட்டுமே தெரிந்திருந்த என்னை அம்மா என்று எழுதவைத்த என் ஆசானுக்கு நன்றி' என்ற வாசகம் முதலிடத்தை பிடித்தது. இதேபோல "எனக்கு கண்களைக் கொடுத்தது பெற்றோர், அதில் ஒளியைக் கொடுத்து என் ஆசிரியர்கள். பிறந்ததும் சுவாசித்தேன், ஆசிரியர்களால் தான் வாசிக்கிறேன்" என்ற வாசகத்தை எழுதிய செம்பட்டியை சேர்ந்த எஸ்.ராமு 2-ம் இடத்தை பிடித்தார். "என் அக இருளை அகற்ற வந்த மெழுகுவர்த்தியும், மனமென்னும் நிலத்தை வளப்ப டுத்திய கார்மேகமும் ஆசிரியர் தான்" என்ற வாசகத்தை எழுதிய பா.சிவா 3-ம் இடத்தைப் பிடித்தார்.

இவர்கள் 3 பேரும் வரும்12-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு மதுரை கே.கே.நகரில் உள்ள 'தி இந்து' அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளனர். அன்றைய தினம் மதுரை பதிப்பு 'தி இந்து' நாளிதழின் கௌரவ ஆசிரியராக அவர்கள் சிறப்பிக்கப்படுவர். அதாவது, ஞாயிற்றுக்கிழமை 'தி இந்து' தமிழ் நாளிதழை வடிவமைக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.