செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

பத்தாம் வகுப்பு தேர்வை 9.15 மணிக்குத் தொடங்குவது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும்

பத்தாம் வகுப்பு தேர்வை வழக்கமான நேரமான காலை 10 மணிக்குப் பதிலாக9.15 மணிக்குத் தொடங்குவது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும் என தலைமையாசிரியர்களும் கல்வியாளர்களும் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்புத் தேர்வு வரும் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம்தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வு வழக்கமான நேரத்தை விட 45 நிமிஷங்கள் முன்கூட்டியே 9.15 மணிக்குத் தொடங்கும் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த நேர மாற்றத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அதோடு, பத்தாம் வகுப்புத் தேர்வை மீண்டும் பழைய நேரத்திலேயே தொடங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் பி.இளங்கோவன்:கிராமப்புற மாணவர்கள், காலை 9.30 மணிக்கு பள்ளிக்கூடம் என்றாலே போதிய பஸ் வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 15 நிமிஷங்கள் வரை தாமதமாகத்தான் பள்ளிகளுக்கே வருவார்கள். தேர்வுக்கு இதுபோல் தாமதமாக வந்தால் அவர்கள் பதற்றமடைந்துவிடுவார்கள். மூன்று மணி நேரம் நடைபெறும் பிளஸ் 2 தேர்வை காலை 10 மணிக்குத்தொடங்குவதும், இரண்டரை மணி நேரம் நடைபெறும் பத்தாம் வகுப்புத்தேர்வை காலை 9.15 மணிக்குத் தொடங்குவதும் முரண்பாடாக உள்ளது.
பிளஸ் 2மாணவர்களாவது ஏற்கெனவே ஒரு பொதுத்தேர்வை எழுதியிருப்பார்கள். முதல்
முறையாக பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்பதற்றத்தோடு இருப்பார்கள். வீட்டிலிருந்து முன்னதாகவே கிளம்ப வேண்டும் என்றால் காலை உணவையும் தவிர்ப்பார்கள். இதனால் தேர்வுகளில் சரியாக எழுத முடியாததோடு, தேர்வு மையங்களில் மாணவர்கள் மயக்கமடைதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெறும்.
எனவே, இந்தத் தேர்வு காலை 10 மணிக்கே மீண்டும் தொடங்கப்பட வேண்டும். பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு: பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத பஸ்களில் செல்லும் மாணவர்களையும் கிராமப்புற மாணவர்களையும் இந்த நேர மாற்றம் பாதிக்கும். அந்த மணவர்கள் காலையில் எழுந்தவுடன் நேராக தேர்வு மையத்துக்குச் செல்வதற்குத்தான் நேரம் இருக்கும். தேர்வுக்காக இரவு முழுவதும் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்தவற்றை காலையில் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்வார்கள். நேர மாற்றத்தால் அதற்கு வாய்ப்பில்லாமல் போகும். குறைந்தபட்சம் 300 மாணவர்கள் இருந்தால் மட்டுமே தேர்வு மையம்வழங்கப்படுகிறது.
எனவே, ஒரு தேர்வு மையத்தில் 3 அல்லது 4 பள்ளிகளின் மாணவர்கள் தேர்வு எழுதுவர். தேர்வு மையங்கள் சற்று தொலைவில் இருந்தாலும், காலை 10 மணிக்குத் தேர்வு என்றால் மாணவர்கள் நிதானமாகவும், பதற்றமில்லாமலும் சென்று தேர்வு எழுதுவார்கள். தேர்வை முன்கூட்டியே நடத்தினால் இவர்கள் பதற்றத்துடன் தேர்வு மையங்களுக்கு வர வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாணவர்களின் நலன் கருதி தேர்வு நேரத்தை மாற்றக் கூடாது.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி: தேர்வை முன்கூட்டியே தொடங்குவது நிச்சயமாக இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும். புதிய தேர்வு நேரத்தால்மாணவர்கள் தேர்வுக்கு தயாராவது 1 மணி நேரமாவது பாதிக்கப்படும்.மாணவர்களின் நலன் கருதி இந்தத் தேர்வு நேரத்தை வழக்கமான நேரத்திலேயே நடத்த வேண்டும்.

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்: பத்தாம் வகுப்புத் தேர்வு நேர மாற்றம் நகர்ப்புற மாணவர்களைப் பெரிய அளவில் பாதிக்காது என்றாலும் கிராமப்புற மாணவர்களை நிச்சயமாகப் பாதிக்கும். காலை 9.15 மணி தேர்வுக்கு அவர்கள் 30 நிமிஷங்கள் முன்னதாகவே தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். காலை 8.45 மணிக்குத் தேர்வு மையங்களுக்குச் செல்லும் பஸ் வசதிகள் அனைத்து ஊர்களிலும் இருக்கும் எனக் கூற முடியாது. எனவே, இந்த மாணவர்கள் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக