வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

ஜென் கதை- இருக்கலாம்!

ஜென் கதை- இருக்கலாம்!

ஜப்பானில் ஒரு விவசாயி இருந்தார். எந்நேரமும் வயலில் வேலையே கதியாக அவர் இருப்பார். ஒரு நாள் அவரது பண்ணையில் வேலை பார்க்க வைத்திருந்த ஒரு குதிரை ஓடிப்போய்விட்டது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன், அவரது அண்டை வீட்டினர் "என்ன ஒரு துரதிருஷ்டம்" என்று அவரிடம் வருத்தத்துடன் கூறினர்.
அதற்கு அந்த விவசாயி, "இருக்கலாம்" என்றார்.
அடுத்த நாள் காலை எதிர்பாராத வகையில் அந்தக் குதிரை அவரிடமே திரும்ப வந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் அந்தக் குதிரையுடன் மூன்று காட்டுக் குதிரைகளும் வந்திருந்தன. "என்ன ஒரு ஆச்சரியம்" என்று அண்டை வீட்டினர் கூறினர்.


அதற்கும் அவர் "இருக்கலாம்" என்றே கூறினார்.
அதற்கு அடுத்த நாள், பழக்கப்படாத அந்தக் குதிரைகளில் ஒன்றின் மீது ஏறிய விவசாயியின் மகன், குதிரையைச் செலுத்த முயன்றான். அந்தக் குதிரை அவனைத் தூக்கியெறிய, அவனது கால் ஓடிந்து போனது. அப்போது விவசாயியின் அண்டை வீட்டினர், அந்த அசம்பாவிதம் தொடர்பாக அனுதாபமாகப் பேசினர்.
 "இருக்கலாம்" என்று மீண்டும் கூறினார் விவசாயி.
அதற்கு அடுத்த நாள், ராணுவத்துக்கு இளைஞர்களைச் சேர்ப்பதற்காக ராணுவ அதிகாரிகள் அந்த ஊருக்கு வந்தனர். விவசாயி மகனின் கால் உடைந்திருந்ததால், அவர்கள் அவனைத் தேர்ந்தெடுக்கவில்லை. கடைசியில் விஷயங்கள் எப்படி விவசாயிக்குச் சாதகமாக மாறிவிட்டன என்று கூறி, அண்டை வீட்டினர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
அப்போதும் அவர் சொன்னார், "இருக்கலாம்".