ஞாயிறு, 22 ஜூன், 2014

ஆங்கில வழிக் கல்வியை திணிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்!

ஆங்கில வழிக் கல்வியை திணிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்!

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளை திணிப்பதைக் கண்டித்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம், உலகத் தமிழ் கழகத்தின் சார்பில், திருநெல்வேலியில் சனிக்கிழமை முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டை சந்தைத் திடலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு உலகத் தமிழ் கழகத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் தலைமை வகித்தார். வழக்குரைஞர் ம.சு. சுதர்சன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தமிழக அரசு முதல்கட்டமாக 2013-14ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளிலும், உதவிபெறும் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பிரிவுகளைத் தொடங்கியது. இப்போது, இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பில் ஆங்கிலப் பயிற்றுமொழிப் பிரிவுகளைத் தொடங்கியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்பட்டுவிடும். இதேநிலை தொடர்ந்தால் 12ஆம் வகுப்பு வரையிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் அதிகரித்து தமிழ்வழிப் பிரிவுகள் குறையத் தொடங்கும்.
கடலூர் மாவட்டத்தில் 2013-14ஆம் ஆண்டில் 162 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் வழிப் பிரிவே இல்லை. ஆங்கில வழிப் பிரிவுகள் மட்டுமே உள்ளன. 21 நடுநிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவுகள் மட்டுமே உள்ளன. நிகழாண்டு ஆங்கிலவழிப் பிரிவில் 1.25 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலத்தில் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற மாயை ஏற்படுத்தப்படுகிறது. எனவே, ஆங்கில வழிக் கல்வியை திணிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக