திங்கள், 30 ஜூன், 2014

D06121 திறனாய்வின் வகைகள் - I

D06121 திறனாய்வின் வகைகள் - Iபாடம் - 1

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இப்பாடம் திறனாய்வின் வகைகள் என்றால் என்ன என்பது பற்றிப் பேசுகிறது.


திறனாய்வின் வகைகள் யாவை? அவற்றைக் கற்பதினால் என்ன பயன் என்பதைப் பேசுகிறது.


ஒவ்வொரு திறனாய்வு வகையையும் விவரித்துப் பேசுகிறது.


திறனாய்வின் முக்கியமான செயல்பாடுகளைச் சொல்லுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

திறனாய்வின் அடிப்படைப் பண்புகளை அறிய முடிகிறது.


திறனாய்வின் பல்வேறு வகைகளை அறிய முடிகிறது.


பாராட்டு முறை முதல் செலுத்துநிலைத் திறனாய்வு வரை உள்ள திறனாய்வு முறைகள் இலக்கியங்களில் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பதை அறிய வைக்கிறது.


இதனால் திறனாய்வின் முக்கியத்துவத்தை அறிகிறோம்.

பாடஅமைப்பு

1.1 திறனாய்வு வகைகள்
திறனாய்வின் வகைகள் என்பவை, திறனாய்வு செய்யப்படுவதற்குரிய வழிமுறைகள் இன்னின்ன என்பதன் அடிப்படையில் அமைகின்றன. உதாரணமாகப் பல இலக்கியங்களிலிருந்து அவற்றின் சில பண்புகளைச் சாராம்சமான பண்புகளாகப் பிழிந்தெடுத்து அடையாளங் காட்டுவது ஒருவகை. குறிப்பிட்ட ஒரு கொள்கை, அல்லது ஒரு பண்பு நிலையை அளவுகோலாகக் கொண்டு அதனைப் பல இலக்கியங்களோடு பொருத்திப் பார்த்தல் என்பது இன்னொருவகை. அதாவது திறனாய்வு செய்வதற்குரிய வழிமுறை (Method) அல்லது செய்முறையைப் பேசுவது, திறனாய்வின் வகை என்று அறியப்படுகிறது.

திறனாய்வின் வகைகள் பல. எனினும் அவற்றுள் மிக அடிப்படையானவை அல்லது முக்கியமானவை என்பவை பின்வருமாறு:

(1) பாராட்டுமுறைத் திறனாய்வு (2) முடிபுமுறைத் திறனாய்வு (3) விதிமுறைத் திறனாய்வு (4) செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு (5) விளக்கமுறைத் திறனாய்வு (6) மதிப்பீட்டு முறைத் திறனாய்வு (7) ஒப்பீட்டுத் திறனாய்வு (8) பகுப்புமுறைத் திறனாய்வு

இவற்றில் முதல் நான்கு திறனாய்வு வகைகளைப் பற்றி இப்பாடத்தில் காண்போம்.

1.2 பாராட்டுமுறைத் திறனாய்வு

பாரதியார்
"எதனைப் போற்றுகின்றோமோ அது வளரும்" என்று பாரதியார் சொல்வார். மேலும், பாராட்டுதல் என்பது ஒரு நல்ல மனிதப் பண்பு. பேசப்படும் பொருளைப் போற்றியுரைப்பது என்பது சொல்லுகின்ற வழிமுறையின் ஒரு பண்பு ஆகும். எடுத்துக் கொண்ட பொருளையும், இலக்கியத்தையும் குறை காணாமல், அந்தக் குறைகளைக் கண்டாலும் அவற்றைப் பற்றி அதிகம் பேசாமல் நிறைகளை மட்டுமே விதந்து பேசுவது பாராட்டுமுறைத் திறனாய்வு (Appreciative Criticism) ஆகும்.

(1)
பாராட்டுமுறைத் திறனாய்வு, அடிப்படையில் விளக்க முறையாக அமையக் கூடும். ஆனால் பாராட்டுதல் என்பது விளக்கமுறையின் நோக்கமல்ல.

(2)
விளக்கிச் செல்லும் போது அதனைப் போற்றுகிற விதத்தில் பண்புகளையே கூறிச் செல்வதால் அத்தகையதைப் பாராட்டுமுறைத் திறனாய்வு என்கிறோம்.

(3)
இன்று, இலக்கியச் சொற்பொழிவாளர்கள், கல்வியாளர்கள் முதலியவர்களிடம் , பாராட்டு முறை பரவலாகக் காணப்படுவதைக்காணலாம் .சிலவகையான மேடையுத்திகள் , சில விருப்பங்கள் காரணமாக இந்தப் பாராட்டுமுறை நிறையவே இடம் பெறுகிறது.

(4)

கம்பன்
இரசனை முறையில் ஈடுபாட்டுடன் பாராட்டுகின்ற ஆய்வுகள் தமிழில் நிறையவே உண்டு. உதாரணம் கம்பனைப் புகழ ஓர் குழுவினரே உண்டு. அவர்கள் பல தரப்பினர். ஜெகவீரபாண்டியன், டி.கே.சிதம்பரநாத முதலியார், ஏ.சி. பால்நாடார், கம்பனடிப்பொடி சா.கணேசன்,ப.ஜீவானந்தம், எஸ்.ராமகிருஷ்ணன், பேராசிரியர் அ.ச. ஞான சம்பந்தன், நீதிபதி மு.மு.இஸ்மாயில், தெ.ஞானசுந்தரம் இப்படிப் பலர் உள்ளனர்.
1.2.1 பாராட்டுமுறையின் எல்லை
திறனாய்வு என்பது குறிப்பிட்ட இலக்கியத்தின் விளக்கங்களையும், தனித்தன்மைகளையும் வாசகர் மனதில் பதியும்படி கொண்டு செல்ல வேண்டும். இவற்றைத் தவிரக் குறை அல்லது நிறை என்ற ஒன்றனையே கண்டு அதனையே விதந்துஉரைப்பதை நோக்கமாகக கொள்ளக்கூடாது. அது அவ்விலக்கியத்தின்பலவிதமானஅல்லதுவேறுபட்ட பண்புகளை ஒதுக்கி விடுவது ஆகும். பாரபட்சம் அல்லது பக்கச் சார்புக்குத் திறனாய்வு இடம் தரலாகாது.

மேலும், எதுவும் அளவோடு சொல்லப்பட வேண்டும். திறனாய்வில் வெற்று உரைகள் முக்கியமல்ல என்பதை அறிய வேண்டும். பாராட்டுக்களால் அலங்கரிப்பதும், குறைகளைப் பெரிதுபடுத்துவதும் இரண்டுமே உண்மையை உதாசீனப்படுத்தி விடும். ஆகையால் திறனாய்வுக்கு உண்மை என்பது முக்கியம்.

1.3 முடிபுமுறைத் திறனாய்வு
முடிபுமுறைத் திறனாய்வு (Judicial criticism) என்பது அடிப்படையான சில வரையறைகளையும் விதிகளையும் அளவுகோலாகக் கொண்டு குறிப்பிட்ட இலக்கியம் பற்றிய முடிபுகளை அல்லது தீர்வுகளைச் சொல்லுவது ஆகும்.


கெர்
உதாரணமாகத் தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்ற காப்பிய இலக்கணம் கொண்டோ, சாட்விக் (Chadwick), கெர் (W.P.Ker), பவுரா (C.M.Bowra) போன்ற மேனாட்டார் கூறும் கோட்பாடுகள் கொண்டோ ஒரு காப்பியத்தின் அமைப்பையும் பண்பையும் கணிப்பது, முடிபுமுறைத் திறனாய்வு ஆகும்.

தன்னிகரில்லாத் தலைவனைக் கொண்டதாகக் காப்பியம் அமைய வேண்டும் என்று தண்டியலங்காரம் சொல்கிறது. இவ்வாறே மேலைநாட்டு அறிஞர்கள் சிலரும் கூறுகின்றனர். ஆனால் சிலப்பதிகாரத்தில் அத்தகைய தலைவன் (கோவலன்) இல்லை என்பதற்காக அதனைக் காப்பியம் அன்று என்று கூறி விட முடியுமா?

தன்னுடைய இயல்பான போக்கில் ஏற்புடைய பல உள்கட்டமைப்புகள் பெற்றுள்ள சிலப்பதிகாரம், உலகக் காப்பியங்களின் வரிசையில் வைத்து எண்ணத் தகுந்தது அல்லவா?


இராமகாதை
மேலும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், கம்பனின் இராமகாதை ஆகிய செவ்வியல் காவியங்களை முன்னுதாரணங்களாகக் கொண்டு, பெரிய புராணம் முதலிய பிற தமிழ்க் காப்பியங்களைப் பார்ப்பதும் இதன் அடிப்படையில் அது சரியான காப்பியமே என்றோ காப்பியம் அன்று என்றோ மதிப்பிடுவதும் முடிபுமுறைத் திறனாய்வு ஆகும்.

1.3.1 முடிபுமுறைத் திறனாய்வின் பண்புகள்
ஒரே அளவுகோல் அல்லது ஒரேவிதமான வரையறை கொண்டு ஒன்றற்கு மேற்பட்ட இலக்கியங்களைப் பொருத்திப் பார்ப்பது இதன் பண்பு ஆகும். இதனடிப்படையில் ஒன்றன் சிறப்பு அல்லது தரம் உயர்ந்தது என்று முடிவு கூறுவதற்கு இந்த வகையான திறனாய்வு முயலுகிறது. இது, ஏற்கெனவே எழுதப்பட்ட விதிகளுக்கும் அவற்றின் விளக்கங்களுக்கும் ஏற்ப நீதிபதி தீர்ப்பு வழங்குவதைப் போன்றது ஆகும். எனவே இங்குக் கவனம் மிகவும் அவசியம் ஆகும். இத்திறனாய்வில் முடிபுகள் என்பது சமன்நிலையில் சீர்தூக்கும் கோல்போல் இருக்க வேண்டும்.

கல்வியியல் பட்டம் சார்ந்த ஆய்வேடுகள் பல, முடிபு முறைகளைச் சார்ந்தே அமைந்துள்ளன. தமிழில் உள்ள முன் மாதிரிகளையோ வரையறைகளையோ இவை பின்பற்றாவிட்டாலும் அல்லது அவற்றைப் பற்றி இவை அறிந்திராவிட்டாலும், மேலைநாட்டார் கொள்கைகளையும் மேற்கோள்களையும் வரையறைகளாகக் கொண்டு இந்த ஆய்வேடுகள் தமிழ் இலக்கியங்களுக்கு முடிபு சொல்ல முயலுகின்றன; அவற்றை மதிப்பிட முயலுகின்றன. ஆனால் இங்கே விதிகள் அவ்விலக்கியங்களிலிருந்து எடுக்கப்படாமல், வெளியே புறத்தே இருந்து எடுக்கப்படுகின்றன. ஆகையால் இவை எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்று எதிர்பார்க்க முடியாது.

1.3.2 முடிபுமுறைத் திறனாய்வின் எல்லை
ஆயினும் சிறந்த இலக்கியங்களைப் போற்றுவதற்கு இது ஓரளவு உதவக் கூடியதேயாகும்.சில பொதுமைகளின் பின்னணியில் குறிப்பிட்ட ஒன்றைக் காண்பதற்கு இது உதவக் கூடியதாகும். புதிய வடிவங்களை, சோதனை முயற்சிகளை இது புறக்கணித்து விடுகிறது. இன்றைய தமிழிலும் இது இருக்கிறது. பழந்தமிழிலும் இது இருந்தது.

திறனாய்வு என்பது இலக்கியங்கள் புதிய பாதைகளில் பயணிக்க வழி மறுப்பது அல்ல; வழி வகுப்பது, வழி தருவது ஆகும்.

1.4 விதிமுறைத் திறனாய்வு
முடிபுமுறைத் திறனாய்வுக்கும் விதிமுறைத் திறனாய்வுக்கும் (Prescriptive criticism) பெருத்த வேறுபாடு இல்லை. இரண்டும் நெருக்கமான உறவுடையவை. முடிபுமுறைத் திறனாய்வு என்பது சில அளவுகோல்களைக் கொண்டு, குறிப்பிட்ட இலக்கியம் பற்றிய முடிபுகளையும் மதிப்புகளையும் வழங்குவது ஆகும். விதிமுறைத் திறனாய்வு என்பது, விதிகளையும் அளவுகோல்களையும் அப்படியே ஓர் இலக்கியத்தில் பொருத்திக் காண முற்படுவது. ஆனால் இதன் மூலம் முடிபுகளையோ தீர்வுகளையோ சொல்லுவதற்கு முற்படுவதில்லை. மாறாகக் குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தைச் சில வரையறைகளைக் கொண்டு விளக்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

இது, 'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்பதற்கு மாறாக இலக்கணங் கண்டதற்கு இலக்கியங் காணல்' என்ற மனப்பான்மை கொண்டது. இப்பார்வை உரையாசிரியர்களிடம் பரவலாகக் காணப்படுவதைப் பார்க்க முடியும்.

நெடுநல்வாடை அகமா? புறமா? என்ற கேள்வியை எழுப்பியவர் நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர் ஆவார். இவர் நெடுநல்வாடை தோன்றிய காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்ட காலத்தில் தோன்றியவர். நெடுநல்வாடையில் புறச்செய்திகள் நெடுகப் பேசப்பட்டாலும், இறுதி நிலையில் சாராம்சமாக அகமே பேசப்படுகிறது.ஆயினும் தொல்காப்பியரின் விதிப்படி, அது அகம் இல்லை என்கிறார் நச்சினார்க்கினியர்.

அன்பின் ஐந்திணையில் 'தலைவனோ தலைவியோ சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர்' - இது தொல்காப்பியர் கூற்று. நெடுநல்வாடையில் தலைவனின் இயற்பெயர் சுட்டப் பெறவில்லைதான்; ஆனால், வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம் எனப் பாண்டிய மன்னர்களின் அடையாளப் பூவாகிய வேப்பம்பூவைக் கூறியமையால் இது அகம் அல்ல என நச்சினார்க்கினியர் கூறுகிறார். இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.

ஆனால், அதற்குரிய சான்று அந்த நெடுநல்வாடையில் இல்லை. மேலும் பாட்டுடைத் தலைவனின் இயற்பெயர் சுட்டப்பெறாத போது தொல்காப்பியர் வழிநின்று கூட அதனைப் புறம் என்று கூறமுடியாது. இருப்பினும் நச்சினார்க்கினியார் விதி முறைத் திறனாய்வை மனதிற் கொண்டு அவ்வாறு அதனை அகம் என்று கூறுவதை மறுத்துப் 'புறம்' என்று கூறுகிறார்.

இவ்வாறு, முன்னோர் மொழிந்த பொருளைப் பொன்னே போற்கொண்டு, அதனை விதிமுறையாகக் கொள்கின்றதையும் அதற்காக வலிந்து பொருள் கொள்வதையும் பார்க்க முடிகிறது. ஆனால், இதனை இன்றைய திறனாய்வாளர்கள் திறனாய்வு முறையாக- வகையாகக் கொள்வதில்லை. ஆயினும் விதிகளைப் பொருத்திக் காணுகிற பார்வை, திறனாய்வாளர்கள் பலரிடம் இல்லாமலில்லை. குறிப்பாகக் கல்வியாளர்களிடம் இது பெரிதும் காணப்படுகிறது என்பது உண்மை.

1.5 செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு
விதிமுறைத் திறனாய்வும் முடிபுமுறைத் திறனாய்வும் செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்விலிருந்து மாறுபட்டவை. முற்கூறிய இரண்டும் இலக்கணத்திலிருந்து இலக்கியத்திற்குப் போகிறது. படைப்புவழித் திறனாய்வு இலக்கியத்திலிருந்து இலக்கணத்திற்குச் செல்லுகிறது.

பொது விதிகளையோ வரையறைகளையோ வைத்துக் கொண்டு, அவற்றின் வழியாக இலக்கியத்தைப் பார்ப்பதிலுள்ள குறைபாடுகளை மனதிற் கொண்டு அவ்றைத் தவிர்க்கும் நோக்கில் அந்த அந்தப் படைப்பின் வழியாகவே அதனதற்குரிய விதிகளை வடித்தெடுக்க வேண்டும் என்று சொல்வது, செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு (Inductive Criticism) ஆகும்.

வரையறைகளை முடிபுமுறைகளாக வைத்து ஒன்று உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்று கூறும் தீர்வு முறையிலிருந்து (Judicial Method) இது மாறுபடுகிறது. ஒரு படைப்பு மற்றதிலிருந்து வேறுபட்டது என்று (மட்டுமே) இது சொல்கிறது. பொது முடிவுகளுக்கும் பொதுவான விதிகளுக்கும் உள்ள அளவுகோல்களைப் புறக்கணிக்கிற இத்திறனாய்வு, குறிப்பிட்ட கலைக்கு உரிய விதிமுறைகளை அவ்வக் கலைஞர்களின் வழிமுறைகளிலிருந்தே பார்க்க வேண்டும்; வேறு வகையில் பார்ப்பது, அதற்குப் புறம்பானது என்று கூறுகிறது. ஒன்றன் வரையறையை அல்லது ஒரு கலைஞனின் வழிமுறையை வேறொரு படைப்பிலோ, வேறொரு கலைஞரிடமோ பொருத்திப் பார்க்கக் கூடாது என்று இது வற்புறுத்துகிறது. தீர்வுமுறையை மட்டுமின்றி, மதிப்பீட்டு முறையையும் ஒப்பீட்டு முறையையும் இது தவிர்க்கிறது; மறுக்கிறது.

1.5.1 செலுத்துநிலைத் திறனாய்வின் சிறப்பு
படைப்பாளிகளின் ஒவ்வொரு படைப்புக்கும் (இலக்கியத்துக்கும்) தனித்தனியாக அமைப்பு விதிகள் உண்டு என்கிறது இத்திறனாய்வு. படைப்பாளிகளைப் பற்றிப் பேசும்போது அவரவரின் வழிமுறைகளை ஒட்டியே பேசவேண்டும் என்று கூறுகிறது. மேலும், அவர்களுக்கிடையே வேறுபாடுகள் இருக்கின்றன என்று சுட்டிக் காட்டுகிறது. ஆயின், அந்த வேறுபாடுகளின் முக்கியத்துவமும் காரணமும் பற்றியோ, அவர்களின் தரமும் தகுதியும் பற்றியோ இது பேச மறுக்கின்றது. ஆனால் திறனாய்வு, இவற்றில் அக்கறை காட்டாமலிருக்க முடியாது ஏனெனில் இது திறனாய்வின பணி. ஆனால் இலக்கியத்தின் வளர் நிலையையும், தனித்தன்மைகளையும் இந்தச் செலுத்துநிலைத் திறனாய்வு கவனத்தில் கொள்கிறது. மேலும் விதிமுறைகளையும் வரையறைகளையும் உருவாக்குவதற்குச் செலுத்து நிலையாகிற வழிமுறையின் பங்களிப்பும் தேவையான ஒன்றேயாகும்.

1.6 தொகுப்புரை
இலக்கியம் தன்னகத்தே பல பண்புகளையும், பல கருத்துகளையும் கொண்டிருக்கிறது. அவற்றை ஆராயவும் விளக்கவும் திறனாய்வு வகைகள் தேவைப்படுகின்றன. திறனாய்வு வகைகளில் ஒன்றாகக் கருதப்படும் பாராட்டு முறைத் திறனாய்வு இலக்கியத்தின் நிறை, குறைகளைச் சமமாக அறிந்து மதிப்பீடு செய்யாமல், நிறைகளை மட்டும் எடுத்துக் கூறி அவற்றைப் போற்றும் தன்மையைக் கொண்டது ஆகும். ஒரு திறனாய்வாளன் தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட சில விதிமுறைகளையும், கருதுகோள்களையும் அளவுகோலாகக் கொண்டு குறிப்பிட்ட இலக்கியம் பற்றிய முடிபுகளை அல்லது தீர்வுகளைச் சொல்லுவதுண்டு. இதனை முடிபுநிலைத் திறனாய்வு என்கிறோம்.

விதிமுறைத் திறனாய்வு ஒரு நிலையில் முடிபுமுறைத் திறனாய்வு போன்று இருந்தாலும், இத்திறனாய்வு இலக்கியத்தின் வரையறைகளை முன்கூட்டி இன்னவை என எடுத்துக் கொண்டு, இலக்கணம் கண்டதற்கு இலக்கியம் என்று பேசுகிறது. செலுத்துநிலைத் திறனாய்வு என்பது விதிமுறையில் நின்று இலக்கியத்தைப் பார்ப்பதில் ஏற்படும் குறைபாடுகளை மனத்திற் கொண்டு அவற்றைத் தவிர்க்கும் நோக்கில் அமைவது. ஒவ்வோர் இலக்கியத்திற்கும் தனித்தனியாக அமைப்பு விதிகள் உண்டு என்பது போன்ற நோக்கத்தில் அமைவது இத்திறனாய்வு வகை.

D06122 - திறனாய்வின் வகைகள் - II

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
திறனாய்வு வகை எத்தகைய பண்பு கொண்டது என்பதைச் சொல்கிறது.

பாராட்டுமுறைத் திறனாய்வு முதலிய நான்கு திறனாய்வு வகைகளைப் பேசுகிறது.
படைப்பு இலக்கியங்களை ஆராய்வதற்குத் திறனாய்வு முறைகள் எவ்வாறு உதவக்கூடும் என்பதைப் பேசுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
திறனாய்வின் வழிமுறைகளை அறிய முடிகிறது.

படைப்புகளில் பல்வேறு திறனாய்வு வகைகளைப் பொருத்தி ஆராய வைக்கிறது.

திறனாய்வு வகைகளின் சிறப்புகளையும் அவற்றின் எல்லைகளையும் அறிய முடிகிறது.

பழைய இலக்கியங்களை ஆராயவும் புதிய இலக்கியங்களை ஆராயவும் ஒரு தூண்டுகோலையும், முறையியலையும் பெறலாம்.

2 Tvu 2.1 விளக்க முறைத் திறனாய்வு
காலம், இடம் எனும் தளங்களையும் வாசகர்களின் அறிதிறன்கள், ஏற்புமுறைகள் முதலியவற்றையும் எதிர்கொண்டு வாழ்கிற திறனை இலக்கியம் பெற்றுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கலைஞனால் இலக்கியம் படைக்கப்படுவதேயெனினும், அது புதிது புதிதாய் உயிர்க்கிற அற்புதப் பண்பினைப் பெற்றிருக்கிறது. இத்தகைய திறம் அதன் உள்ளார்ந்த பண்புகளிலும் சூழமைவுகளிலும் பொதிந்து கிடக்கிறது. அவ்வாறு பொதிந்து கிடப்பதைப் புரிந்து கொள்கிற போதுதான் கலைப் பொருள் தொடர்ந்து நுகரப்படுகிறது; வாழ்கிறது.

இலக்கியம் நுகர்திறனும்
இலக்கியம் மட்டுமல்ல; எந்தப் பொருளும் சரியான நுகர்திறன் பெற்றிருந்தால் மட்டுமே வாழும். சரியான பயன், சரியான நுகர்திறன் பெற வேண்டுமானால், அது நுகர்வோனால் சரியாகப் புரிந்து கொள்ள அல்லது விளங்கிக் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. 'ஒரு பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளவோ, மேலும் அதனைக் கூடுதலாக அறிந்து கொள்ளவோ உதவுகிற வகையில் அந்தப் பொருளை வேறுசொற்களில் (re-phrasing) மீளவும் சொல்லுதல்' என்பதே விளக்கமுறைத் திறனாய்வின் அடிப்படை ஆகும்.

2.1.1 அறிஞர் விளக்கம்
விளக்கமுறைத் திறனாய்வு என்பதனை விளக்குகிறபோது லியோன்லெவி என்பவர் 'ஒரு பொருள் அல்லது ஓர் அனுபவம், குறிப்பிட்ட ஒரு முறையில் அல்லது மொழியமைப்பில் அமைந்திருக்குமானால், அதன்மீது ஒளி பாய்ச்சி, அதன் உண்மையையும் பல்வேறு பண்புகளையும் வேறு சொல் வடிவங்களில் அல்லது மொழியமைப்பில் வெளிப்படுத்துவதே விளக்கமுறைத் திறனாய்வு எனப்படுகிறது' என விளக்குகிறார்.

மேலும், இதைத் தெளிவுபடுத்த வேண்டுமானால் ஒரு பனுவலுக்கு (Text) விளக்கமாகவோ அல்லது அதற்கு மாற்றாகவோ சார்ந்ததாகிய இன்னொரு பனுவலை (Alternative text) தருவது விளக்கமுறைத் திறனாய்வு எனப்படுகிறது.

உதாரணம் :
செருக்குஞ் சினமும் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

இது குற்றம் களைந்தவர்களின் செல்வம் பற்றிய திருக்குறள் வாசகம். ஏழு அல்லது எட்டு நூற்றாண்டுக்குப் பின்னர் வந்த வாசகர்களுக்கு இக்குறளின் கருத்து சரிவரப் போய்ச் சேராது என்று கருதிய பரிமேலழகர், காலத்தின் அத்தகைய இடைவெளியை நிரப்பும் பொருட்டு "மதம் - செல்வக் களிப்பு சிறியோர் செயலாகலின் அளவிறந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான், இவற்றைக் கடிந்தார். செல்வம், நல்வழிப்பாடும் நிலைபேறும் உடைமையின் மதிப்புடைத் தென்பதாம்" என்று குறிப்பிடுகிறார். தமிழில் உரையாசிரியர்களின் பங்களிப்பு, விளக்கமுறைத் திறனாய்வைச் சார்ந்ததாக அமைகின்றது.

சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற
இன்றி யமையாது இயைபவை யெல்லாம்
ஒன்ற வுரைப்ப துரையெனப் படுமே

என்று தொல்காப்பியர் மரபியல் நூற்பாவில் குறிப்பிடுகிறார். இதனடிப்படையில் விளக்கமுறைத் திறனாய்வு என்பதைக் குறிப்பிட்ட இலக்கியப் பனுவலின் உட்பொருளையும், அதனோடு இணைந்த, பொருத்தமான பிற வசதிகளையும் ஏற்புடையதாகச் சொல்லுதல் என்பதாக வரையறை செய்யலாம்

.

2.1.2 விளக்க முறையின் தளங்கள்
விளக்கமுறைத் திறனாய்வு ஒன்றன் முறையில் நின்றுவிடுவதில்லை அது வளர்நிலைத் தன்மை கொண்டது.

(1) படைப்பின் பண்புகள்
(2) விளக்கம் கூற முயல்வோரின் நோக்கம்
(3) பயிற்சி
(4) மொழிவளம்
(5) விளக்கம் யாருக்காக என்னும் பார்வை

இந்த ஐந்து வகைக் காரணங்களால் அல்லது தளங்களினால் விளக்கங்கள் வளர்நிலை பெற்று அமைகின்றன.

2.2 மதிப்பீட்டு முறைத் திறனாய்வு
திறனாய்வின் பணி, இலக்கியத்தை மதிப்பீடு (Evaluation) செய்கிற பண்பினை அடியொற்றியது ஆகும். இலக்கியத்தைப் பகுத்தாய்வதும் விளக்கியுரைப்பதும் அதனுடைய சமுதாய நிலைகளையோ, உளவியல் பண்புகளையோ அளவிட்டுரைப்பது மட்டுமல்ல; அதே தளங்களிலிருந்து அவ்விலக்கியத்தை மதிப்பிட்டுரைப்பதும் ஆகும். உதாரணமாகக் குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தில் சமுதாயம் பற்றிய செய்திகள் எவ்வளவு ஆழமாகவும், உண்மையாகவும், திறம்படவும் சொல்லப் பட்டிருக்கின்றன என்ற அடிப்படையில் அவ்விலக்கியத்தை மதிப்பிடலாம். இவ்வாறு மதிப்பிட்டுரைப்பதுதான் மதிப்பீட்டு முறைத் திறனாய்வின் அடிப்படைக் கருதுகோள் ஆகும்.

திறனாய்வின் பல அணுகுமுறைகளின் போக்கிலும் நோக்கிலும், மதிப்பீட்டு முறை என்பது அடிநாதமாக விளங்குகிறது..

2.2.1 மதிப்பீட்டு முறையின் நோக்கம்
மதிப்பீட்டுத் திறனாய்வு என்பது, குறிப்பிட்ட இலக்கியத்தின் தரம், தகுதி, சிறப்பு, சீர்மை என்பவற்றைப் பேசுவதோடு, அவ்விலக்கியத்தில் அமைந்திருக்கும் கூறுகளும், பண்புகளும், உண்மைகளும் பிறவும் இலக்கிய மதிப்பு (Literary value) உடையவை என்பதையும் பேசுகிறது. இலக்கிய மதிப்பு என்பது மேலே குறிப்பிட்ட கூறுகளும் பண்புகளும், பிறவும் இலக்கியமாகியிருக்கின்ற கலைநேர்த்தி பற்றியது ஆகும்.

ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தின் நிறை குறைகளைக் கண்டு, குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்கன கொண்டு அது இத்தகையது என மதிப்பீடு செய்தல், மதிப்பீட்டுத் திறனாய்வின் நோக்கம் ஆகும்.
ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ்
மதிப்புப் பற்றிய கணக்கீடும், தகவல் பரிமாற்றம் பற்றிய கணக்கீடும் திறனாய்வுக் கோட்பாட்டின் இரண்டு தூண்கள் என்று மதிப்பீட்டு முறைத் திறனாய்வு பற்றி ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் கூறுவார்

2.2.2 இலக்கிய மதிப்பீட்டு அளவுகோல்
பல இலக்கியங்களுக்குப் பொதுவாகவும், பலராலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும், அதேபோது, குறிப்பிட்ட இலக்கியத்திற்கு மிகவும் ஏற்புடையதாகவும் சிறப்புடையதாகவும் கருதப்படுவது இலக்கிய மதிப்பீடு எனப்படும். சொல்கிற செய்தி, சொல்லப்படுகிற உத்தி, உள்ளடக்க வீச்சு, செய்ந்நேர்த்தி முதலியவற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்புக் கூறு அல்லது பண்பு அமைந்திருப்பது, இலக்கிய மதிப்பு எனப்படுகிறது. அத்தகைய மதிப்பினை இனங்கண்டறியவும், திறனறிந்து கூறவும் வழித்துணையாக இருப்பதே மதிப்பீட்டு முறையாகும். இதுவே இதன் அளவுகோல் ஆகும்.

2.3 ஒப்பீட்டுத் திறனாய்வு
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களை ஒரு சேர வைத்து, அவற்றிற்கிடையேயுள்ள ஒப்புமையையும், வேற்றுமையையும் பார்ப்பது மனித இயல்பு. அதுபோலவே, கலை இலக்கியங்களுக்கிடையே ஒன்றுபட்ட பண்புகளைப் பார்ப்பது என்பது படிப்பவரின் மன இயல்பு. ஒப்பிடுவது என்பது சில கூறுகளில் வேறுபட்டும் சிலவற்றில் ஒன்றுபட்டும் இருக்கின்ற இரண்டு பொருட்களின் மேல் நிகழ்த்துகின்ற ஒரு செயல். ஒப்புமைக்கு நேர்மாறான பொருள் சாத்தியம் இல்லை. இரண்டு பொருள்களின் ஒத்த தன்மைகள் ஒப்பீட்டு முறைக்கு வாய்ப்பாக அமையும். ஒப்பிடுவதன் நோக்கம், ஒன்றனைவிட இன்னொன்று சிறப்பானது, உயர்வானது என்று பேசுவது அல்ல. ஒவ்வொன்றன் சிறப்பையும் தனித்தனியே அறிவதற்கு ஒப்பீடு என்பது ஒருவழிமுறை அல்லது உத்தியே ஆகும்.

ஒப்பிலக்கியம் என்பதற்கு அமெரிக்கா - இந்தியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹெச்.ஹெச்.ரீமாக் (H.H.Remack) கூறிய வரையறையே பெரிதும் பின்பற்றப்படுகிறது.

'ஒப்பிலக்கியம் என்பது ஒரு நாட்டின் இலக்கியத்தை இன்னொரு நாட்டு இலக்கியத்தோடு ஒப்பிடுவது; இலக்கியங்களுக்கிடையேயான உறவுகளை ஒரு பக்கமும், சமுதாயவியல் தத்துவம் போன்ற துறைகளை இன்னொரு பக்கமுமாக ஒப்பிட்டுக் கூறுவது ; இலக்கியத்திற்கும், இசை, ஓவியம், கூத்து போன்ற கலை வடிவங்களுக்குமிடையேயான உறவுகளைக் கூறுவது' என்று ரீமாக் குறிப்பிடுகிறார்.

2.3.3 தமிழில் ஒப்பிலக்கியம் வளர்ந்த நிலை

(1) தமிழ் உரையாசிரியர்களிடம், தாம் கூறும் உரைக்கும் நூலுக்கும் இணையான பிற இலக்கிய, இலக்கண மேற்கோளை ஒப்பீட்டு முறையில் எடுத்துக்காட்டுகின்ற போக்கு இருக்கின்றது. இதன் மூலம் ஒப்பீட்டு முறை, பழங்காலந்தொட்டே இருத்தலை அறிய முடிகிறது.

(2) ஒப்பீட்டு முறை, மேலை நாட்டுக்கல்வி மற்றும் அந்த நாட்டு இலக்கியங்களின் வரவு முதலியவை காரணமாக 19ஆம் நூற்றாண்டில் மேலும் வளர்ந்தது.

(3)கிரேக்க இலக்கியமும் தமிழ் இலக்கியமும் உருவத்திலும் உள்ளடக்கத்திலும், சமுதாய நிலையிலும் பெரும் ஒற்றுமைகள் பெற்றிருக்கின்றன என்று க.கைலாசபதி விளக்கிக் கூறுகிறார்.


பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை
(4) பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, காவிய காலம் என்னும் தனது நூலில் கிரேக்கக் காவியம், காவியக் கூறுகள், பண்புகள், அமைப்பு நிறைவுகள் முதலியவை தமிழ்க் காவியங்களோடு ஒத்துள்ளன ; வேறுபட்டும் உள்ளன என்று கூறுகிறார்.

(5) வ. வே. சு. ஐயரின் 'Kamba Ramayana - A Study' எனும் நூல் கம்பனை வால்மீகியுடனும் மில்டனுடனும் ஒப்பிடுவது, ஒப்பீட்டுத் துறைக்கு மேலும் ஒரு நல்ல உதாரணம் என்று கூறலாம்.


(6)தொ.மு.சி. ரகுநாதன், எஸ்.ராமகிருஷ்ணன், க.செல்லப்பன் வை. சச்சிதானந்தன், முதலிய அறிஞர்கள் தமிழ்க் கவிஞர்களை ஷெல்லி, கீட்ஸ், பைரன், வால்ட்விட்மன் முதலிய மேலை நாட்டுக் கவிஞர்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளனர்.



(7) கல்கி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் முதலிய தமிழ்ப் புனைகதை ஆசிரியர்களை, ஸ்காட், டி.எச்.லாரன்ஸ், மாப்பசான் முதலிய மேலைநாட்டு ஆசிரியர்களோடு ஒப்பிட்டுப் பல ஆய்வேடுகள் வெளிவந்துள்ளன

2.4 பகுப்புமுறைத் திறனாய்வு
மனித அறிவுகளில் அடிப்படையானது, பகுத்தல், தொகுத்தல் ஆகிய அறிவு ஆகும். உலகத்துப் பொருள்களை ஒற்றுமை கருதியும், அவற்றிற்கிடையேயுள்ள சிறப்புப் பண்புகள் கொண்டு வேற்றுமை கருதியும், பகுத்தும், தொகுத்தும் பார்ப்பது அறிதலின் பண்பு ஆகும். இலக்கியத் திறனாய்விற்கும் இது வேண்டப்படுகின்ற பண்பாகும்.

பகுப்புமுறைத் திறனாய்வு (Analytical Criticism) என்பது குறிப்பிட்ட இலக்கியத்தின பண்புகள அல்லது கூறுகளை யாதாயினும் ஓர் அளவுகோல் அல்லது நோக்கம் கொண்டு பகுத்துக் காண்பது ஆகும். இவ்வாறு பகுத்தாய்வு செய்யும் போது, ஆய்வு செய்யப் படுகின்றவற்றின் முழுமை அல்லது தொகுதிக்கு முரணானதாகவோ, அதைச் சிதைப்பதாகவோ இருக்கக் கூடாது. உண்மையில் இதன் நோக்கம் என்னவென்றால் முழுமையின் சிறப்பினை அல்லது பண்பினை அதன் கூறுகளையும் உட்கூறுகளையும் கொண்டு ஆராய்வதாகும். ஒன்றுபட்டும், வேறுபட்டும் இருக்கிற தன்மைகளைக் கண்டுகொள்வது என்பது அவ்விலக்கியங்களின் சிறப்புக் கூறுகளால் புலப்படுகிறது. இத்தகைய பகுப்புமுறை, அடிப்படையான ஒரு வழி முறையாதலால் திறனாய்வுக்கு வேண்டப்படுகின்ற ஒரு வழிமுறையாக உள்ளது.

பகுப்புமுறைத் திறனாய்வுக்கு ஒர் எடுத்துக்காட்டு
திறனாய்வாளர்களில் சி.சு.செல்லப்பாவிடம் இத்தகைய திறனாய்வு காணப்படுகிறது. மௌனியின் மனக்கோலம் என்ற தலைப்பில் எழுத்து எனும் இதழில் வந்த அவருடைய கட்டுரைகள், மௌனியின் சிறுகதைகளிலுள்ள உத்திகளையும் உண்மை நிலைகளையும் வேறுபடுத்தி விவரிக்கின்றன. இதன் மூலமாகத் தமிழ்ச் சிறுகதைகளின் பண்புகளையும் சிறப்புகளையும் அவர் ஆராய்கிறார். இதனை 'அலசல் முறைத் திறனாய்வு' என்று அன்றைய திறனாய்வாளர்கள் அழைத்தனர். மேலும், அவருடைய தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது என்னும் நூல், வ.வே.சு.ஐயரினகுளத்தங்கரை அரசமரம் முதற்கொண்டு பல சிறுகதைகள் எப்படி ஒன்றன்பின் ஒன்றாகக் கதைகூறும் பண்புகளில் மாற்றமும் வளர்ச்சியும் பெற்றிருக்கின்றன என்று விவரிக்கின்றது

2.4.1 இன்றைய ஆராய்ச்சித்துறையும் பகுப்புமுறையும்
பகுப்புமுறைத் திறனாய்வு, கல்வியியல் சார்ந்த ஆராய்ச்சிகளில், ஆய்வேடுகளில், வசதி கருதிப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஒரு படைப்பாளியின் புனைகதை உத்திகள் என்றால் பாத்திரப் படைப்பு, நோக்குநிலை, கதைப் பின்னல், தொடக்கமும் முடிவும், வருணிப்பு, மொழி நடை என்று மேல் அளவில் பல பகுப்புகளைக் கொண்டு ஆராய்கின்றனர். இத்தகைய போக்கில் பாத்திரப் படைப்பு என்னும் தலைப்பின் கீழ், ஒருநிலைப் பாத்திரம், மாறுநிலைப் பாத்திரம், தலைமைப் பாத்திரங்கள், துணைமைப் பாத்திரங்கள், உடனிலை - எதிர்நிலைப் பாத்திரங்கள் மற்றும் ஆண், பெண், இளையோர், முதியோர் என்ற உட்பகுப்புகளையும் கொண்டு ஆய்வு செய்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட இலக்கியத்தின் மொத்தமான கட்டமைப்புத் திறனையும் பாத்திரப் படைப்புகளின் சமூக இருப்புகளையும் மெய்ப் படுத்தாமல் வெறுமனே பகுத்துச் சொல்லும் இத்தகைய போக்கு இயந்திரத்தனமாகவும், பல சமயங்களில் மிகையாகவும் அமையக் கூடும். அதன் போது சலிப்பும் சொல் விரயமும் உடையதாக ஆகி விடுகிறது. தேவையறிந்து அளவறிந்து பயன்படுத்துகிறபோது திறனாய்வுக்கு அது அணிசேர்க்கவல்லதாக அமையும்.

2.5 தொகுப்புரை
திறனாய்வு வகைகள் என்பது திறனாய்வு செய்யப்படுகிற வழிமுறைகள் அல்லது செய்முறைகள் என்பதைக் குறிப்பதாகும். இது விளக்கமுறைத் திறனாய்விலிருந்து பல வகைகளாக அமைகின்றது.

இலக்கிய மதிப்பீடு என்பது, குறிப்பிட்ட இலக்கியத்தின் தரம், தகுதி, சிறப்பு, சீர்மை என்பவற்றைப் பேசுவதோடு, அவற்றின் கூறுகளும், பண்புகளும் இலக்கிய மதிப்பு உடையவனவா என்பதையும் பேசுகிறது.

ஒரு பொருளை, இன்னொரு பொருளோடு பொருத்தி வைத்துச் சார்பு நிலையில் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது அடிப்படையான ஒரு பார்வையாகும். அம்முறையில் அது ஒப்பீட்டுத் திறனாய்வு செய்வதாக அமைகிறது. இது பின்னர், ஒப்பீட்டு இலக்கியம் என்ற தனி ஆய்வுத் துறையாக வளர்ந்துள்ளது.

இலக்கியங்களின் சிறப்புப் பண்புகள் கருதி, அவற்றைப் பகுத்தும், தொகுத்தும் பார்ப்பது பகுப்புமுறைத் திறனாய்வாகும். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு தலைப்பில் பல்வேறு உள்தலைப்புகளை ஆராயும் போது அவ்விலக்கியத்தின் சிறப்பான பண்புகள் தெரிய ஏதுவாக அமையும்.



Sent from my iPad