வெள்ளி, 28 நவம்பர், 2014

TRB PG TAMIL :மாமூலனார்:

மாமூலனார்:
இவர் அந்தணர்; இவரை யோகி என்றும் கொள்ளுதல் பொருந்தும். இது தொல். பொருள். 75-ஆம் சூத்திர உரையில் நச்சினார்க்கினியர், "யோகிகளாய் உபாயங்களால் முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன் றேயத்து அனைநிலை வகையோராவர்" என்று பார்ப்பன வாகையை விளக்குவதனால் விளங்குகிறது.

மாமரத்தடியில் இருக்கும் ஏகாம்பர நாதன் பெயரே மாமூலர் என்று வழங்கியது போலும். இவர், "பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர், சீர்மிகு பாடலி" என்று நந்த மன்னரையும் (அகநா. 255), மோரியரையும் (அகநா. 251, 281) பாராட்டி இருப்பதனால் அவர்கள் காலத்தவராகக் கருதப் பெறுகிறார். அவர்கள் காலம் கி.மு. 260 ஆண்டுகளுக்கு முன் என்பர்.
பாலைத் திணையையே இவர் மிகுதியாகச் சிறப்பித்துப் பாடியுள்ளார். அங்கங்கே இவர் உபகாரிகளாகிய புல்லியையும் அவனது வேங்கட மலையையும் (அகநா. 61, 265, 295, 311, 359, 393) நெடு வேளாவியையும் (அகநா. 1, 61), நன்னனையும் அவன் ஏழிற் குன்றத்தையும் (அகநா. 15, 349), நன்னன் வேண்மான் என்பவனுடைய வியலூரையும் (அகநா. 97), மற்றும் வடுகத் தலைவராகிய கட்டி, எருமை என்பவர்களையும் அஞ்சி கண்ணனெழினி, பாணன் என்ற வட நாட்டுத் தலைவன் முதலியவர்களையும் தம் பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் பாடல்களில் இருந்து தெரியும் சரித்திரச் செய்திகள் பல: கரிகால் வளவனொடு
வெண்ணிப் பறந்தலையிற்பொருது தோற்றுப் புறப்புண் நாணி வடக்கிருந்த சேரலாதனொடு சில சான்றோரும் வடக்கிருந்து மாண்டனர் என்பதும் (அகநா. 55) சேரலாதன் கடலில் நாவாயைச் செலுத்தி ஓர் அரசனுடைய கடம்பை அறுத்து அதனைக் கொண்டு செய்வித்த முரசினொடு இமயங்காறும் சென்று அம் மலையின் மீது விற்பொறித்து வந்து பகைவர் தந்த திறை அனைத்தையும் தன் வாயில் முன் குவித்துப் பிறர் முகந்து போகச் செய்தனன் (அகநா.127) என்பதும், மத்தி என்பவன் எழினியின் மேல் படையெடுத்துச் சென்று அவனை வென்று அவன் தன் பற்களைக் கொணர்ந்து தன் வாயில் கதவில் அழுத்தினான் (அகநா. 211) என்பதும், உதியஞ்சேரல் (பாரதப் படைவீரருக்குப்) பெருஞ்சோற்றை வழங்கியபோது கூளிச்சுற்றம் எஞ்சிய சோற்றை உண்ண அங்கு வந்து குழுமி இருந்தன (அகநா. 233) என்பதும், எவ்வி என்ற உபகாரி செருவில் இறந்துபட வருத்தம் பொறாத பாணர் அவ்விடத்தே தம் யாழை முறித்துப் போட்டு அன்று காறும் அவ்வியாழ் தமக்கு வயிற்றுப் பிழைப்புக்குப் காரணமாக இருந்தமையின் அதனைத் தொழுது அவலித்தார்கள் (அகநா. 115) என்பதும் இவர் காட்டும் கதைகளில் ஒரு சிலவாம்.

இவர் கவிகளில் இங்ஙனம் வரலாறுகளே பெரிதும் காணப்படுகின்றன. இவர் இயற்றியனவாக இப்பொழுது கிடைத்துள்ள பாடல்கள்: 30 (நற். 2; குறுந். 1; அகம். 26; திருவள்ளுவ மாலை. 1). இவர் இலக்கண நூல் ஒன்று செய்துள்ளதாக இலக்கண விளக்கம் முதலியவற்றால் தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக