வெள்ளி, 28 நவம்பர், 2014

TRB PG TAMIL: மதுரை மருதனிளநாகனார்

மதுரை மருதனிளநாகனார் : மருதக் கலியைப் பாடிய மருதனிள நாகனார் வேறு; இவர் வேறு. ஒரு பாண்டியனுடைய வெற்றியை இவர் குறிப்பிடுகிறார். நற். 39; அகநா. 312. இவரால் கூறப்படும் உபகாரிகள் பாட்டன், கோசர், வாணன், மாவண் கழுவுள் (அகநா. 90, 220, 269, 365) என்பவர் ஆவர். பரங்குன்றம், செல்லூர், ஊணூர், முனைப் பாக்கம், காமூர் (அகநா. 59, 90, 220, 245, 365) முதலியவை இவரால் குறிக்கப்படுகின்றன. "ஏதிலாளன் கவலை கவற்ற ஒரு முலையறுத்த" ஒரு பெண்ணின் செய்தி (நற். 216) இவரால் கூறப்படுகிறது. தொழுநை ஆற்றங்கரையில் மாயவன் கோவியர் புடவைகளை ஒளித்து வைத்தமையையும் (அகநா. 59) பரசுராமர் யாகம் செய்தமையையும் (அகநா. 220) இவர் கூறியுள்ளார். உண்மைக்குச் சூரியனை உவமங்கூறி, "முந்நீர் மீமிசைப் பலர்தொழத் தோன்றி, ஏமுற விளங்கிய சுடரினும், வாய்மை சான்ற நின் சொல்" (நற். 283) என்கிறார். "அந்துவன் பாடிய சந்து கெழு நெடுவரை" என்று நல்லந்துவனார் என்ற புலவர் பரிபாடற் செய்யுள் இயற்றியதைச் சிறப்பித்துள்ளார்; அகநா. 59. பரத்தைமையை விரும்பிய ஒரு தலைமகனைப் பல மலர்களை நாடிச் செல்லும் வண்டிற்கு உவமையாக்கி, "நெடுநீர்ப் பொய்கை நடுநா ளெய்தித,் தண்கமழ் புது மலரூதும், வண்டென மொழிப மகனென் னாரே" (நற். 290) என்கிறார். கரந்தை வீரர்களது "பெயரும் பீடும் எழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்" (அகநா. 131)இவரால் சிறப்பிக்கப்பட்டு உள்ளது. நடுகல்லைப் பற்றிய வேறு செய்திகள் இவர் இயற்றிய அகநா. 297, 343, 365, 387-ஆம் செய்யுட்களிலும் காணப்படுகின்றன. ஒரு மனைவிக்குச் சிறப்பு அவளது சிறந்த கற்பினாலும் நற் புதல்வரைப் பெறுதலினாலுமே என்பது, "கடவுட் கற்பொடு குடிவிளக்காகிய, புதல்வர்ப் பயந்த புகழ்மிகு சிறப்பின், நன்னராட்டி" (அகநா. 184) என்று இவர் கூறி இருப்பதனால் தெரிகிறது. கொங்கு நாட்டில் மக்கள் இடையில் மணிகளைக் கட்டிக் கொண்டு தெருக்களில் ஆடும் உள்ளிவிழா என்பதொன்று (அகநா. 368) இவரால் குறிக்கப்படுகிறது. இவருடைய பாடல்கள் பொருள் நயம் வாய்ந்து விளங்குகின்றன. இறையனா ரகப்பொருளுக்கு இவரும் உரை செய்தனர் என்பது அந்நூல் வரலாற்றால் தெரிகிறது. நிலங்களைப் பற்றிய கற்பனைகளும், உள்ளுறைகளும், வெளிப்படை உவமங்களும், படிப்போர் மனத்தைக்கவர்வன. நிலங்களின் இயல்புகளை நன்கு அறிந்து பாடியவர். இவர் பாடிய வேறு செய்யுட்கள்: 33 (நற். 10; அகநா. 21; புறநா. 2)

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக