வெள்ளி, 28 நவம்பர், 2014

TRB PG TAMIL: மதுரைக் காஞ்சிப் புலவர், மாங்குடி கிழார், மாங்குடி மருதனார்


     மதுரைக் காஞ்சிப் புலவர், மாங்குடி கிழார், மாங்குடி மருதனார் (164, 173, 302): இந்த மூன்று பெயர்களும் ஒருவரையே குறிப்பன போலும். தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது மதுரைக் காஞ்சி என்னும் நூலைப் பாடிய காரணமாக மாங்குடி மருதனார் என்பார்இப்பெயர் பெற்றார். பெயர் கூறாது இங்ஙனம் கூறுவது சிறப்புப் பற்றி என்க. அகநா. 89-ஆம் செய்யுள் அடியிலும் இவர் பெயர் இங்ஙனமே காணப்படுகின்றது. மாங்குடி கிழார் என்னும் நல்லிசைப் புலவர் ஒருவர் இயற்றிய செய்யுட்கள் கருத்திலும் சொல்லமைதியிலும் இவருடையனவற்றை ஒத்திருப்பதால் அவரும் இவரும் ஒருவர் எனவே கருதப்படுகின்றார். கிழார் என்னும் மரபுப் பெயரால் இவர் வேளாண் மரபினர் என்பது பெறப்படும். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு இவர்பால் இருந்த நன்மதிப்பு, "ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி, மாங்குடி மருதன் தலைவனாக, உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற், புலவர் பாடாது வரைகவென் னிலவரை" (புறநா. 72) என்று அவன் கூறிய வஞ்சினத்தால் விளங்கும். வாட்டாற்று எழினியாதன் என்பானை இவர் பாடியுள்ளார். இவர் பாடியனவாகவுள்ள வேறு செய்யுட்கள் 11: மதுரைக். 1; நற். 2; அகநா. 1; புறநா. 6; திருவள்ளுவ. 1. இவற்றுள் நற்றிணை, 123-ஆம் செய்யுள் காஞ்சிப்புலவன் என்னும் பெயரோடும், குறுந்தொகை, 173-ஆம் செய்யுளும், அகநா. 89-ஆம் செய்யுள் மதுரைக் காஞ்சிப் புலவன் என்னும் பெயரோடும், குறுந்தொகை, 302-ஆம் செய்யுளும், புறநா. 24, 26, 313, 335, 372, 396-ஆம் செய்யுட்களும் மாங்குடி கிழார் என்ற பெயரோடும் வழங்குகின்றன. இவர் பாடிய அகத்திணைச் செய்யுட்களில் இல்லறம் நடத்தும் மகள் ஒருத்தி விருந்தினரை உண்பிக்கும் பொருட்டு உணவு சமைக்கும் இயல்பும், மடன் மாவின் இலக்கணங்களும், வேடர்கள் தாம் கொள்ளையிட்டுப் பெற்ற பொருள்களைப் பாறையின்மேல் வைத்துப் பங்கிட்டுக் கொள்ளும் செயலும் நயம்படக் கூறப் பெற்றுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக