திங்கள், 13 ஏப்ரல், 2015

போலியாக கல்விச் சான்றிதழ்களை தயாரித்து விற்ற மூன்று பேர் கைது

பிரபலமான பல்கலைக்கழகங்களின் பெயரில், போலியாக கல்விச் சான்றிதழ்களை தயாரித்து விற்ற, பா.ம.க., மகளிர் அணி தலைவி உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கிளைகள் துவக்கி, போலி சான்றிதழ்கள் விற்று, கோடிக்கணக்கில், அவர்கள் பணத்தைச் சுருட்டியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் தட்சிணாமூர்த்தி, கடந்த மாதம், 25ம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 'அருண்குமார், அழகிரி மற்றும் கார்த்திகேயன் என்ற மூவர், பார் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பத்துடன் அவர்கள் இணைத்துள்ள, எல்.எல்.பி., (சட்ட படிப்பு) சான்றிதழ்கள் போலியானவை. எனவே, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார். இதையடுத்து, மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த, உயர் நீதிமன்ற காவல் நிலைய போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில், பா.ம.க., மாநில மகளிர் அணி துணைத் தலைவர் சண்முகசுந்தரி, 32, அவருக்கு உடந்தையாக இருந்த கணேஷ் பிரபு, 28, போலி சான்றிதழ்
பெற்ற மாணவர் அருண்குமார், 36, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். சண்முகசுந்தரியும் மற்றும் சிலரும் சேர்ந்து, தமிழகம் முழுவதும் கிளைகள் துவக்கி, நுாற்றுக்கணக்கான
இளைஞர்களுக்கு போலி சான்றிதழ்களை வழங்கி, கோடிக்கணக்கில் பணம் சுருட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக, போலீஸ் தரப்பில் மேலும் கூறப்படுவதாவது: பார் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பம்சமர்ப்பித்த மூன்று பேரில் ஒருவர் அருண்குமார். பெரம்பூரைச் சேர்ந்த அவர், விண்ணப்பத்துடன் இணைத்திருந்த சான்றிதழ் போலியானது என்பதால், முதலில் அவரிடம் விசாரணை நடத்தினோம்.டிப்ளமோ படித்த அருண்குமார், வழக்கறிஞராக ஆசைப்பட்டு, கோவை, காந்திபுரத்தில் இயங்கிய, 'ஹய் மார்க் எஜுகேஷன் இன்ஸ்டிடியூஷன்' என்ற நிறுவனத்தின் இயக்குனரான சண்முகசுந்தரியை அணுகியுள்ளார்.
இவர், பா.ம.க., மாநில மகளிர் அணி துணைத் தலைவராக உள்ளார்.'படிக்க வேண்டாம்; வகுப்புக்கு போக வேண்டாம்; 3.5 லட்சம் ரூபாய் கொடு; சான்றிதழ் உன்னைத் தேடி வரும்' என, அவர் ஆசை காட்டியுள்ளார். அதை நம்பி, சண்முக சுந்தரியிடம் பணத்தைக் கொடுத்த அருண்குமாருக்கு, ஒரு மாதத்தில், உ.பி., மாநிலம், பந்தல்கண்ட் பல்கலையில், ஐந்து ஆண்டுகள் படித்ததாக எல்.எல்.பி., சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது.போலி சான்றிதழ் வழங்க, சண்முகசுந்தரிக்கு உடந்தையாக, சேலம், குரங்குசாவடியைச் சேர்ந்த கணேஷ்பிரபு என்பவர் செயல்பட்டு உள்ளார்.இரண்டு பேரும் சேர்ந்து, போலி சான்றிதழ்கள் கேட்டு வந்தவர்களிடம், பல்கலையின் பெயரைப் பொறுத்து, இரண்டு லட்சம் ரூபாய் முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர்.பலருக்கு இவர்கள், எஸ்.எஸ்.எல்.சி., முதல், எல்.எல்.பி., - பி.இ., - பி.காம்., - பி.எஸ்சி., என, பல பட்டப் படிப்புகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாற்றுச் சான்றிதழ்களையும் போலியாக தயாரித்து வழங்கி உள்ளனர்.அதற்காக,
உ.பி., பந்தல்கண்ட் பல்கலை, கான்பூர்பல்கலை, லக்னோ மாநில டெக்னிக்கல் எஜுகேஷன் போர்டு, டில்லி போர்டு ஆப் சீனியர் செகண்டரி எஜுகேஷன் உட்பட, பல மாநில பல்கலைகளின் பெயரை பயன்படுத்தி உள்ளனர்.
இந்தக் கும்பல்,தமிழகம் முழுவதும், பல இடங்களில் கிளைகள் அமைத்து, இதேபோல, ஏராளமான இளைஞர்களுக்கு போலி சான்றிதழ்கள் வழங்கியிருக்கலாம் என, தெரிகிறது.அதனால், எந்தெந்த இடங்களில், இவர்கள் கிளைகள் நடத்தினர்; கும்பலில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது
குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். அத்துடன், பார் கவுன்சிலில், இவர்கள் தந்தது போன்ற, சந்தேகத்துக்கு இடமான கல்வி நிறுவனங்கள் பெயரில் சான்றிதழ்கள் இருந்தால், மறு பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு, போலீசார் கூறினர்.போலி சான்றிதழ் கொடுத்து, பார் கவுன்சிலில் விண்ணப்பித்து தலைமறைவாகியுள்ள அழகிரி, கார்த்திகேயன் உட்பட, சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக