புதன், 29 ஏப்ரல், 2015

அஜிதனும் அரசுப் பள்ளியும்

அஜிதனுக்கு எல்கேஜி, யுகேஜி முடிந்ததும் பத்மநாபபுரம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்தோம். பள்ளியில் சொன்னார்கள், "பையன் சராசரிக்கும் மிகக் கீழே, அவனுக்கு எழுதவே வரவில்லை" என. சோதித்துப் பார்த்தால் அது உண்மை. அஜிதனுக்கு சிறு வயதிலேயே இடது கைப்பழக்கம். அதைப் பொது வாகக் கவனித்திருந்தோம் என்றாலும், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மழலையர் பள்ளியில் அவனை முரட்டுத்தனமாக வலது கைக்குப் பழக்கியிருக்கிறார்கள். அவன் அதற்குச் சரிவராதபோது அவனைத் தொடர்ந்து அடித்திருக்கிறார்கள். சின்ன வயதில் மழலையர் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அவன் தொடர்ந்து அடம்பிடிப்பான். அது சிறுவயதில் என் வழக்கமும்கூட.

நான் ஐந்தாம் வகுப்பு வரை அடம்பிடித்தவன். "நீ இப்படி ராப்பகலா அவன்கிட்டே கொஞ்சிக் குலவினா அவன் எப்படி ஸ்கூலுக்குப் போவான்..?" என்று என் மனைவி கேட்பாள். அதற்காகப் பிள்ளையைக் கொஞ்சாமல் விட முடியுமா? ஆக, அஜிதன் மனதில் பள்ளிக் கல்வி பற்றி மிக ஆழமான ஒரு கசப்பை, எதிர்ப்புணர்வை அந்த மழலையர் பள்ளி உருவாக்கியிருந்தது.

நான் அவனை மீண்டும் இடது கைக்கு மாற்ற முயன்றேன். அது இன்னும் சிக்கலை உருவாக்குகிறது என்று தோன்றவே விட்டுவிட்டேன். வலது கைக்குப் பழகிவிட்டிருந்தான். ஆனால், எழுத்துகள் மிகமிகச் சிக்கலாக இருக்கும். சுந்தர ராமசாமியிடம் ஒருமுறை இதைப் பற்றிச் சொன்னேன். "நீங்க டீச் பண்ணாதீங்கோ… நீங்க அவன் எதிர்காலத்தைப் பத்தி கவலைப்பட்டு, அவன் மேல ஏறி உட்கார டிரை பண்ணுவீங்க… வேணுமின்னா, ட்யூஷன் வைங்க… அப்டியே விட்டுருங்க… செடிகள்லாம் பாறையையே மீறி வளந்திருது. குழந்தைகளுக்கு எல்லாத்தையும் தாண்டி வளரக்கூடிய உயிர்ச்சக்தி இருக்கு…" என்றார்.

அப்போது ஆரம்பித்த டியூஷன். ஆனால், டியூஷன் ஆசிரியர்கள் என்னைத் தெருவில் பார்த்தால் புலம்புவார்கள். "இ-ங்கிற எழுத்தை மட்டும் ஒரு ரெண்டாம் கிளாஸ் பையனுக்கு ஒரு வாரமா சொல்லித் தாறேன் சார்…" என்பார்கள். அவன் எப்படியோ ஒன்றை மட்டும் கற்றுக் கொண்டான். அது, மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளைப் போன்ற பாவனை. இதை எங்கோ அவன் கவனித்திருக்க வேண்டும். ஆசிரியைகள் எது சொன்னாலும் வாயை ஒருமாதிரி காட்டுவான். மண்டையை உருட்டுவான். அவர்கள் மெல்லமெல்ல அவனை அடிப்பதை நிறுத்தவே அதைத் தொடர ஆரம்பித்தான். ஆனால், இது வெளியேதான். வீட்டில் அவன் அசாதாரணமான சுட்டி. அவனுடைய நகைச்சுவை உணர்வையும் சாகசத்தன்மையையும் நான் ஒவ்வொரு கணமும் வியந்துகொண்டிருந்தேன்.

இரண்டாம் வகுப்பு ஆசிரியை என்னிடம் சொன்னார், "சார், பையனுக்கு எதாவது டிரீட்மென்ட் எடுங்க சார்… பொறவு சொல்லலேன்னு சொல்லப்படாது."

அடிவயிற்றைக் கவ்விய அச்சத்துடன் "என்ன மேடம்?" என்றேன்.

"அவனுக்கு பிரெய்ன் குரோத்ல என்னமோ பிரச்சினை இருக்கு சார்…."

நான் கடும் சினத்துடன், "சும்மா எதாவது சொல்லி அவன் வாழ்க்கையக் கெடுத்திராதீங்க… அவனுக்கு ஒண்ணு மில்லை. கைமாறி எழுதவெச்சதுனால கொஞ்சம் எழுத்து மோசமா இருக்கும்… அதுக்காக?" என்றேன். எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது.

"நாங்க சொல்லியாச்சு... இனி எங்க மேலே பழி சொல்லக் கூடாது."

" ஏய்… இனி இந்தப் பேச்சை யாராவது எடுத்தீங்கன்னா வெட்டிப் போட்ருவேன்…" என்று தெருவில் நின்று கூவினேன். பையனை அணைத்தபடி கிட்டத்தட்ட ஓடினேன்.

என் மனைவியிடம் சொன்னபோது அவள் கதறிவிட்டாள். ஒன்றும் தெரியாமல் அஜிதனும் அழுதான். அவனையே பார்த்தேன். உண்மையிலேயே மூளைத்திறனில் ஏதாவது சிக்கலா? வீடு முழுக்கப் புத்தகங்கள். இரவுபகலாகப் புத்தகம் பார்க்கும் புத்தகப் பிரியன் அவன். அந்த வயதிலேயே நான் அவனுக்குப் பல நூறு கதைகளைச் சொல்லியிருந்தேன். கணிசமான கதைகளை அவனே மீண்டும் சொல்வான். மந்த புத்தி என்று சொல்லும்படி என்ன இருக்கிறது? ஒருவேளை வளர வளரத்தான் தெரியுமோ? ஒன்றும் புரியவில்லை.

சில நாட்கள் கழித்துத்தான் அவன் பள்ளியில் அப்படி நடிப்பதைக் கண்டுபிடித்தேன். ஆனால், அது அவனுக்கே தெரியாது. அவனுக்கு எல்லா மிஸ்ஸும் 'கெட்ட மிஸ்'தான். ஆசிரியர்கள் அவனை மனமார வெறுத்தார்கள். எல்லாப் பாடங்களிலும் அவனுக்குச் சிவப்பு மைதான். எப்போதோ ஒருமுறை எழுபது மதிப்பெண் கணிதத்துக்கு வாங்கியது தவிர்த்தால், அவன் எப்போதுமே தேர்வுகளில் வென்றதில்லை.

ஆனால், மூன்றாம் வகுப்பு முதல் அவன் பெரும் வாசகன். அவன் 'சிவகாமியின் சபத'த்தை வாசிக்கும்போது ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். ஆசிரியையோ அவனுக்கு நூற்றுக்கு பூஜ்யம் மதிப்பெண் அளித்தார். சோவியத் ருஷ்ய வெளியீடுகளான அறிவியல் நூல்களை இரவுபகலாகப் படிப்பவனுக்கு அறிவியலில் ஒரே பாடத்தில் ஒரே வினாவைக்கூட எழுதத் தெரியவில்லை. முனைவர் அ.க.பெருமாளின் அத்தனை வரலாற்று நூல்களையும் ஆறாம் வகுப்புக்குள் அவன் வாசித்திருந்தான். வரலாற்றில் ஒருபோதும் இரட்டை இலக்க மதிப்பெண் வென்றதில்லை.

முதல் பிரச்சினை எழுத்துதான். பூக்கோ சொல்லியிருக்கிறார் என்று நினைவு, நம் பண்பாட்டில் முதலில் குழந்தையின் விரல்களுக்கு ஆக்ரோபேடிக்ஸ் சொல்லிக் கொடுக்கிறோம் என. அதைக் கற்காமல் உலகமே அவனுக்கு இல்லை. எழுத முடியாமையில் இருந்து உருவான கசப்பு காரணமாகப் பள்ளி மேலேயே கடும் துவேஷம்.

அதன் பின் நகர்கோவிலில் புகழ்பெற்ற கிறிஸ்துவப் பள்ளியில் அவனைச் சேர்த்தோம். அவன் வாழ்க்கையை நரகமாக்கியது அந்தப் பள்ளி. கூடவே, என் வாழ்க்கையையும். அனேகமாகத் தினமும் எனக்கான கட்டளைகள். அதன்படி பள்ளிக்குச் சென்றால், மணிக் கணக்காக யார் யாருக்காகவோ காத்திருக்க வேண்டும். அப்புறம், கொலைக் குற்றவாளியை நடத்துவதுபோல நடத்துவார்கள். இதுநாள் வரையிலான வாழ்க்கையில் நான் மிக அதிகமாக எங்காவது அவமானமும் சிறுமையும் பட்டிருக்கிறேன் என்றால், அது அந்தப் பள்ளியில்தான்.

அஜிதனை, அவன் ஒரு உதவாக்கரை என்றும் முட்டாள் என்றும் முழுமையாக நம்பச் செய்தது அந்தப் பள்ளி. அந்தப் பள்ளி அளித்த அழுத்தம் காரணமாக நானும் அக்காலத்தில் அவனிடம் சற்றே கடுமையாக நடந்துகொண்டிருக்கிறேன். அடித்திருக்கிறேன். புத்தகங்களைக் கிழித்து எறிந்திருக்கிறேன். அதன் பின் அவனை அணைத்துக் கண்ணீருடன் சமாதானம் செய்வேன். இரவில் தூங்கும் அவனைப் பார்த்தபடி நிற்பேன்.

அவன் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் என் கழுத்துவலிக்காக காயத்திருமேனி எண்ணெயைப் போட்டு நீவிவிட அவனிடம் சொன்னேன். நான் குப்புறக் கிடக்க அவன் என் மீது அமர்ந்திருந்தான். மனைவி அவ்வழியாகச் சென்றாள். என்னிடம் "ஏன், சொல்லியிருந்தா நான் போட்டுவிட மாட்டேனா?" என்றாள்.

"இதுல போட்டிருக்கு… உலகத்திலேயே நமக்கு யாரை ரொம்பப் பிடிக்குமோ அவங்கதான் போட்டுவிடணும்னு…" என்றேன்.

சட்டென்று முதுகில் கண்ணீர் சூடாக விழுவதை அறிந்தேன். எழுந்து பார்த்தால் அழுதுகொண்டிருந்தான்.

"என்னடா?" என்றேன்.

குறுகி அமர்ந்து அழுதவன், "உனக்கு நெஜமாவே என்னைய ரொம்பப் பிடிக்குமா?" என்றான். "என்னடா… இது முட்டாள்தனமா கேட்டுட்டு… அப்பாவுக்கு உலகத்துலயே உன்னைத்தாண்டா ரொம்பப் பிடிக்கும்" என்றேன். அப்படியே சீறல்போன்று ஒலி எழுப்பி அழுதான். "நான் நெனைச்சேன், உனக்கு என்னைப் பிடிக்கல்லேன்னு… நீ பெரிய ஆளு… எனக்கு ஒண்ணுமே தெரியல. அதான் நீயும் அம்மாவும் என்னை அடிக்கிறீங்க. நான் இனிமே ஸ்கூலுக்குப் போகல. என்னைய ஓட்டலிலே சேத்துவிடு. நான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு ரூபா கொண்டுவந்து அம்மாட்ட குடுப்பேன்."

அந்த நிமிடத்தில் என் நெஞ்சு பொங்கியதை இப்போதும் கை நடுங்காமல் எண்ண இயலவில்லை. எப்போதோ அந்த ஓட்டல் பேச்சு மனைவி வாயில் வந்திருக்கிறது - படிக்காவிட்டால் ஓட்டல் வேலைக்குத்தான் போக வேண்டும் என்று. அப்படியே அவனை அணைத்துக்கொண்டேன். "நீ மக்குனு யாருடா சொன்னா?" என்றேன்.

"எங்க மிஸ் எல்லாருமே சொல்றாங்க. அம்மாவும் சொன்னாங்க. நீகூடத்தான் சொன்னே..." என்றவனை அணைத்துக்கொண்டு, "நீ மக்குன்னா உலகத்துல யாருமே புத்திசாலி இல்லடா" என்றேன்.

அன்று அவனை வெளியே கூட்டிப்போய்ப் பேசினேன். நான் ஒரு மாணவனாக எத்தனை கொடுமைப்படுத்தப்பட்டேன் என்று சொன்னேன். என்னைப் பெரும்பாலான ஆசிரியர்கள் வெறுத்தார்கள். அடித்தார்கள். எனக்குக் கணக்கு கொஞ்சம் கூட வரவில்லை. என் அப்பா என் விருப்பத்தை மீறி என்னை வணிகவியல் பாடத்தில் சேர்த்தார். நான் அதில் ஒரு முறைகூடத் தேர்ச்சி பெறவில்லை, படிப்பை முடிக்கவும் இல்லை.

"எங்க அப்பாட்ட பணம் இல்லை. அதனால பயப்பட்டார். நான் அப்படி இல்லை. நீ இனிமே உனக்குப் பிடிச்சதை மட்டும் படி. இன்னும் மூணு மாசம். இந்தப் பள்ளிக்கூடத்திலேருந்து உன்னைக் கூட்டிட்டுப்போய் கவர்மென்ட் ஸ்கூலிலே சேர்க்கிறேன். இனிமே உன்னை யாருமே படிப்பு விஷயமா திட்ட மாட்டாங்க… போருமா?"

மறு வருடம் அரசுப் பள்ளியில் சேர்த்தபோது நண்பர்கள் பலரும் எதிர்த்தார்கள். ஆனால், அப்பள்ளி அவனுக்குக் காட்டிய உலகமே வேறு. வீட்டில் சாப்பாடு இல்லாமல், பையன்கள் மதியம் சாப்பிடாமல் பசித்திருப்பார்கள் என்ற தகவல் அவன் உலகையே பல நாட்கள், பல மாதங்கள் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. தனிமையில் அதை எண்ணி அவன் கண்ணீர் விட்டிருக்கிறான். அவனது சக மாணவர்கள் சனி, ஞாயிறில் கூலிவேலைக்குச் சென்று வருவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவே அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. பெரும்பாலான நாட்களில் அவன் கொண்டுபோகும் சாப்பாட்டை பையன்கள் சாப்பிட, அவன் சத்துணவாக அளிக்கப்படும் உணவை உண்பான். மீன், இறைச்சி கொண்டுபோகும் நாட்களில் பெரிய டிபன் கேரியர் நிறைய கொண்டுசென்றாக வேண்டும். எங்கே முத்தாரம்மன் கோயிலில் கஞ்சி ஊற்றினாலும் பையன் களுடன் சேர்ந்து போய்ச் சாப்பிட்டு விடுவான். புதிய பள்ளி அவனுக்கு நண்பர்களை அளித்தது. நண்பர்கள் அவனுக்கு தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தார்கள். பள்ளிக்கு மகிழ்ச்சியாகச் செல்லும் அஜிதனை முதல்முறையாகக் காண ஆரம்பித்தோம். பழைய பள்ளியில் விளையாட்டுகூட விளையாட்டு ஆசிரியரால் அளிக்கப்படும் ஒரு பயிற்சி. ஒருவரோடு ஒருவர் பேசுவதும் சிரிப்பதும் கடுமையான குற்றம். அதைவிட மோசமான விஷயம், நட்பு என்றால் தவறு என்றே கற்பிக்கப்பட்ட குழந்தைகள் அங்கே படித்தார்கள். அந்தஸ்து, சாதி, மதம் நோக்கி கணக்கிட்டே அங்கே நட்பு இருந்தது.

இந்த அரசுப் பள்ளியில் எல்லாமே கட்டற்றுதான். சட்டை கிழியாமல் அஜிதன் பள்ளி விட்டு வரும் நாட்கள் குறைவு. சண்டைகள் சச்சரவுகள். அதைவிடத் தீவிரமான நட்புகள். பரீட்சைக்கு முந்தைய நாள் இரவில் கூப்பிட்டுப் பொங்கும் பேரார்வத்துடன் சிலபஸ் என்ன என்று கேட்கும் சக மாணவன் அஜய்குமார்தான் அஜிதனின் உயிர் நண்பன். ஒருவனின் பையிலிருந்து பணத்தைப் பிடுங்கி இன்னொருவன் சாப்பிடலாம். "எங்க வீட்ல அம்மை தேங்காத் தொவையலையே போட்டுக் கழுத்தறுக்கிறாடா. பணமில்ல பாத்துக்கோ…உங்கம்மைட்ட நல்ல கோழியா குடுத்தனுப்பச் சொல்லு'' என்று எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் சொல்லியனுப்பலாம். இந்த உலகமே வேறு.

அவனுடன் எப்போதும் பேசிக்கொண்டே இருந்தேன். அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவனிடம் நான் எதை வேண்டுமானாலும் பேசலாம். "தோளுக்கு மேலே வளர்ந்தா தோழன்னு சொல்றாங்களே அப்பா" என்பான். "ஆமாடா. அது ரைட்டுதான்.." என்றால், "அப்றம் சொல்லு மச்சி…" என்பான். அதுதான் அவன் பாணி.

ஒரு கட்டத்தில் அஜிதனுக்குப் புனைகதைகளில் ஆர்வம் போய் இயற்கையியலில் ஆர்வம் பிறந்தது. அதற்கு முதற்காரணம், சு.தியடோர் பாஸ்கரன். இரண்டாம் காரணம், அ.முத்துலிங்கம். அது தீயாகப் பற்றிக்கொள்ள அதிலேயே நாட்கள் நகர்ந்தன. பறவைகளைப் பார்ப்பது 'லைஃப் லிஸ்ட்' தயாரிப்பது, அதைப் பற்றிய நூல்களைச் சேகரிப்பது என ஒரு உக்கிரமான பொழுதுபோக்கு பற்றிக்கொண்டது. 'நேஷனல் ஜியாக்ரஃபிக்' சேனலில் ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு பெயர்கள் ஓடிக்கொண்டிருந்தன.

"எவ்ளவு பேரு…" என்றேன். "அந்த லிஸ்ட்டுல ஒரு நாள் ஜெ.அஜிதன் பேரும் இருக்கும்" என்றான். அவனிடம் ஒரு கனவு உருவாகிவிட்டிருப்பதை நான் கண்டேன். வெற்றியும் தோல்வியும் காலத்தின் அளவிலா ஆட்டத்தில் எங்கோ, எப்படியோ தீர்மானமாகிறது. ஆனால், இதேவயதில் என்னை அலைக்கழித்தது இதேபோன்ற ஒரு பெருங்கனவுதான். உக்கிரமான மின்சாரம் ஓடும் கம்பிபோல என்னை அது தகிக்க வைத்தது அன்று. அந்த தகிப்பைக் கண்டேன். இளமைக்கு அழகு அத்தகைய கனவுதான்.

அவனுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி இடையில் படி என்று சொல்வதும் இல்லை. அவன் மதிப்பெண்களைக் கவனிப்பதில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முடிந்தன. 460/500. 92%. கணிதத்தில் 99%. அறிவியலில் 97%. "அப்பா உன் மூஞ்சியில கரிய அள்ளிப் பூசிட்டேன்ல?" என்றான் சிரித்தபடி. "ஆமாடா" என்றேன். அஜிதன் சொன்னான்: "சும்மா ஜாலியாச் சொன்னேன்பா… உனக்காகத்தானே நான் படிச்சதே!"

(ஜெயமோகன் எழுதிய 'தேர்வு' கட்டுரையின் சுருக்கம் இது. அஜிதன் இப்போது உதவி இயக்குநர். 'ஓ காதல் கண்மணி'யில் பணியாற்றியிருக்கிறார். )

- ஜெயமோகன்,




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக