திங்கள், 20 ஏப்ரல், 2015

TRB PG TAMIL :இதோ ஒரு இலக்கியக் காதல்...


 

வள், அவனை நினைத்துக்கொண்டிருந்தாள். ஊரார் அவளை நினைத்து அவலை இடித்தார்கள். விதவிதமான வதந்திகள்.

அவற்றை எண்ணி அவள் மேலும் வருந்தினாள். 'அவன் என்னைத் திருமணம் செய்துகொண்டுவிட்டால், இந்த ஊர் இப்படிப் பேசுமா?' என்று ஏங்கினாள்.

ஆனால், திருமணம் என்பது அவளுடைய தீர்மானமா? அவன்தானே அதற்கு வழி செய்ய வேண்டும்?

காதலைக் களவு, கற்பு என்று இருவிதமாகப் பிரித்தது அன்றைய மரபு.

களவுக் காதல் என்றால், வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாகக் காதலிப்பது. கற்புக் காதல் என்றால், திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ்வது.

ஆக, களவுக் காதலில் த்ரில் அதிகம், மகிழ்ச்சி அதிகம், பொறுப்பு குறைவு. தினமும் சில மணி நேரம் சந்தித்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடலாம்.

ஆனால், எப்போதும் களவுக் காதலிலேயே குடியிருக்கக்கூடாது, ஒருகட்டத்தில் அது கற்புக் காதலாக மாற வேண்டும். குடும்பம் என்கிற பொறுப்பை ஏற்க வேண்டும்.

அதைத்தான் ஊர் வதந்தியாகப் பேசுகிறது. அவர்களுடைய நோக்கம் காதலைப் பிரிப்பது அல்ல, அதைக் கற்பு நெறிக்கு மாற்றுவது.

ஆனால், காதலர்களுக்கு அது புரியுமா? 'எங்களைப் பற்றி இவர்கள் தவறாகப் பேசுகிறார்களே' என்று கோபம்தான் வரும். 'இவர்கள் வாயை அடைப்பதற்காகவே நாங்கள் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து காட்டுவோம்' என்று நினைப்பார்கள்.

ஊராரின் நோக்கமும் அதுதான். காதலில் மயங்கிக் கிடப்பவர்களுக்கு இந்தப் பேச்சினால் ரோஷம் வந்தால் சந்தோஷம்தானே.

ஒரு பையன் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கிறான். 'எனக்கு ஏதாவது உதவி செய்யலாம்ல?' என்று கேட்கிறார் தாய்.

அவருடைய நோக்கம், உதவி பெறுவது மட்டுமல்ல. அவன் சோம்பேறி ஆகிவிடக்கூடாது என்பதும்தான்.

சில பையன்கள் உடனே எழுந்து உதவி செய்வார்கள். சில பையன்கள் ஏழெட்டு முறை சொல்லும்வரை சும்மா இருந்துவிட்டு, 'ஏன் இப்படி என்னைப் போட்டுப் படுத்தறே?' என்று எரிச்சல்படுவார்கள்.

அப்படி எரிச்சல்படும் பையன்கள், ஐந்து நிமிட வேலையை ஒரு நிமிடத்தில் செய்துவிடுவார்கள். அதன்மூலம், திட்டிய தாயின் மூக்கை உடைத்துவிட்டதாக அவர்களுடைய எண்ணம்.

உண்மையில், சும்மா இருந்தவனை அதிவேகமாக ஒரு வேலையைச் செய்யவைத்தது தாயின் வெற்றிதான். அந்தக் கோபமும் அவருடைய சாதனைதான்.

அதுபோல, பொறுப்புகள் இல்லாத களவுக் காதலில் மயங்கிக் கிடக்கிறவர்களைக் கற்பு நெறி பற்றி யோசிக்கவைப்பது ஊரின் வேலை. அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்.

குறிப்பாக, காதலியின் ஊரில் உள்ளவர்கள்தான் இப்படி அதிகம் பேசுவார்கள்.

காரணம், காதலன் இன்னோர் ஊருக்குச் சென்று காதலித்துவிட்டு வருகிறான். அவனுடைய ஊரில் உள்ளவர்களுக்கு அவன் போவதும் வருவதும் தெரியும், காதலிப்பது தெரியாது.

காதலியின் ஊர் அப்படியல்ல. அங்கே அவன் வருகிறான், அவளைச் சந்திப்பதற்காக ஓர் இடத்தில் நிற்கிறான். அவள் அங்கே வருகிறாள். அதைச் சிலர் பார்க்கிறார்கள். பலவிதமாகப் பேசுகிறார்கள். இதை 'அலர்' என்பார்கள்.

சில காதலிகள் இந்த அலரையே சாக்காக வைத்துக் காதலனைத் தூண்டிவிடுவார்கள். சில நேரங்களில் காதலையே தூண்டிவிடுவார்கள்.

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அதற்குக் காரணம் யார் என்று அவர்களுக்குள் செல்லச் சண்டை.

'உனக்கும் எனக்கும் காதல்ன்னு ஊரே பேசுது' என்கிறாள் அவள். 'இதையெல்லாம் நீதான் தூண்டிவிட்டிருக்கணும். உன் சிநேகிதங்ககிட்ட சொல்லி இப்படிப் பேசவெச்சது நீதானே?'

'சேச்சே' என்கிறான் அவன். 'எனக்கு உன்மேலதான் சந்தேகம், நீதான் உன் சிநேகிதிங்களை வெச்சு இந்த மாதிரி ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கணும்'.

'என்னது? வதந்தியா?' என்று கோபிக்கிறாள் அவள். 'அப்படீன்னா ஊர் சொல்றது பொய்யா?'

அவன் கவிதையாக பதில் சொல்கிறான். 'நீ வேறு, நான் வேறு, யார் சொன்னது?'

இந்த வரியை இருவிதமாகப் படிக்கலாம். 'நீ வேறு, நான் வேறு. இது புரியாமல் நமக்குள் காதல் என்று யார் சொன்னது?' என்பது ஓர் அர்த்தம். 'நீ வேறு, நான் வேறு என்று யார் சொன்னது? நாம் இருவரும் ஒருவர்தானே?' என்பது இன்னோர் அர்த்தம்.

 

சாமர்த்தியமான இந்த வரிகள், வைரமுத்து எழுதியவை -

'என்னோடு காதல் என்று பேசவைத்தது
நீயா? இல்லை நானா?'
'ஊரெங்கும் வதந்திக்காற்று வீசவைத்தது
நீயா? இல்லை நானா?'
'உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது!'
'நீ வேறு, நான் வேறு, யார் சொன்னது?'

இப்படி ஊரின் பேச்சைக் காரணமாகச் சொல்லிக் காதலைத் தூண்டலாம், கல்யாணப் பேச்சையும் தூண்டலாம். 'தினமும் வந்து என்கிட்ட பேசினா போதாது, எங்க அப்பாகிட்டயும் பேசு, என்னைப் பெண் கேளு' என்று சொல்லலாம்.

இதைத் தனியே சொல்ல வேண்டுமா? அவனுக்கே தெரியாதா?

அதுதான் பிரச்னை. அவன் அருகே இருக்கும்போது, அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள். அவனோடு சாதாரணமாகப் பேசுகிறாள், சிரிக்கிறாள்.

ஆனால், அவன் கிளம்பிச் சென்ற பிறகு, பிரிவால் வாடுகிறாள். ஊரார் பேச்சை எண்ணி வருந்துகிறாள், கோபிக்கிறாள். இவன் திருமணப் பேச்சை எடுப்பதற்குள் வேறு யாராவது தன்னைப் பெண் கேட்டு வந்துவிடுவார்களோ என்ற பதற்றமும் அவளுக்கு உண்டு.

இதெல்லாம் எப்போதும் ஆணுக்குப் புரியாது. அவனைப் பொறுத்தவரை அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள். அதைத்தான் அவன் பார்க்கிறான்.

அவனுக்கும் பிரிவுத் துயரம் உண்டு. ஆனால், சமூகம் சார்ந்த கட்டுப்பாடுகள் காதலிக்கு அதிகம். ஆகவே, அவளுக்குக் கவலைகளும் அதிகம். இதை அவனுக்குப் புரியவைக்க வேண்டிய பொறுப்பு அவளுடையதுதான், அல்லது தோழியுடையது.

பாரதியாரின் அற்புதமான பாடலொன்றில், தன் காதலனாகிய கண்ணனைப் பற்றித் தோழியிடம் பேசுகிறாள் காதலி -

கண்ணன் மனநிலையைத் தங்கமே, தங்கம்,
கண்டுவர வேணுமடி, தங்கமே, தங்கம்!

எண்ணம் உரைத்துவிடில், தங்கமே, தங்கம், பின்னர்
ஏதெனிலும் செய்வமடி, தங்கமே, தங்கம்!

காதலனிடம் சென்று தனக்காகப் பேசி வருமாறு தோழியை அனுப்புகிறாள் இந்தக் காதலி. அவனிடம் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று பட்டியல் போடுகிறாள் -

1. சொன்ன வார்த்தை மீறலாமா? அது அவனுக்கு அழகா?

2. என்னிடம் ஏதாவது பிழையா? அதையாவது சொல்லச்சொல்

3. என்னைப் பித்துப்பிடித்ததுபோல் செய்துவிட்டு, இப்படித் தலைமறைவாகத் திரியலாமா? அது அவனுக்கு அவமானமில்லையா?

4. அன்றைக்கு ஆற்றங்கரையில் என்னைத் தனியாக அழைத்துப் பேசியதையெல்லாம் மறந்துவிட்டானா? அதைப்பற்றி ஊர் முழுக்கச் சொல்லி அவனுடைய மானத்தை வாங்கிவிடுவேன் என்று சொல்லிவிட்டு வா!

சொன்ன மொழி தவறு மன்னவனுக்கே, எங்கும்
தோழமை இல்லையடி, தங்கமே, தங்கம்,
என்ன பிழைகள் இங்கு கண்டிருக்கிறான்? அவை
யாவும் தெளிவு பெறக் கேட்டுவிடடீ!

மையல் கொடுத்துவிட்டு, தங்கமே தங்கம், தலை
மறைந்து திரிபவர்க்கு மானமும் உண்டோ?

ஆற்றங்கரையதனில் முன்னம் ஒருநாள், எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசியதெல்லாம்,
தூற்றி நகர்முரசு சாற்றுவன் என்றே
சொல்லி வருவையடி, தங்கமே, தங்கம்!


இப்படி வீரமாகப் பேசிய அவள், மறுகணம் தன் நிலையை எண்ணி வருந்துகிறாள், அவன்மீது உள்ள காதலால் ஏங்குகிறாள் -

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால், மிகப்
பீழையிருக்குதடி, தங்கமே, தங்கம்,
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான், அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சையுள்ளமே!

நேரம் முழுவதிலும் அப் பாவி தன்னையே, உள்ளம்
நினைத்து மறுகுதடி, தங்கமே, தங்கம்,
தீர ஒரு சொல் இன்று கேட்டுவந்திட்டால், பின்பு
தெய்வம் இருக்குதடி, தங்கமே, தங்கம்!

இன்னொரு காதலன், தன் காதலியைப் பார்ப்பதற்காக வருகிறான். அவனிடம் கல்யாணப் பேச்சை எடுக்கிறாள் காதலி.

அவன் எரிச்சல்படுகிறான், 'எப்பப்பார் கல்யாணப் பேச்சுதானா?'

'என் பிரச்னை உனக்குப் புரியாது!' என்கிறாள் அவள்.

'உனக்கு மட்டும்தான் பிரச்னையா? எனக்கும்தான் பிரச்னை இருக்கு'.

'என்ன பிரச்னை?'

'இதோ, இப்ப உன்னைப் பார்க்க வர்றேனே, அந்த வழி எவ்ளோ ஆபத்தானது தெரியுமா? காட்டு வழியில கஷ்டப்பட்டு உன்னைப் பார்க்கதானே வந்திருக்கேன்?'

'அது எனக்குப் புரியுது. நீ எந்த ஆபத்தும் இல்லாம வரணுமேன்னு நான் தினமும் தெய்வத்தை வேண்டிகிட்டிருக்கேன். ஆனா, இப்படி எத்தனை நாள் பயந்துகிட்டே காதலிக்கறது? எப்போ எங்க அப்பாகிட்டே வந்து என்னைப் பொண்ணு கேட்கப்போறே?'

'வர்றேன், வர்றேன்' என்கிறான் அவன். அந்தப் பேச்சு அங்கேயே நிற்கிறது.

மறுநாள், காதலியிடம் தோழி பேசுகிறாள், 'என்ன ஆச்சு?'

'ம்ஹூம், நான் எவ்ளோ சொன்னாலும் புரிஞ்சுக்கமாட்டேங்கறான்!' என்கிறாள் அவள். அழகான குவளை மலர் போன்ற அவளுடைய கண்களில் இருந்து நீர் வடிகிறது. மூங்கில்போல் பருத்த தோள்கள் மெலிந்து கிடக்கின்றன. கையில் இருந்த வளையல் கழன்று விழுகிறது.

தோழி அவளை நெருங்கி அணைத்துச் சமாதானப்படுத்துகிறாள். 'ஊர் இப்படிப் பேசுதேன்னு அவனுக்குப் புரியமாட்டேங்குதே!'

'அவனோட ஊர், ஒரு மலைக் கிராமம். அங்கே வேட்டைக்குப் போனவங்க மாமிசத்தைக் கொண்டுவந்து வீட்டில கொடுப்பாங்க. அவங்களோட மனைவிங்க அதை வாங்கி, பல துண்டாச் செஞ்சு, எல்லாருக்கும் பகிர்ந்து தருவாங்க. இதை அவனும் பார்த்திருப்பான்தானே?'

'அதுபோல, நீங்களும் கணவன், மனைவியா ஒரு வீட்ல மகிழ்ச்சியா வாழணும், சம்பாதிச்சதைப் பகிர்ந்து கொடுத்து சந்தோஷப்படணும்ங்கற எண்ணமெல்லாம் உன்னை மாதிரி அவனுக்கும் இருக்கும்'.

'வெறும் எண்ணம் இருந்து என்ன பிரயோஜனம்? அதுக்கு என்ன செய்யணும்ன்னு யோசிக்கணுமே!'

'தினமும் அவன் உன்னைப் பார்க்க வர்றான். அந்தப் பாதை எப்படிப்பட்டது தெரியுமா?'

'அங்கே கொடூரமான காட்டுப் புலிங்க இருக்கு. யாராவது பக்கத்துல வந்தா அடிச்சுப்போட்டுடும்'.

'அதனால, யானைங்ககூட தங்களோட குட்டியை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போகாதபடி தடுத்து நிறுத்தும். அந்த அளவுக்கு ஆபத்தான, இருட்டான பாதையில அவன் தினமும் வர்றான். காரணம், உன்மேல இருக்கற ஆசைதான்'.

'இவ்ளோ சிரமப்படறதுக்கு, உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டான்னா, ஒரே வீட்ல மகிழ்ச்சியா வாழலாமே' என்கிறாள் தோழி. 'கவலைப்படாதே, அந்த நாள் சீக்கிரமா வரும்!'

நற்றிணையில், நல்விளக்கனார் என்ற புலவர் எழுதிய பாடல் இது -

ஆய்மலர் மழைக்கண் தெள்பனி உறைப்பவும்
வேய்மருள் பணைத்தோள் விறல் இழை நெகிழவும்
அம்பன் மூதூர் அரவம் ஆயினும்
குறிவரி இரும்புலி அஞ்சிக் குறுநடைக்
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும்
ஆரிருள் கடுகிய அஞ்சுவரு சிறுநெறி
வாரற்கதில்ல, தோழி, சாரல்
கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை
தேம்கமழ் கதுப்பின் கொடிச்சி மகிழ்ந்துகொடு
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும்
ஓங்குமலை நாடன், நின் நசையினானே!

கிராமத்திலும் இதே கதைதான். காதலன் திருமணப் பேச்சை எடுக்காமல் இருக்கிறான், காதலி அவனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறாள்.

ஒருநாள், அவன் அவளிடம் கேட்கிறான் -

அஞ்சுரூபா தாரேன்,
அரக்கு போட்ட சேலை தாரேன், உன்
ஆத்தாள் அறியாம நீ
வாக்கப்பட்டு வந்திரடி!

அவனுடைய ஆசை அவளுக்குப் புரிகிறது. ஆனால், அதற்கான முயற்சியை அவன் எடுக்க வேண்டும், முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள், அதை இப்படிச் சொல்கிறாள் -


அஞ்சுரூபா வேணாம்,
அரக்குபட்டுச் சேலை வேணாம்,
தட்டான் அறியாம, நீ
தாலி பண்ணி வந்திரடா!

இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது ஒருநாள், அவன் நிஜமாகவே பெண் கேட்டு வந்துவிடுகிறான். இந்தச் செய்தியைத் தாய் வந்து அவளிடம் சொல்கிறாள்.

அவளுக்கு ஒருபக்கம் ஆச்சர்யம், இன்னொருபக்கம் மகிழ்ச்சி. தாயைக் கட்டிக்கொண்டு வாழ்த்துகிறாள்.

பொதுவாகத் தாய்தான் மகளை வாழ்த்துவாள். ஆனால் இங்கே, மகள் தாயை வாழ்த்துகிறாள். 'அம்மா, உனக்கு இனிமே சோறே கிடையாது!'

'என்னடீ இப்படிச் சொல்றே?'

'ஆமாம்மா, இப்படி ஒரு நல்ல செய்தியைச் சொல்லியிருக்கியே, உனக்கு மூணு வேளையும் அமுதம்தான் சாப்பாடு!'

தாய் சிரிக்கிறாள். 'ஒரு சொட்டு அமுதம் சாப்பிட்டாலே போதும். எதுக்கு மூணு வேளையும்?'

'அமுதம் மாதிரி என் காதலன், அவனோட நான் சேர்ந்து வாழப்போறேன்னு சொன்னியே, அதுக்காக உனக்கு நாள் முழுக்க அமுதம் ஊட்டினாலும் தப்பில்லைம்மா' என்கிறாள் அவள்.

'அம்மா, என் காதலனோட மலை நாட்டுல, நிறைய பலா மரம் இருக்குமாம். அதில நல்ல சுவையான பழங்கள் தொங்குமாம்...'

'எப்படிப்பட்ட சுவை தெரியுமா? நாமே உழைச்சு, நாமே சம்பாதிச்சு, அந்தக் காசுல நாமே பொருள் வாங்கி, நாமே சமைச்சுச் சாப்பிட்டா அந்தச் சாப்பாடு எவ்ளோ சுவையா இருக்கும்! அந்த அளவு சுவையான பழங்கள் அவன் ஊர்ல இருக்குமாம்!'

'பழம் எப்படியோ, அந்தப் பயல் அந்த அளவு சுவையானவன்தான். அவனைக் கல்யாணம் செஞ்சுவைங்க, நாள் முழுக்க ருசிச்சுகிட்டுக் கிடக்கறேன்!'

குறுந்தொகையில் வெண்பூதன் எழுதிய பாடல் இது -

அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை,
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும்
தீம்பழம் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை 'வரும்' என்றோளே!


இந்த மகிழ்ச்சியை ஒரு திரைப்பாடலில் அழகாகப் பதிவு செய்கிறார் தாமரை -

இதுதானா, இதுதானா,
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா!
இவன்தானா, இவன்தானா,
மலர் சூட்டும் மணவாளன் இவன்தானா!

பகலிலும் நான் கண்ட
கனவுகள் நனவாக,
உனதானேன், நான் உனதானேன்!
திருமண நாள் எண்ணி
நகர்ந்திடும் என் நாட்கள்,
சுகமான ஒரு சுமையானேன்!

இதழ் பிரிக்காமல்,
குரல் எழுப்பாமல், நான்
எனக்கான ஒரு பாடல் பாடிக்கொண்டேன்!

பெண்ணின் குரலைப் பெண் பாடும்போது, இதுபோன்ற நியாயமான எதிர்பார்ப்புகளும் அதில் சேர்ந்துகொள்ளும் -

ஞாயிறு மதியம் சமையல் உனது,
விரும்பி நீ சமைத்திடுவாய்!
'வேடிக்கை பார்' என என்னை அமர்த்தி,
துணிகளும் துவைத்திடுவாய்!

இன்றைய காதலனுக்காவது இது புரிய வேண்டும். அதுவே என்றைக்கும் காதலிகளின் எதிர்பார்ப்பு!

                                                                 (தொடரும்)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக