செவ்வாய், 17 நவம்பர், 2015

துணைப் பேராசிரியருக்கான நெட் தகுதித் தேர்வு:வெற்றிக்கு வழி!


யு.ஜி.சி. ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் துணைப் பேராசிரியருக்கான நெட் தகுதித் தேர்வை நடத்திவருகிறது. இந்தத் தேர்வில் மூன்று தாள்கள் உள்ளன. அனைத்துமே சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அமைந்தவை.

அனைத்துப் பாடங்களுக்கும் பொதுவானதாக முதல் தாளும் குறிப்பிட்ட பாடத்தின் அடிப்படை அம்சங்களைப் பற்றியதாக இரண்டாம் தாளும் அப்பாடத்திலேயே இன்னும் நுட்பமான விவரங்களைப் பற்றியதாக மூன்றாம் தாளும் அமைந்துள்ளன. இரண்டாம் மற்றும் மூன்றாம் தாளுக்கான விஷயங்கள் யாவும் மாணவர்கள் இளங்கலையிலும் முதுகலையிலுமாக ஏறக்குறைய ஐந்தாண்டு காலம் படித்தவைதான். முதல் தாள் மட்டுமே பொதுவானதாகவும் பாடத்துக்கு வெளியே அமைந்ததாகவும் உள்ளது.

கல்வி பயிற்றும் முறை

பி.எட். அல்லது எம்.எட். படித்தவர்கள் தங்களது பாடநூல்களைத் திருப்பிப் பார்த்துக்கொண்டால் போதும். மற்றவர்கள் தமிழ்நாடுப் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் பயிற்சிக்கான பாடநூல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனத்தின் இணைய தளத்திலும் இந்த நூல்கள் உள்ளன.

எம்.பில். மற்றும் பி.எச்.டி. படித்தவர்கள் தமக்குப் பாடநூலாக உள்ள ஆய்வு முறையியல் நூல்களையே படித்துக்கொண்டால் போதும். முதுகலை மட்டும் பயின்றவர்கள் இப்பிரிவுக்குப் பல்கலைக்கழகங்களால் பரிந்துரைக்கப்படும் தரமான பாட நூல்களைப் படிப்பது கூடுதல் மதிப்பெண்ணுக்கு வழிவகுக்கும்.

முடிவெடுக்கும் திறன்

தர்க்கரீதியாகச் சிந்தித்து உடன் முடிவெடுக்கிற ஆற்றலைச் சோதிக்கும் விதமாக இந்தப் பிரிவில் கேள்விகள் அமைகின்றன. இதற்கு முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை மாதிரியாகக் கொண்டு ஆர்.எஸ். அகர்வால் எழுதிய 'ரீசனிங் ஆப்டியூட்' புத்தகத்தின் தேர்ந்தெடுத்த சில பகுதிகளை மட்டும் பயிற்சி செய்துகொண்டால் போதும்.

கேள்வித்தாளில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு பாராவைப் படித்துப் பார்த்து அதன் அடிப்படையில் கேட்கப்படும் ஐந்து கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். எளிமையான ஆங்கிலத்தில்தான் பெரும்பாலும் இந்த பாராக்கள் அமைகின்றன கேள்விகளும் நேரடியானதாகவே இருக்கின்றன.

இந்தியாவில் உள்ள முக்கியமான கல்வி நிறுவனங்கள், இந்திய அரசு கல்வித் துறையில் எடுத்துவரும் முக்கியமான நடவடிக்கைகள், கல்வித் துறை பற்றிய கமிட்டி அறிக்கைகள் பற்றிய விவரங்களை சேகரித்து வைப்பது உதவும்.

சுற்றுச்சூழல்

மற்றப் போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் தாங்கள் படிக்கும் சுற்றுச்சூழல் பற்றிய பாடநூல்களையே இப்பிரிவுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இளங்கலை மற்றும் முதுகலையில் சுற்றுச்சூழலை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்கள் அந்தப் பாடத்தையே ஒருமுறை நினைவுகூர்ந்தால் போதுமானது. இந்தப் பாடத்துக்கு யு.ஜி.சி. வெளியிட்டுள்ள பாடநூல் சிறப்பானது. அதே பாடத்திட்டத்தை ஒட்டி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் சுற்றுச்சூழல் அறிவியல் பாடநூல் ஒன்றைத் தமிழில் வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்படும் என்று யு.ஜி.சி. தனது பாடத்திட்டத்தில் குறிப்பிடவில்லை. என்றாலும் சமீபத்திய ஆண்டுகளில் ஐந்து அல்லது ஆறு கேள்விகள் இப்பிரிவிலிருந்து கேட்கப்படுகின்றன. இந்தப் பிரிவில் அரசியலமைப்பைப் பற்றிய அடிப்படையான புரிதலைச் சோதிக்கும் வகையில் கேள்விகள் அமைகின்றன. பொதுவாக இப்பிரிவில் கருத்துருக்கள் பற்றிய கேள்விகளே கேட்கப்படுகின்றன. அரசியல் சாசனத்தின் சட்டக்கூறுகளின் எண்களைக் கேட்பதில்லை. மற்ற போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்கள் அரசியலமைப்பு பற்றி படிக்கிற நூல்களையே இதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். சுபாஷ் கஷ்யப் எழுதிய 'நமது அரசியலமைப்பு' என்ற நூலை நேஷனல் புக் டிரஸ்ட் தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே வெளியிட்டுள்ளது.

கவனம்... கவனம்...

இந்தத் தேர்வில் 50 கேள்விகளுக்கு விடையளித்தாலே போதுமானது. ஒருவேளை நீங்கள் 60 கேள்விகளுக்கும் விடையளித்தால் முதல் 50 விடைகள் மட்டுமே மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.