ஞாயிறு, 1 நவம்பர், 2015

லா.ச.ரா என அறியப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்!


 

லா.ச.ரா. என அறியப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் 1916-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி பிறந்தார். இது அவரது நூற்றாண்டு. தமிழின் முன்னோடி எழுத்தாளரான அவர் மணிக்கொடி எழுத்தாளுமைகளுளின் இறுதிச் சுடராகவும் ஒளி வீசியவர். கதை சொல்லலில் புதிய நுட்பங்களைப் புகுத்தியவர். மனத்தின் அசாதாரணங் களைக் கவிதை மொழியில் புனைவாக ஆக்கியவர். 'அபிதா, 'புத்ர'. 'செளந்தர்ய' ஆகிய அவரது நாவல்கள் தமிழின் செவ்வியல் நாவல்களாகப் போற்றப்படுகின்றன. லா.ச.ரா.வின் எழுத்துகள் குறித்து ''The Incomparable Writer Ramamirtham' என்னும் பெயரில் ஆங்கிலத்தில் கட்டுரை நூல் வெளிவந்துள்ளது. பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் பெற்ற லா.ச.ரா.வின் முதல் சிறுகதை ஆங்கிலத்தில்தான் வெளிவந்தது. 'Babuji' என்னும் அந்தச் சிறுகதை 1934-ம் ஆண்டு 'Short story' என்னும் பத்திரிகையில் வெளிவந்தது. தனது பதினேழு வயதிலேயே எழுதத் தொடங்கிய லா.ச.ரா. எழுபத்தைந்து வருடங்கள் தொடர்ந்து எழுதிவந்தார். சிறுகதைத் தொகுப்புகள் பதினெட்டு, நாவல்கள் ஆறு , இளமை நினைவுகள் தொகுப்பு ஏழு எனத் தமிழ்ப் படைப்புலகக்கு வளம் சேர்த்துள்ளார். 'சிந்தாநதி' கட்டுரை தொகுப்புக்காக லா.ச.ரா.வுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கிக் கவுரவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக