வியாழன், 26 நவம்பர், 2015

பதின்பருவத்தினர் மதுபோதையால் ஈர்க்கப்பட குடும்பச் சூழலும், சினிமாவுமே காரணம்

பதின்பருவத்தினர் மதுபோதையால் ஈர்க்கப்பட குடும்பச் சூழலும், சினிமாவுமே காரணம் என உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் திருச்செங்கோடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயின்ற 4 மாணவிகள் மது அருந்திவிட்டு தேர்வு அறைக்கு வந்ததாக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கடந்த 21-ம் தேதி நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியின் உளவியல் துறைத் தலைவர் எஸ்.நம்பி 'தி இந்து'விடம் கூறும்போது, "இளம் பதின்ம வயதில் மதுபோதையால் ஈர்க்கப்படுபவர்கள் தங்கள் பெற்றோர் குறிப்பாக தந்தை மது அருந்துவதை நேரில் பார்த்திருப்பர். அதன் விளைவாக அவர்களுக்கு மது போதை மீதான ஆர்வமும், அதை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும்.

இதுதவிர திரைப்படங்களில் கட்டமைக்கப்படும் சில காட்சிகளும் மது அருந்துவதை ஊக்குவிப்பதாக உள்ளன. மகிழ்ச்சி, வெற்றியைக் கொண்டாடவும், துக்கத்தை மறக்கவும் மது அருந்துவதே தீர்வு என்பதுபோல் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. இவை பதின்பருவத்தினர் மனதில் ஆழமாகப் பதிகிறது.

சில வீடுகளில் தந்தை மகனை மதுக்கடைக்கு அனுப்பி மது வாங்கிவரச் சொல்லும் நிகழ்வுகள் நடக்கின்றன. இவ்வாறு செய்யும்போதும் அந்தக் குறிப்பிட்ட பதின்ம வயதுச் சிறுவனுக்கு மது மீது ஆர்வம் ஏற்படுகிறது.

இத்தகைய சூழல்களால் பதின்ம வயதினருக்கு மது மீது ஈடுபாடு ஏற்படுகிறது. அதன் விளைவாக வாய்ப்பு கிடைக்கும்போது மது அருந்துவதில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

பதின்ம வயதிலேயே மது போதைக்கு அறிமுகமாவதால் உளவியல், உடல் ரீதியாக கடும் விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரும். அதுமட்டுமல்லாமல், பள்ளி மாணவ, மாணவிகள் என்றால் அவர்கள் படிப்பும் பாதிக்கப்படும்." என்றார்.

சவீதா பல்கலைக்கழக உளவியல் துறைத் தலைவர் ஜி.எஸ்.சந்திரலேகா கூறும்போது, "குடும்பச் சூழலே பெரும்பாலும் பதின்ம வயதினர் மது போதை வழியில் செல்லத் தூண்டுகிறது. பெண் பிள்ளைகள் இத்தகைய செயலில் ஈடுபடும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினை இருமடங்காக இருக்கிறது" என்றார்.