சனி, 8 பிப்ரவரி, 2014

ஜாதி சான்றிதழை நிராகரித்த, வேலூர் மாவட்ட, ஆர்.டி.ஓ.,க்கு, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவுத் தொகை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர், டெல்லி. தன், இரு மகள்களுக்கும்,பழங்குடியின பிரிவான, "காட்டு நாயக்கன்' என, ஜாதி சான்றிதழ் தருமாறு கோரியுள்ளார்.அதற்கு தேவையான சான்றிதழ்களை, விண்ணப்பத்துடன் இணைத்துள்ளார். இதை பரிசீலித்த,ராணிப்பேட்டை, வருவாய் கோட்ட அதிகாரி (ஆர்.டி.ஓ.,), மனுதாரரின் கொள்ளு தாத்தா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறி, விண்ணப்பத்தை நிராகரித்தார்.ஆர்.டி.ஓ.,வின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், டெல்லி, மனுத் தாக்கல் செய்தார். மனுவை,நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், தேவதாஸ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.மனுதாரர் சார்பில், வக்கீல், எஸ்.துரைசாமி ஆஜரானார். "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் வைத்துள்ள, ஜாதி சான்றிதழ், ரத்து செய்யப்படவில்லை. அவரது உறவினர்களின் ஜாதி சான்றிதழும்,உரிய அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு விட்டன; அதுகுறித்து, எந்த சர்ச்சையும் இல்லை. எனவே, ராணிப்பேட்டை, ஆர்.டி.ஓ., பிறப்பித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. மூன்று நாட்களுக்குள், மனுதாரரின்
இரு குழந்தைகளுக்கும், பழங்குடியினருக்கான சான்றிதழை, வழங்க வேண்டும். நியாயமற்ற, ஆர்.டி.ஓ.,வின்செயலுக்காக, அவரிடம் இருந்து, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவுத் தொகை பெற,மனுதாரருக்கு உரிமை உள்ளது. எனவே, சொந்தப் பணத்தில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயை, மனுதாரருக்கு,ஆர்.டி.ஓ., வழங்க வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து, இம்மாதம், 10ம் தேதி, தெரிவிக்கவேண்டும். இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக