செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

குரூப் 4: கலந்தாய்வுக்கு மேலும் 228 விண்ணப்பதாரர்கள் 21–ந்தேதி கலந்தாய்விற்கு அழைப்பு

குரூப் 4:கலந்தாய்வுக்கு மேலும் 228 விண்ணப்பதாரர்கள் 21–ந்தேதி கலந்தாய்விற்கு அழைப்பு .பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் வகுப்பின்படியும் அப்போதுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 21ந்தேதி கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்–4 தட்டச்சர் பதவிக்காக எழுத்துத்தேர்வு 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் 7–ந்தேதி நடைபெற்றது. இதில் 431 காலி பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு 19 மற்றும் 20–ந்தேதிகளில் காலை 8.30 மணி முதல் சென்னை பிராட்வே அருகே உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
2–வது கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விரைவு தபால் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.

கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது மூலச் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பமிடப்பட்ட நகல்கள் இரண்டையும் கலந்தாய்வுக்கு வரும்போது தவறாமல் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
தமிழ் வழியில் படித்தவர்கள் மேலும் கணினிவழி விண்ணப்பத்தில் எஸ்.எஸ்.எல்.சி படிப்பை தமிழ் வழி மூலம் பயின்றுள்ளதாக உரிமை கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் அவர்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து எஸ்.எஸ்.எல்.சி தமிழ் வழி மூலம்தான் பயின்றுள்ளார் என சான்றிதழ் பெற்று கலந்தாய்வுக்கு வரும்போது கண்டிப்பாக எடுத்துவர வேண்டும். இச்சான்றிதழ், அவர் விண்ணப்பிக்கும் போது, தமிழ் வழியில் பயின்றார் என குறிப்பிட்டிருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

முதன்மைப் பட்டியலிலிருந்து தற்காலிகமாக தேர்ச்சி பெற்றுள்ள 431 விண்ணப்பதாரர்களில் எவரேனும் வருகிற 19 மற்றும் 20–ந் தேதிகளில் நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வருகை புரியாமை மற்றும் இப்பதவியில் சேர விருப்பமின்மை, ஏதாவது காரணங்களுக்காக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாமை போன்ற காரணங்களினால் ஏற்படும் காலிப் பணியிடங்களை மட்டுமே நிரப்ப தேர்வாணைய இணையதளத்தில் 228 விண்ணப்பதாரர்களது பதிவெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் வகுப்பின்படியும் அப்போதுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 21–ந்தேதி கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வுக்கு பரிசீலிக்கப்படும்போது உள்ள காலிப்பணியிடங்களை பொறுத்தே அனுமதிக்கப்படுவர். எனவே, கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.இந்த தகவலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீத கிருஷ்ணன், செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக