ஆசிரியர் தகுதி தேர்வு ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளினை சில உறுப்பினர்கள் இங்கே தெரிவித்தார்கள்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கையின்படி தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்கிடப் பரிசீலிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வின் தேர்ச்சி, இட ஒதுக்கீட்டை நிர்ணயிப்பதில்லை. ஆசிரியர்களை பணியிடங்களில் நியமிக்கும்போது தான் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. ஆசிரியர் நியமனத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படுகிறது என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனினும், இந்த அவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இனி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதாவது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள்.
இந்த சலுகை தற்போது ஆகஸ்டு 2013–ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்.
இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ நான் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக