தாய் மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும். எனவே குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
அன்னை தமிழ் கல்வி பணி அறக்கட்டளை, பல்லடம் தமிழ் சங்கம், தாய் அறக்கட்டளை ஆகியவை சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தாய் மொழி நாள் விழா நடந்தது. விழாவுக்கு பல்லடம் தமிழ் சங்க தலைவர் கன்ணையன் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் தாய் தமிழ் பள்ளி தாளாளர் வான்மதி வேலுச்சாமி வரவேற்று பேசினார். விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு 'வென்றாக வேண்டும் தமிழ்' என்ற பொருளில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழில் பெயர் சூட்டுங்கள் இந்தி, ஆங்கில மொழி படித்தால் பேரறிஞர்களாகி விடலாம். வேலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். தமிழில் படித்தால் மதிக்கக்கூட மாட்டார்கள் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விடுகிறார்கள். இது மன நோய்.பெரிய கொடுமை. பாட்டன், முப்பாட்டன் எல்லோரும் சங்கம் அமைத்து தமிழ்மொழி வளர்த்தார்கள். அந்த தாய்மொழி அழிந்தால், இனம் அழிந்து விடும். எழுத்து தமிழாக இருந்தாலும், உச்சரிக்கப்படுவது ஆங்கில மொழி. நாடு தமிழ்நாடு. ஆனால் தமிழ் இல்லை. நாட்டில் வாழாத தமிழ், மாநாட்டில் வாழ்ந்து விடுமா. உலகத்தில் எந்த மொழி படித்தாலும், நம் தாய்மொழி படிப்பது இனம் வாழ்வதற்கு.
. அரசு நிறுவனங்களில் கூட தமிழ் இல்லை. எல்லா கோவில்களிலும் தமிழில் வழிபாடு நடக்க வேண்டும். நாம் அனைவரும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்போம். வீட்டில் கூட ஆங்கில வார்த்தை உச்சரிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக